Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தேனீர்? தேநீர்? எது சரியானது?

கொரோனா ஊரடங்கில்
மேலும் சில தளர்வுகளை
வழங்கி, 34 வகையான
கடைகளைத் திறக்க
தமிழக அரசு திங்கள்கிழமை
(மே 11) முதல் அனுமதி
அளித்திருக்கிறது.
அவற்றுள் முக்கியமானது,
தேநீர் கடைகள் திறப்பு
குறித்தது. நோய்க்
கட்டுப்பாட்டு பகுதிகளைத்
தவிர மற்ற இடங்களில்
காலை 10 மணி முதல்
இரவு 7 மணி வரை
இயங்கலாம். ஆனால்,
கடைகளில் நின்று பருக
அனுமதி இல்லை.
பாத்திரத்தில் வாங்கிச்
செல்லலாம்.

ஒரு கோப்பை தேநீரை
ஒவ்வொரு மிடறாக
உறிஞ்சி உறிஞ்சி
பருகிக்கொண்டே
அரசியல் பேசுவது என்பது
தமிழர்களுக்கு எப்போதும்
அலாதியானது.

 

ஊரடங்கு தளர்வு குறித்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பிலும்
‘தேனீர்’ கடைகள் என்றே
சொல்லப்பட்டு இருக்கிறது.
இப்போதும் அச்சு ஊடகங்களில்
பிழை திருத்தம் பிரிவுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும்
பத்திரிகைகளில் தினத்தந்திக்கு
தனித்த இடம் உண்டு.
அந்த இதழிலும் கூட,
தேனீர் கடைகள் என்றே
குறிப்பிட்டுள்ளனர்.

தினகரன் நாளிதழ்,
இந்த வம்பே வேண்டாம் என்று
டீக்கடைகள் என்று தமிங்கிலத்தில்
அச்சிட்டு இருந்தது.
சரியான தமிழை
வாசகர்களிடம் கொண்டு
சேர்ப்பதில், தினமணியை
மிஞ்ச ஆளில்லை.
அவர்கள் தேனீர் விவகாரத்தை,
‘தேநீர்’ என்று மிகச்
சரியாகவே கையாண்டிருந்தனர்.

 

ஆங்கிலேயர்களிடம் இருந்து
கற்றுக்கொண்ட தேநீர்
அருந்தும் பழக்கம்
நம் வாழ்வில் இரண்டற
கலந்து விட்டது.
ஆயினும்,
தேனீர் என்பதா?
தேநீர் என்று எழுதுவதா?
என்பதில் இன்னும்
நம்மிடம் குழப்பம்
தீர்ந்தபாடில்லை.
எதுக்கப்பா இத்தனை
விவாதம் என
‘டீ’, டீக்கடை, டீஸ்டால்
என்று ஆங்கிலச் சொல்லை
எளிமையாக தமிழ்ப்பதமாக்கி
நேக்காக நகர்ந்து
விடுகிறார்கள் தமிழர்கள்.

நாம் அன்றாடம் பருகும்
தேநீரை தமிழில் எழுதும்போது
தேனீர் என்பதா? அல்லது
தேநீர் என்பதா? இரண்டு
சொல்லுக்கும் பொருள்
வேறுபாடு உள்ளதா
எனக் கேட்டால்,
பெரும் வேறுபாடு உண்டு
என்றுதான் சொல்வேன்.

 

தேனீர் என்பதை, தேன் + நீர் என பிரிக்கலாம். அதாவது தேன் கலந்த நீர் அல்லது தேன் போல சுவைக்கும் நீர் என பொருள் கொள்ளலாம்.

 

இப்படிதான் ஒருமுறை தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். விருந்தோம்பல் என்ற பெயரில், ஒரு சிறு குவளையில் தேநீர் கொடுத்தனர். ஒரு மிடறு உறிஞ்சினேன். அவ்வளவுதான்… தேன் குளத்தில் நாக்கை வைத்ததுபோல் உணர்வு வந்துவிட்டது எனக்கு. நண்பரின் பேச்சினில் தேன் சுவை இருக்கும் என்பதை அறிவேன். அதற்காக தேநீரில் எதற்கு அத்தனை கிலோ சர்க்கரையை அள்ளிக்கொட்டி தேனீராக்க வேண்டும்? நாள் முழுவதும் அந்த தித்திப்பு என் நாக்கை விட்டு அகலவில்லை என்றால் பாருங்களேன்.

 

இயற்கையிலேயே நம் உடலில் சர்க்கரை இருக்கிறது. உண்ணும் உணவுப்பொருள் அனைத்துமே சர்க்கரை வடிவத்தில்தான் உடலில் சேமிக்கப்படுகிறது. எனில், தேநீரில் சர்க்கரை சேர்ப்பது என்பது அதிகப்படியானது என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி டன் கணக்கில் சர்க்கரையை உடலில் தேக்கி வைப்பதால்தான், இன்று உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் தலைநகரமாக இந்தியா மாறி விட்டது வேறு கதை.

 

தேநீர் என்பதை, தே + நீர் என பிரித்துச் சொல்லலாம். அதாவது, தேயிலையில் இருந்து பெறப்படும் நீர் என பொருள் படும். காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுவதால்தான் காபியை, தமிழில் கலைச்சொல்லாக கொட்டை வடிநீர் என்கிறோம். எனில், தேயிலையில் இருந்து பெறப்படும் நீரை, தேநீர் என்பதுதானே சரியாக இருக்கும் என்று இதற்கு மேலும் நீட்டி முழங்கிட தேவை இருக்காது.

 

‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என்பது வள்ளுவன் வாக்கு. தேநீர் என நல்ல தமிழ்ச்சொல் இருக்க, எதற்காக டீக்கடை, டீஸ்டால் எனச் சொல்லவும் வேண்டாம். தேனீர் கடை என பிழைபட எழுதுவதையும் தவிர்த்தல் நலம். தமிழ் மொழி, இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அதன் பேச்சு வடிவம் அழுத்தமாக இருப்பதுதான் காரணம். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், தனித்தமிழை உலகெங்கும் நிலைக்கச் செய்திட வேண்டும்.

 

– செங்கழுநீர்