
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்,. 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ., சிபிஎம்., விசிக, மதிமுக, தேமுதிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 23 கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கின. அதிமுக தலைமையில் பாமக, பாஜக, அமமுக, தமாகா, ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.
சீமானின் நாதக, நடிகர் விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) மற்றும் டாக்டர் ராமதாஸின் பாமகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4034 வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தனர். மொத்த வாக்காளர்கள் 5.73 கோடி பேர். இதில், 4 கோடியே 87 லட்சத்து 919 பேர் வாக்களித்தனர். முதன்முதலாக தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து வரலாற்றிச் சாதனை படைத்தது.
தேர்தல் முடிந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் தவெக முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தேர்தலில் பல்வேறு அதிர்ச்சியான முடிவுகள் வெளியாகின.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், யாரும் எதிர்பாராத வகையில் தவெக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இது, அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

அதிமுக தரப்பில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி, 148933 வாக்குகள் பெற்றார். அவர் 98110 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் காசி 44011 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் 50823 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். புதிய புயலாக தவெக உருவெடுத்த போதியிலும் அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் அக்கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தவெக எழுச்சியால் திமுக, அதிமுகவின் மூத்த தலைகள் உருண்டன. திமுகவின் முன்னோடிகளான மா.சுப்ரமணியம், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்தத் தேர்தலில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக கூட்டணி 53 இடங்களில் வென்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
திமுக, தனியாக 59 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதிமுக தனியாக 47 இடங்களை மட்டுமே வென்றதால் இந்தமுறை எதிர்க்கட்சி வாய்ப்பும் பறிபோனது.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றமாக அமைந்துள்ளது. எனினும், 108 தொகுதிகளைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக., ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக, 1967ல் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு வித்திட்டது. திமுக உடைந்து எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக உருவான பிறகு 1977 முதல் 1987 வரை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு, திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது.
கிட்டத்தட்ட 59 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சி தற்போது விஜய்யின் தவெகவால் முடிவுக்கு வந்துள்ளது. முதன்முதலாக கழகங்கள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும், கூட்டணியும் வெற்றி தொகுதிகள் எண்ணிக்கை விவரம்:
மொத்த தொகுதிகள் எண்ணிக்க: 234
தவெக 108
திமுக கூட்டணி 73
திமுக 59
ஐயுஎம்எல் 2
சிபிஐ 2
சிபிஎம் 2
விசிக 2
தேமுதிக 1
அதிமுக கூட்டணி 53
அதிமுக 47
பாமக 4
பாஜக 1
அமமுக 1
ஒவ்வொரு கட்சிகளும் தனித்துப் பெற்ற வாக்குகள் விவரம்:
தவெக 17226209 (34.92 சதவீதம்)
திமுக 11926144 (24.19 சதவீதம்)
அதிமுக 10462146 (21.21 சதவீதம்)
