Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் ‘பிக் பிரேக்கிங்’ சேதி.

சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை.

மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், திருவாரூர் காமராஜ், நடிகர் செந்தில், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைகளைச் செய்து வந்த சஜீவன் வரை நீண்டன வருமானவரித்துறையின் சோதனைக் கரங்கள்.

யாருக்கும் சந்தேகங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வருமானவரித்துறை அதிகாரிகள் திருமண விழாவுக்குச் செல்வதுபோல், வாடகை காரில் சென்றுள்ளனர்.

இந்த சோதனைகளுக்கு இடையிலும் டிடிவி தினகரன் தன் வீட்டில் கோபூஜையில் நடத்தினார் என்பதுதான் ஹைலைட்டான செய்தி. அத்தனை இயல்பாக அல்லது இயல்பாக இருப்பதுபோல், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவராக பேசுவது டிடிவி தினகரனுக்கே உரிய அம்சம்.

ஒரே நேரத்தில் 187 இடங்கள், 215 சொத்துகள் மீது 1800 அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஜம்போ ரெய்டு. இந்த சோதனையை எல்லாம் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நேரத்திலேயே நடத்தியிருக்க வேண்டியது.

காலங்கடந்த சோதனையில் எதிர்பார்த்தது எதுவும் சிக்கப் போவதில்லை என்பது வருமானவரித் துறைக்கும் தெரியும். அவர்களை ஏவிய மத்திய பாஜக அரசுக்கும் தெரியும்.

பிறகு எதற்காக இதெல்லாம் என்கிறீர்களா?. இந்த ஜம்போ ரெய்டின் பின்னணியில் பல்வேறு யூகங்களை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர். அவை அனைத்தும் வெறுமனே யூகங்களாக மட்டுமே கடந்து விட முடியாது.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதில் தொடக்க முதலே டிடிவி தினகரன் தரப்பு காட்டி வரும் முனைப்பை பாஜக மேலிடம் கொஞ்சமும் ரசிக்கவில்லை. அரசியல் களத்தில் மன்னார்குடி கும்பல் இருக்கும் வரை அதிமுகவை முற்றாக அழிப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுதான் காவி கும்பல் போட்டு வைத்திருக்கும் கணக்கு.

டெல்லி மேலிடம் ஓபிஎஸ் மூலமாக கொடுத்த முக்கிய அஸைன்மென்டுகளில் ஒன்றுதான் சசிகலா தரப்பை கட்சியில் இரு ந்து ஓரங்கட்டுவதும். அதில் ஓரளவு பாஜக மேலிடம் வெற்றியும் பெற்றது.

எனினும், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து இரட்டை இலை சின்னம்தான் அதிமுகவின் முகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு கிடைக்க விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் டிடிவி தினகரன்.

இந்தப் பிரச்னையில் இருந்தும், அரசியல் களத்தில் இருந்தும் முற்றாக ஒதுங்கி விடுங்கள் என்பதை உணர்த்தவே இன்று நட ந்த ஜம்போ ஐடி ரெய்டின் மைய நோக்கம் என விவரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இன்னும் சில காரணங்களையும் அடுக்குகிறார்கள்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது சில வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும், அவை பத்திரமாக தங்களிடம் இருப்பதாகவும், தேவைப்படும்போது வெளியிடுவோம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் அடிக்கடி சொல்லி வந்தார். அந்த ஆதாரங்களை தேடும் நோக்கிலும் வருமானவரித்துறையை ஏவியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

டிடிவி தினகரனுடனும், அதே சமயம் டெல்லி மேலிடத்துடனும் தொடர்பில் இருந்து வரும் ஒரு முக்கியஸ்தர் மூலமாக தினகரனுக்குச் சில முக்கிய சேதிகள் சொல்லப்பட்டதாம். அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் உடனடியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்ல வேண்டும் என்பது அந்த சேதி.

இன்னும் ஓராண்டு காலத்திற்காவது இப்போதுள்ள எடப்பாடி அரசை கலைக்காமல் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும் என்றுதான் பாஜகவும் விரும்புகிறதாம். அதற்கு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தால்தான் சாத்தியம் என்கிறார்கள்.

அதற்குக் கைமாறாக, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பல் தொழில் செய்து கொள்ள வேண்டிய உதவிகள் செய்யப்படும்; வருமானவரித்துறை சோதனை உள்ளிட்ட எந்த ஒரு தொல்லையும் இருக்காது என்றும் சொல்லப்பட்டதாம்.

ஆனால், இதையெல்லாம் மன்னார்குடி கும்பல் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்கிறார்கள். போதாதற்கு, பணமதிப்பிழப்பு காரணமாக இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டிடிவி தினகரன் காட்டமான அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஏற்கனவே நேரம் பார்த்துக் கொண்டிருந்த பாஜக மேலிடம், தினகரன் போக்கு காட்டி வருவதை விரும்பாத உச்சக்கட்ட விரக்தியில்தான் இன்றைக்கு வருமானவரித்துறை மூலமாக மிரட்டிப் பார்க்கிறது என்றும் அரசியல் விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த சோதனையில் சொத்துகளோ, ஆவணங்களோ கிடைத்தால் ஆச்சு; கிடைக்காவிட்டாலும், மன்னார்குடி கும்பலுக்கு இத்தனை இடங்களில், பல்லாயிரம் கோடிக்கு சொத்துகள் குவிந்து கிடக்கின்றன என்பதை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் அவர்களில் மீது நிரந்தர வெறுப்பை ஏற்படுத்த முடியும். அதுவும் இந்த ரெய்டின் இன்னொரு முக்கிய அம்சம் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக பிளவுபட்ட நிலையிலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டால், அப்போதும் டிடிவி தினகரன் தரப்பு பெரிய அளவில் கெத்து காட்டும் என்பதும் மறுப்பதற்கில்லை.

அந்த இடைத்தேர்தலில், ஒருவேளை எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று தினகரன் தரப்பு தோற்றுப்போனாலும்கூட, இபிஎஸ்-ஓபிஎஸ் அணியைவிட கூடுதலான வாக்குகள் பெற நேர்ந்தாலும் ஆளும் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். அல்லது தினகரன் தரப்பு, மறைமுகமாக எதிர்க்கட்சிகளின் வெற்றிக்கு ஒத்துழைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற செயல்களை முடக்கவும் இந்த ரெய்டு உதவும் என்றும் யூகிக்கப்படுகிறது.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆரம்பத்தில் என்ன தொழில் செய்தார்கள்? மூலாதாரமாகப் பார்க்கப்படும் சசிகலா, வீடியோ கேசட் கடை வைத்திருந்தார். அவருடைய கணவர் நடராஜன் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அலுவலர். அப்படிப்பட்டவர்களால் பல்லாயிரம் கோடிகளை குவிக்க முடிந்தது எப்படி?

அதனால் என்னதான் இந்த ரெய்டின் பின்னால் அரசியல் உள்நோக்கம் என்ற முலாம் பூசப்பட்டாலும், மன்னார்குடி கும்பல் ஒன்றும் யோக்கியவான்கள் அல்லவே? இது, கருப்புப் பணத்தை மீட்பதற்கான மிகப்பெரிய நடவடிக்கை என பாஜக ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

அந்தக் கூற்றையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு நிகழ்வு எந்த காலக்கட்டத்தில் நடக்கிறது என்பதை பொறுத்தே அதன் பின்னணியும், விளைவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா வெறும் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டை 16 ஆயிரம் மடங்காக உயர்த்தியது எப்படி? இப்படி ஒரு சந்தேகம் எழுந்த உடனே அதைப்பற்றி விசாரிக்க இதுவரை வருமானவரித்துறை ஏன் ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை? இப்படிப்பட்ட நிலையில் பாஜக தன்னை ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியாக சொல்வதில் நியாயம் இல்லையே!

மத்தியில் ஆள்வது யாராக இருந்தாலும் வருமானவரித்துறை, சிபிஐ போன்ற ஏஜன்சிகள் மூலம் தங்களுக்கு படியாத மாநில அரசுகளை, சோதனை அல்லது விசாரணை என்ற பெயரில் மிரட்டிப் பணிய வைப்பது நடைமுறையில் இருந்து வருவதுதான். ஆனாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை அழித்தொழிக்கும் முகமாக பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறதோ என்ற அய்யமும் எழாமல் இல்லை.

மணல் மாஃபியா சேகர்ரெட்டி, அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தை வழிக்குக் கொண்டு வந்தனர்; பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை காலில் விழ வைத்தனர்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு என்று சொன்ன மறுநாளே சரத்குமார் வீட்டில் ரெய்டு நடத்தி, அவரை சர்வமும் அடக்கி வைக்கச் சொன்னார்கள். மெர்சல் படத்திற்கு ஆதரவாக, பாஜகவை விமர்சித்த அடுத்த நாளே நடிகர் விஷால் வீட்டில் ஜிஎஸ்டி வரி தொடர்பான சோதனை.

இவற்றை எல்லாம் வெறுமனே இயல்பான நடவடிக்கைகள் என்று எப்படி சொல்லிவிட முடியும்?.

மீண்டும் மீண்டும் தப்புக்கணக்குப் போடுகிறது பாஜக. மன்னார்குடி வகையறா இந்த சோதனைகளுக்கெல்லாம் அஞ்சக்கூடியவர்களா என்ன?

– பேனாக்காரன்.