Wednesday, June 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முட்டாள் முதல்வனும் முட்டுக் கொடுக்கும் ரசிக குஞ்சுகளும்!

திருச்சியில் நடிகர் விஜய் பேசிய பேச்சு, முதலமைச்சர் ஆன பிறகும் சினிமா நடிகர் மனநிலையில் இருந்து பேசியதாக அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

தவெக தலைவர் நடிகர் ஜோசப் விஜய், மே 10ம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் / கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. ஒருவழியாக தட்டுத்தடுமாறி, பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து அக்கட்சி பெரும்பான்மையைப் பெற்றது.

நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் ஜோசப் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு ஜூன் 1ம் தேதி சென்று இருந்தார். புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், கட்சி சார்பில் வழங்கப்பட்ட கியூஆர் கோட் பாஸ் காண்பித்தால் மட்டுமே அனுமதி என்றும் கூறியிருந்தனர். எனினும், வழிநெடுகிலும் நடிகர் விஜய்யைக் காண்பதற்காக ஏராளமான ரசிகமணிகள் காத்திருந்தனர்.

விஜய் பேசுவதற்கு முன்பாக அமைச்சர்கள் ராஜ்மோகன், ‘குட்டிப்புலி’ ரமேஷ், வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் ‘அம்மா’ புகழ் பாடியதைவிட தவெக அமைச்சர்கள் விஜய்க்கு ஜலதோஷம் பிடிக்கும் புகழ் பாடினர்.

இதையடுத்து நடிகர் விஜய் பேசத் தொடங்கினார். ‘என் நெஞ்சில் குடியிருக்கும்…’ என்று வழக்கமான சொல்லாடலுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

”ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகல. ஆறு மாசம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் அரை மணி நேரம் கூட அமைதியாக இல்ல. கல்யாண வீட்டுல எல்லாம் புலம்புறாங்க.

இத்தன வருஷமா உங்கள ஏமாத்திக்கிட்டு இருந்த இந்த ரெண்டு பேரையும் புறந்தள்ளிட்டு, என்னை முதல் சேவகனாக்கி இருக்கீங்க. புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குகூட இந்தளவுக்கு வாக்கு சதவீதம் கிடைக்கலைனு சொன்னாங்க. அந்தளவுக்கு டிவிகேயை ஆதரிச்சிருக்கீங்க. நான் எம்ஜிஆரோடு கம்பேர் பண்ணல.

1977ல் நீங்க போடாத ஓட்டை 2026ல் எனக்கு போட்டிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் ஆதரிச்சிருந்தீங்கணா கொஞ்சம் நல்லாயிருந்திருக்கும். அடுத்து வரும் எல்லா தேர்தலிலும் உங்களோட முழு சப்போர்ட்டையும் என்னால வாங்க முடியும்கிற நம்பிக்கை என் மனசுல ஆழமாக பதிஞ்சிருக்கு.

யார் எந்த நிலைமைக்குப் போனாலும் கிண்டல், கேலி பேசுவது இருக்கத்தான் செய்யும். அப்படி பேசுபவர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்… தயவு செய்து பேசுங்க. நிப்பாட்டிடாதீங்க. பேசிக்கிட்டே இருங்க. நான் மக்களுக்கு தேவையான நல்லதை செஞ்சிக்கிட்டே இருப்பேன்.

நாம புதுசா சூட் போட்டுக்கிட்டு வர்றோம்ல. ஏன் நாமலாம் கோட் சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்யறவங்களும், ஆதிக்க சக்திகளும்தான் போடணுமா? நான் என்ன கலர் கலராவா போட்டுக்கிட்டு வர்றேன்? நம்ம எல்லோருடைய மனசு மாதிரியே பிளாக் அன் ஒயிட். எல்லாத்துலயும் பிளாக் அன் ஒயிட்டா இந்த விஜய் இருப்பான்னு காட்டறதுக்காகதான் அந்த கலர். அதில் இருக்கும் பிளாக் யாரைக் குறிக்கும்? எதைக் குறிக்கும்? என்பது உங்களுக்கே தெரியும். எல்லாத்துக்கும் இப்படி விளக்கம் சொல்லிக்கிட்டு ‘நச நச’னு பேசற டைப்பும் நான் கிடையாது.

உங்களுக்கு எதிரிகளே இல்லையானு கேட்டா அப்படி சொல்ல மாட்டேன். ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே. ஒண்ணு டிவிகே. இன்னொண்ணு டிஎம்கே. இதற்கு இடையில வேற யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. தேர்தலுக்கு முன்னாடியும் ‘அவர்களுக்கு’ ஒரு வேலையும் இல்ல. இப்போது சுத்தம். இந்த திமுகவும், ‘மற்றும் பலரும்’ ஒண்ணா சேர்ந்துக்கிட்டு விஜய்யோட ஆட்சி வந்துடக்கூடாதுனு கடைசி 5 நாளில் பண்ணுனாங்களே…. என்ன கூத்துங்குறீங்க? இப்படியெல்லாம் கூட நடக்குமோ?

ஆனா, ஃபியூச்சர் என்னவாக இருக்கும்னு சொல்றேன்,. உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த இந்த விஜய்யா? இல்ல… இந்த விஜய்யோட ஆட்சி அமைஞ்சிடக்கூடாதுனு தடுக்க நினைச்ச ஸ்டாலின் சாரா? அவ்வளவுதான். இதுக்கு நடுவுல வேற யாரும், எந்த அல்லு சில்லும் உள்ளே வந்து நம்மள தடுக்கிறதோ எதிர்க்கிறதோ எதாவது பண்ணுனாங்கனா நிர்வாகம் அதுக்கு பொறுப்பல்ல.

திமுக நம்மை தடுக்க தடுக்க… எதிர்க்க எதிர்க்க… நம்மை அவமானப் படுத்தப் படுத்த, அத்தனையும் நமக்கு நன்மையே.

நம்ம மக்களை, தற்குறி… தற்குறி… என்று சொல்கிறார்கள். அவர்கள்தான் உங்கள் அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிட்டாங்க. இன்னமும் ஆக்கப்போறாங்க. உண்மையைச் சொன்னால்தான் அந்தக் கூட்டத்திற்குப் புரியாதே.

இந்தக் கவர்ச்சியில் மயங்கி நமக்கு ஓட்டுப் போட்டுட்டாங்களாம். நான் என்ன… சரி விடுங்க. அவர்களுக்கு ஓட்டுப்போட்டா நல்லவங்களாம். நமக்கு ஓட்டுப் போட்டா தற்குறியாம். எனக்கு நல்லா வருது…. வேண்டாம்னு பார்க்கிறேன்.

அண்ணா ஆரம்பிச்ச கட்சியை அடிமைக் கூடாரமாக மாற்றிவிட்டனர். திமுக இப்படி ஆனதற்கு காரணம் உங்கள் குடும்பத்திற்குள்ளேயே போய் கேளுங்க என்கிறார்கள் தொண்டர்கள். நீங்க மக்களை தப்பா பேசினீர்கள் என்றால் இந்த விஜய் கேள்வி கேட்பான். தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதி இந்த விஜய்தான்,” என்றார் நடிகர் விஜய்.

சுமார் 20 நிமிடங்கள் பேசிய நடிகர் விஜய், திருச்சி மேடையை மற்றுமொரு கட்சிப் பரப்புரைக் களமாகக் கருதியே பேசினார். தேர்தலுக்கு முன்புதான் பிற கட்சிகளை விமர்சனம் செய்வார்கள். இப்போது ஜோசப் விஜய் முதல்வராகி விட்டார் என்பதையும் மறந்து, மீண்டும் திமுக, அதிமுகவை தாக்கி மூன்றாந்தர பேச்சாளர் போல பேசினார்.

முன்பு திமுகவை தீய சக்தி என்றும் அதிமுகவை மற்றும் பலர் என்றும் விமர்சித்த விஜய், இப்போது அக்கட்சிகளை தீர்ந்து போன கட்சி, தூர்ந்து போன கட்சி என்று வசை பாடினார். இதையும் எழுதி வைத்திருந்த தாளைப் பார்த்துதான் படித்தார்.

மேகதாதுவில் கர்நாடகா காங்கிரஸ் அரசு, அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வரத்து நின்று போய், பாலைவனமாகி விடும் என்றும் எல்லா அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய்யிடம் இருந்து அதுகுறித்து எந்த ஒரு பேச்சும் இல்லை.

வீடுகளில் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்லிவிட்டு, காலதாமதமான மின் கணக்கீடு செய்வதால் அந்தப் பலனும் யாருக்கும் கிடைக்கவில்லை.

கூட்டுறவு சங்கங்களில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் மட்டுமே தள்ளுபடி என்று உலகிலேயே இல்லாத சலுகைத் திட்டத்தை பெயரளவுக்கு அறிவித்ததால் விவசாயிகள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கான விளக்கமும் திருச்சிக் கூட்டத்தில் இல்லை.

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர்களைச் சந்தித்தபோது என்ன பேசினார் என்று தெரிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆர்வமாக எதிர்பார்த்தது. அதுகுறித்தும் திருச்சியில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை நடிகர் விஜய்.

நெல்லையில் ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி வீழ்த்திவிட்டுச் செல்கிறது; எப்போதும் இல்லாத அளவிற்கு பாலியல் பலாத்காரங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொலைகளும் அதிகரித்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் பேச மறந்துவிட்ட விஜய்யை விமர்சிக்காமல் என்ன செய்வது?

ஆனால், தற்குறி என்று விமர்சனம் செய்வதை மட்டும் மறக்காமல் கண்டித்திருக்கிறார் நடிகர் விஜய்.

மேகதாது பிரச்னை, மொழிக்கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பது யாருக்கும் தெரியாது. சினிமாவில் ரிஸ்க் ஆன காட்சிகளில் ஹீரோக்களுக்கு பதிலாக ‘டூப்’ நடிகர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் உலகத்தில் இல்லாத அதிசயமாக ஜோசப் விஜய் ரிஸ்க் ஆன கேள்விகளைச் சந்திக்க நேரிடும் என்பதாலேயே பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு ‘டூப்’ முதல்வரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஊடகங்களைக் கண்டு ஓடி ஒளியும் ஒருவரை, தற்குறி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

எம்ஜிஆரை விட அதிக வாக்கு சதவீதம் பெற்றதாக ஜல்லி அடித்துக் கொள்ளும் விஜய், எல்லா தேர்தல்களிலும் எம்ஜிஆர் தனிப்பெரும்பான்மை பெற்றார் என்பதை வசதியாக மறந்துவிட்டார். அல்லது அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தவர் அதை மறைத்துவிட்டார். இப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் தற்குறித்தனம்.

தனித்து 47 இடங்களையும், ஒரு கோடிக்கு மேல் வாக்குகளையும் பெற்ற, ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுகவை ‘மற்றும் பலர்’ என்று முதல்வரான பிறகும் சீண்டிக் கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் தற்குறித்தனம்.

கு.ப.கிருஷ்ணனை வாரியத் தலைவர் வாரியத் தலைவர் என மேடையில் குறிப்பிட்டார்களே தவிர, அவர் எந்த வாரியத்தின் தலைவர் என்பதைக் கூறவே இல்லை.

பதவியேற்ற முதல் நாளே சிங்கப்பெண் சிறப்புப்படையைத் தொடங்க கையெழுத்திட்ட நடிகர் விஜய், இன்னும் அத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவே இல்லை. அதற்குள்ளாகவே, சக இன்ஸ்பெக்டர் ஒருவரால் சிங்கப்பெண் படையில் உள்ள பெண் எஸ்ஐ ஒருவர் பாலியல் சீண்டலில் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் யாருக்கு அரணாக இருக்கப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ரசிக குஞ்சுகளின் விசில் சத்தத்தின் மயக்கத்தில் இருந்து இன்னும் தெளியவில்லை நடிகர் விஜய். உங்களை கோட் சூட் அணியக்கூடாது என்று யாரும் விமர்சித்ததாகத் தெரியவில்லை. பதவியேற்பு விழா முதல் தற்போது வரை உடை விவகாரத்தில் தமிழர் மரபை மீறுகிறார் என்பதுதான் விமர்சனமே. அதைத் தன் இஷ்டத்திற்கு திருச்சியில் திரித்துப் பேசுகிறார்.

மனிதர்களின் மனங்களைப் போலவே தானும் பிளாக் அன் ஒயிட் நிறத்தில் கோட் அணிவதாகச் சொல்கிறார். எல்லாவற்றிலும் நானும் பிளாக் அன் ஒயிட்டாக இருப்பேன் என்றவர், இதில் உள்ள பிளாக் நிறம் யாரைக் குறிக்கும்? எதைக் குறிக்கும்? உங்களுக்கே தெரியும் என்கிறார். பிளாக் நிறத்தின் குறியீடு என்ன என்று அணில் குஞ்சுகளுக்கு எப்படித் தெரியும்? சினிமா பஞ்ச் வசனம் போல் பேசுகிறார். அதற்கும் அணில் குஞ்சுகள் விசிலடித்துக் கைத்தட்டி ரசிக்கின்றன.

உண்மையில், ‘பிளாக்’ நிறம் என்பது, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக விஜய் செய்த ஷோஃபா செட் அரசியல்தான் என்பதை அவரே மறந்துவிட்டார்.

ஒரு மொழி அழிந்தால் அங்கே ஓர் இனம் அழிந்து விடும். தமிழ் மொழியைச் சிதைக்கும் நோக்கில், அரசு விழாக்கள், சட்டமன்றத்தில் தமிங்கிலத்தில் பேசுவது மரபை மீறிய செயல். எது ஒன்றும் உடைந்த பிறகு அதற்கு என்னதான் ஒட்டுப்போட்டாலும் உடைந்தது உடைந்ததுதான். இவை எல்லாம் விஜய்க்கு விசிலடிக்கும் அணில் குஞ்சுகளுக்குத் தெரியாது என்பதுதான் தேச நலன் விரும்பிகளின் ஆதங்கம்.

புரோ… வாட் ஈஸ் திஸ் புரோ?

  • பேனாக்காரன்

Leave a Reply