சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஒன்லைன்.
நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர்.
இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன்.
சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார்.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்) திடீரென்று பணியில் இருந்து விலக நேரிடுகிறது. அவரும் நாயகி பார்கவியும் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகின்றனர். மஞ்சிமா மோகன் அண்ணனாகவும் போலீஸ் அதிகாரியாகவும் வரும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் காதலர்கள் திருட்டுத்தனமாக பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர்.
இதற்கிடையே, சென்னைக்கு தப்பித்து வரும் டேனியல் பாலாஜிக்கு டப்பிங் கலைஞரான குழந்தைவேலு (சூரி) தனது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து உதவுகிறார். உதயநிதி ஓட்டிச்செல்லும் கார், டேனியல் பாலாஜி மீது மோதி விடுகிறது.
காயம் அடைந்த அவரை உதயநிதி, மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால், மருத்துவச் செலவுக்கான தொகை கையில் இல்லாததால் மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் இருவருமே ஓட்டம் பிடித்து விடுகின்றனர்.
இப்படி சூரியும், உதயநிதி ஸ்டாலினும் யதேச்சையாக வில்லனுக்கு உதவ நேரிடுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் பயங்கரவாதியின் கூட்டாளிகள் என்று காவல்துறை வழக்கம்போல் தப்புக்கணக்குப் போட்டு, அவர்களை கைது செய்கிறது. தீவிரவாத கும்பலோ, அவர்கள் காவல்துறையினரின் உளவாளிகளாக இருப்பார்களோ என்று சந்தேகிக்கிறது.
இப்படி இரண்டு தரப்பினரிடமும் சிக்கிக்கொண்டு அல்லல்படும் உதயநிதியும், சூரியும் அவர்களை வீழ்த்தி தப்பிப்பதை ஓரளவுக்கு நேர்த்தியான திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கவுரவ் நாராயணன். ‘மனிதன்’ படத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் படம் முக்கிய நகர்வாக இருக்கும்.
உதயநிதியின் பலம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு அவருக்கேற்ற பாத்திரத்தை நன்றாகவே வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அவருக்கான அறிமுகப் பாடலில்கூட, ‘ஆறடி இல்லை ஆத்திரம் இல்ல ஆயிரம் யானையின் பலமும் இல்ல…’ என்ற வரிகளைப் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனமான முடிவு.
படத்தின் ஆரம்பக் காட்சிகளே உயரமான மதில் சுவர், உத்தரபிரதேச சிறை எனக் காட்சிப்படுத்தும் கேமரா கோணங்கள், ஒரு திரில்லர் படத்திற்கான அனுபவத்தைத் தருகிறது. படம் நெடுகிலும் உதயநிதி ஓடிக்கொண்டே இருக்கிறார்.
எந்தெந்த இடத்தில் குளோஸ்-அப், ஏரியல் கோணங்கள் என்பதை அளவெடுத்து நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன். அவருடைய கேமரா, நாயகி மஞ்சிமாவை ரொம்பவே ரசித்திருக்கிறது என்பதையும் திரையில் காண முடிகிறது.
அதேபோல் டேனியல் பாலாஜி, சென்னைக்குள் நுழைந்ததும் சென்னை மைல் கல்லின் மீது ஒரு கருந்தேள் ஏறும் காட்சி போன்ற சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் இயக்குநரை தனித்துக் காட்டுகின்றன. பிரவீனின் எடிட்டிங்கும் கச்சிதம்.
நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட் பாட்டும் இடம் பெற்றுள்ளது. பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், ‘குலேபாவா…’ பாடல் வேண்டுமா?. பின்னணி இசை, பரபரப்பைக் கூட்டுகிறது.
கிரைம் திரில்லர் வகைப் படமா அல்லது காமெடி படமா என்ற குழப்பமும் ஏற்படுகிறது. ஜெட் வேகத்தில் நகரும் கதை அடுத்த காட்சியிலேயே காமெடிக்கு தடம் புரண்டு விடுகிறது. காமெடி, திரில்லர், ஆக்ஷன் என கலந்து கொடுத்திருப்பதாகக் கருதலாம்.
இந்தப் படத்திலும் சூரி, நாயகனின் நண்பராக வருகிறார். படத்தின் முதல் பாதியில் அவருடைய காமெடி காட்சிகளும் கலகலப்பூட்டுகின்றன. இரண்டாம் பாதியில் அந்தளவுக்கு காமெடி இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகளில் சூரி அசத்துகிறார்.
மஞ்சிமா மோகனுக்கு பெரிதாக வேலை இல்லை. நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா, பேருந்து ஓட்டுநராக நடித்திரு க்கிறார். சில காட்சிகளே என்றாலும், நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தன் குரூரத்தனத்தையும், கொலைவெறியையும் பார்வையிலேயே கடத்தி விடுகிறார் டேனியல் பாலாஜி. ஆனால், அவர் எதற்காக குண்டு வைக்கிறார்? அவருடைய கூட்டாளிகள் பற்றிய பின்னணி போன்ற விவரங்களை திரையில் இயக்குநர் சொல்ல மறந்தது ஏனோ? ஆர்.கே. சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் நியாயமான காரணங்கள் இல்லை.
இதுபோன்ற சின்னச்சின்ன குறைகளை சரி செய்திருந்தால் ‘நிச்சயமாக இப்படை வெல்லும்’ என காலரை தூக்கிவிட்டுச் சொல்லலாம்.
– வெண்திரையான்.