தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று (மே 10, 2026) பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

நடிகர் விஜய், கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அரசியல் களத்தில் குதித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் பொதுக்கூட்டம், மாநாடுகள் நடத்தினாலும், செல்லும் இடங்களில் எல்லாம் விஜய்யைக் காண்பதற்காக ரசிகர்கள், இளைஞர்கள் திரண்டு வந்தனர்.
உச்சக்கட்டமாக கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில் நிறைமாதக் கர்ப்பிணிகள் இருவரின் வயிற்றில் இருந்த குழந்தைகளும் இறந்தன. இந்த சோக சம்பவத்திற்குப் பின்னிட்டும் கூட பெண்கள், இளைஞர்கள் மத்தியில் விஜய் மீதான மோகம் குறையாததைக் காண முடிந்தது.
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துக் களம் இறங்கியது. தமிழ்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் பரப்புரைக்குக் கூட செல்லவில்லை. வேட்பாளர்கள் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த விஜய், பிற கட்சிகளில் சீட் கிடைக்காமல் தவெகவில் இணைந்தவர்களுக்கு பொரி கடலைப் போல சீட்டுகளை அள்ளித் தந்தார்.
மற்றொருபுறம் திமுக, அதிமுக வழக்கமான தேர்தல் உத்திகளைக் கையாண்டன. தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரென்றே விஜய்க்கும் கூட தெரியாது. பெரும்பாலான வேட்பாளர்கள் தொகுதியில் பரப்புரைக்குக் கூடச் செல்லவில்லை. மக்களுக்கும் வேட்பாளர் முகத்தைப் பார்த்ததில்லை. அதேநேரம் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் வழியாக தவெக இளைஞர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். இந்தத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக.
எனினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் தவெகவுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமாக மாலை 6 மணிக்கு மேல் பரப்புரைக்குக்கூடச் செல்லாமல் வீட்டிற்குள் அடைந்துகொள்ளும் விஜய், இந்தமுறை ஆதரவு கேட்டு பல கட்சித் தலைவர்களையும், ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநர் மாளிகைக்கும் நேரம் காலம் பார்க்காமல் அலையாய் அலைந்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி தன் வசமுள்ள 5 எம்எல்ஏக்கலும் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தது. அதையடுத்து, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 பேரையும் கடந்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைப்பு விடுத்தார். அதன்படி விஜய், இன்று (மே 10) முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடந்தது.
ஆளுநர் அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் என்.ஆனந்த், £தவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஆளுநர் மற்றும் சக அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஆதவ் அர்ஜூனாவிடம் இருந்த செல்போனை வாங்கி அவரே செல்ஃபி எடுத்தார்.
தொடர்ந்து அவர், தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசாணையில் முதல் கையெழுத்திட்டார். அடுத்து, பெண்கள் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் அதிரடிப்படைத் திட்டம், போதைப்பொருள் தடுப்புப் படை திட்டம் ஆகிய கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
விழாவில் விஜய் பேசுகையில், ”பசி என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் இல்லை. இங்கிருக்கும் உங்களைப் போன்றவன் தான் நானும். தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது.
நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கொஞ்சம் அவகாசம் வேண்டும். நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பொறுப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதேபோல அவகாசம் கொடுக்க வேண்டும்.
ஒளிவுமறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன். ஆட்சிக்கு வந்துவிட்டோம். ஆட்டம் ஆட வேண்டும் என நினைத்து இருந்தால் அதை மனதில் இருந்து அழித்து விடுங்கள்,” என்றார்.
பதவியேற்பு விழாவிற்கு ராகுல்காந்தி மற்றும் ஆதரவு அளித்த கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா, திரையுலகப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.
உடைபட்ட மரபுகள்…
பதவியேற்பு விழாவில் முதன்முதலாக தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கம்போல் நாட்டுப்பண் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு திணித்தபோது தமிழக அரசு அதை ஏற்கவில்லை. ஆனால், விஜய் பதவியேற்பு விழாவில் எந்தவித சலசலப்புமின்றி வந்தே மாதரம் பாடப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அதன்பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சிகள் இருந்தபோதும் பதவியேற்பு விழாக்களில் தமிழர் மரபு மற்றும் அரசியலில் தூய்மையைக் குறிக்கும் வகையில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வந்து எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். இந்த நடைமுறை முதன்முதலாக இன்று மாறியது. விஜய், கோட் சூட் உடையணிந்து வந்து பதவியேற்றுக் கொண்டார்.
விஜய் உள்பட அனைவருமே ஆண்டவன் மீது சத்தியம் செய்து உறுதிமொழிந்தனர். கீர்த்தனா மட்டும் வழக்கமான உறுதிமொழியோடு, ‘தமிழ் வாழ்க’ என்று மொழிக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றார்.
விழாவில் பேசும்போது, சினிமாவில் வருவதுபோல குரலை ஏற்றி, இறக்கி ‘பஞ்ச்’ வசனங்களைப் பேசினார் விஜய். பதவியேற்பின்போதும் கூட, பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல குரலை உயர்த்திப் பேசினார்.
நிகழ்ச்சி வர்ணனையாளர் உள்பட விழா மரபுகளை மீறி தமிங்கிலத்தில் தாராளமாகப் பேசினர்.
பதவியேற்பு அரங்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் கிளம்பிய விஜய் முதல்வர் இருக்கையில் அமர்ந்து வழக்கமானப் பணிகளைக் கவனித்தார்.
வரும் 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முதல் நாள் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கிடையே, சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற கருப்பையா, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு நாளை (மே 11) அவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
- பேனாக்காரன்
