சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்த அதேநாளில், அரசின் முதல் பணி நியமனமே ரத்து செய்யப்பட்ட விவகாரம், முதல்வர் விஜய்க்கு பக்கா ‘நோஸ்கட்’ என்கிற விமர்சனமும் கிளம்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் தனித்து வெற்றி பெற்றன.

தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தங்கள் வசமுள்ள 5 எம்எல்ஏக்களுடன் தவெக கூட்டணியில் இணைந்ததோடு, ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியது.
யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் உள்பட 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து மே 13ம் தேதி, சட்டமன்றத்தில் தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தியது.
எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 6 சுற்றுகளாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தவெகவுக்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்து, வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களில், ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஆளுங்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். மீதம் உள்ள 3 கோடியே 21 லட்சம் பேரும் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஆட்சியின் மேல் எங்களுக்கு மட்டுமின்றி, உங்களுக்கு வாக்களித்த மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர்,” என்று, இது ஒரு சிறுபான்மை அரசு என்பதை மறைமுகமாக விஜய்க்கு சூடு வைத்தார் உதயநிதி.

”பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அமமுக எம்எல்ஏவை, திருட்டுத்தனமாக இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்திருக்கிறீர்கள்,” என்று மற்றொரு ‘தூஸ்ரா’ பந்தை வீசினார் உதயநிதி. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ‘திருட்டுத்தனமாக’ என்ற சொல்லை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகக் கூறினார். பிறகு அந்த வார்த்தைக்குப் பதிலாக, ‘கட்சித் தலைவருக்கே தெரியாமல்’ ஆதரவு தர வைத்திருப்பதாக திருத்தம் செய்து கூறினார் எதிர்க்கட்சித் தலைவர்.
உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசுகையில், ”அதிமுக கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. பிளவுபட்ட ஒரு குரூப்பில் இருக்கக்கூடிய ஒரு தலைவரின் வீட்டுக்கு ஒரு புது சோஃபா செல்கிறது. அந்த சோஃபா பின்னாடியே புது முதலமைச்சரும் செல்கிறார். புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், ‘புஷ்பா’ படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள்,” என்று பகடி செய்தார்.
”நீங்கள் கூவத்தூரையும் மிஞ்சுகின்ற அளவுக்கு அடிக்கின்ற கூத்தைப் பார்க்கும்போது இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது போல் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள்,” என்று ஒரு பிடிபிடித்தார் எதிர்க்கட்சித் தலைவர்.
உதயநிதியின் பேச்சில் எள்ளலும், பகடியும், நக்கலும், சூடும் தெறித்து விழுந்தன. பழுத்த அனுபவசாலி போல இருந்த அவருடைய பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. உதயநிதி பேசியபோது முதல்வர் விஜய்யின் முகம் இறுக்கமாகவே காணப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் திமுக வெளிநடப்பு செய்தது. ஒருவேளை, வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தாலும், விஜய்யின் அரசுக்குப் பெரும்பான்மை கிடைத்து விடும். பிறகு, திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி என்பதுபோல் சித்தரிக்கப்பட்டு விடும் என்பதால் இந்த விவகாரத்தை கவனமாகக் கையாண்டார் உதயநிதி.
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”இங்கே குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ‘இங்கு முகம் மூடி யாரும் செல்ல வேண்டியதில்லை. அனைவருக்கும் வெளிப்படையான ஆட்சிதான் செய்வோம்,’ என்று முதல்வர் கூறினார். அப்படி இருக்கையில், முதல்வரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்குக் காரணம் குதிரை பேரம் என்றால் அதைவிட பெரிய தலைக்குனிவு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையில் எதுவும் கிடையாது.

அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என்று சொல்லும்போது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக உள்ள ரத்தன் பண்டிட் என்பவர் அரசு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அப்படி உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால், அவரை நீங்கள் பர்சனலாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் இளைஞர்களுக்கு என்ன மெசேஜ் சொல்ல வருகிறீர்கள் என்பதை நிச்சயம் தெளிவுபடுத்த வேண்டும்,” என்றார். பிரேமலதாவின் முதல் பேச்சே அதிரடி சரவெடியாக இருந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. முதல்வர் விஜய் முகம் மேலும் இறுக்கமானது.
பிரேமலதாவின் உரை, திமுகவின் தயாரிப்பாக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது. அதேநேரம், முதல்வரின் சில செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, ‘பர்சனலாக வெச்சிக்கிறது’ அவருக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று விஜய்க்கு எதிராக சமூக ஊடகங்களில் மீம்ஸ்களும் பறக்கத் தொடங்கின.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், தேமுதிக தலைவர் ஓரிரு கருத்துகளைத் தெரிவித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். ‘ஐ வில் ரீதிங் அபோட் இட்’ என்று பதில் அளித்தார். பொதுவாக சட்டமன்றத்தில் கூடுமான வரை பிறமொழி கலப்பின்றி பேசுவது மரபு. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மரபெல்லாம் உடைக்கப்பட்டு, ‘தங்லீஷ்’ மொழி வழக்கையே அக்கட்சி எம்எல்ஏக்கள் பயன்படுத்துகின்றனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியின் பேச்சு மிகவும் செறிவுடையதாக இருந்தது.

அரசவை ஜோதிடரின் வாக்கு பொய்த்துப் போனது குறித்து சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள் கதை மூலம் சுட்டிக்காட்டினார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை குறித்தும், அவர் ஒருபோதும் அரசு செயல்பாடுகளுக்குள் ஜோதிடரையோ, ஜோதிடத்தையோ திணிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியவர், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். அவருடைய பேச்சு நாகரிகமாகவும், அதேநேரம் நறுக்குத் தெறிக்கும் வகையிலும் அமைந்து இருந்தது.
முதல்வர் விஜய்யின் பதிலுரையில், முந்தைய அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்று குறிப்பிட்டார். மேலும் அவர், ‘இது குதிரை பேரம் நடத்தும் அரசு அல்ல; குதிரை வேகத்தில் செயல்படும் அரசு’ என்று வழக்கம்போல் சினிமா ‘பஞ்ச்’ வசனம்போல் பேசினார். ‘நாங்களே சொல்கிறோம்… இந்த அரசு சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்,’ என்றார் விஜய்.
கடந்த 2006&2011ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவருடைய ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா சொல்லி வந்தார். அதற்கு பதில் அளித்த கலைஞர் கருணாநிதி, ‘இது மைனாரிட்டி ஆட்சிதான். ஆம். மைனாரிட்டி சமூகத்தைப் பாதுகாக்கும் ஆட்சிதான்,’ என்றார். அப்போது கலைஞர் சொன்ன பதிலேயே இப்போது முதல்வர் விஜய்யும் கூறியுள்ளார்.
சட்டமன்றம் முடியும் வரை விஜய், ஏனோ ஒருவித இறுக்கமாகவே அமர்ந்து இருந்தார்.
ஜோதிடர் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்திற்கு வெளியே திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. ஜோதிடரின் பணி நியமனத்திற்கு எதிராக ஒருவர் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். எதிர்ப்புகள் வலுத்த நிலையில் மே 13ம் தேதி மாலையே, ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.
முதல் பணி நியமனமே ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் கோணல் முற்றிலும் கோணலாக அமைந்து விடுமோ என்ற சலசலப்புகளும் அரசியல் களத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
- பேனாக்காரன்
