Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

 

சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது.

பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வயது வரையிலும் இந்தச் சலுகை தொடரும்.

இந்தக் காப்பகங்கள் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகளுடன் இணைந்தே செயல்படுகின்றன. இதற்கென ஆசிரியர்கள், பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச்சென்று, மீண்டும் அழைத்து வர உடனாள்கள், ஆயாக்கள், சமையலர்கள், இரவுக்காவலர், துப்புரவு பணியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் என ஒவ்வொரு காப்பகத்திலும் குறைந்தபட்சம் 10 – 12 ஊழியர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் நடைமுறையில் துப்புரவு தொழிலாளர்கள், இரவுக்காவலர், எழுத்தர் போன்ற பணியிடங்கள் வழக்கம்போல் காலியாகவே இருக்கின்றன.

சரி. பிரதான செய்திக்கு வருவோம்.

சேலம் அய்யந்திருமாளிகை, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் தலா இருவர் வீதம் மொத்தம் 4 பெண்கள் சமையலர் பணிக்குக் கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். அய்யந்திருமாளிகை காப்பகத்தில் 65 பெண் பிள்ளைகளும், பெத்தநாயக்கன்பாளையம் காப்பகத்தில் 100 பெண் பிள்ளைகளும் தங்கி படித்து வருகின்றனர்.

தினமும் காலை, மதியம் ஆகிய இருவேளைக்கும் தேவையான உணவை சமைத்து வைத்துவிட்டு, சமையலர்கள் வீட்டுக்குச் சென்று விடலாம். பிறகு இரவு உணவுக்கான வேலையை மாலை 3 மணியளவில் ஆரம்பித்துவிட வேண்டும். இதற்காக அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.414 கூலி வழங்கப்படுகிறது.

ஓர் உடலுழைப்புத் தொழிலாளருக்கு வழங்கப்படும் கூலியானது எப்படி இருக்க வேண்டும் என்று, குறைந்தபட்ச ஊதியச்சட்டம் – 1948 சில வரையறைகளை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆரோக்கியமான உணவு, குடியிருப்பு வசதி, கல்வி, மருத்துவம், குடிநீர், துப்புரவு போன்ற அம்சங்களை சரிக்கட்டுவதாக இருக்க வேண் டும் என்கிறது.

கூலி நிலுவை தொடர்பாக முன்னாள் ஆட்சியர் சம்பத்திடம் கடந்த ஜூலை மாதம் கொடுக்கப்பட்ட மனு.

அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சமையலர்களுக்கு வழங்கப்படும் கூலி, போதுமானதா என்றால் நிச்சயமாக கிடையாது. எனினும், ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச கூலியையாவது குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டுமே. இங்குதான் சேலம் மாவட்ட நிர்வாகமும், சமூக நலத்துறை / சமூக பாதுகாப்புத்துறையும் தவறி விடுகிறது.

மாதாமாதம் 31ம் தேதியன்று கிடைக்க வேண்டிய சம்பளம், நான்கு நாள்கள் தாமதம் ஆனாலே குய்யோமுறையோ என்று அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்குக்கூட சென்று விடுகின்றனர். ஆனால், 414 ரூபாய் கூலி பெறும் சமையலர்களுக்கு 14 மாதங்களாக கூலியே வழங்காமல் வேலையை மட்டும் வாங்கிக் கொள்வது என்பது அவர்களின் குருதியை உறிஞ்சுவது போலாகாதா?

நம்ம ஊர்களில் பாதிக்கப்பட்ட வர்க்கம் எப்போதுதான் முன்வந்து பேசியிருக்கிறார்கள் இப்போது மட்டும் பேச? அதனால்தான், இப்பிரச்னை குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் நம் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

ராஜலிங்கம்

”சமையலர்களுக்கு 14 மாதங்களாக கூலி வழங்காததால் அவர்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிதான் குடும்பம் நடத்துகின்றனர். இந்தப் பெண்களின் கணவர்கள் சிலர் கூலி வேலைக்குச் செல்கின்றனர். சிலருக்கு வேலை இல்லை. இந்த நிலையில் வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்பு, மருத்துவச் செலவு, சாப்பாடு என பல பொறுப்புகளையும், பிரச்னைகளையும் வருமானமே இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும்?

இதனால்தான் அவர்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். சமையலர்களுக்கு கூலி வழங்காதது குறித்து ஏற்கனவே முன்னாள் ஆட்சியர் சம்பத்திடம் புகார் மனு அளித்திருக்கிறோம். பலமுறை காப்பக மேற்பார்வையாளர்களிடமும் சொல்லி இருக்கிறோம்.

முன்னாள் ஆட்சியர் சம்பத்

இந்த மாதம் கிடைத்துவிடும், அடுத்த மாதம் கிடைத்துவிடும் என்கிறார்களே தவிர, 14 மாதமாக கூலியே இல்லாமல் இழுத்தடித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்,” என்றார் ராஜலிங்கம்.

பெயர், முகம் வெளியிட விரும்பாத ஒரு பெண் சமையலர், 14 மாதமாக கூலி கிடைக்காததால், கந்துவட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும், அதற்காக மாதந்தோறும் ரூ.3000 வட்டி செலுத்துவதாகவும், வீட்டு வாடகை ரூ.3000 செலுத்துவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் 30ம் தேதி ஆகிவிட்டாலே கடன்காரரும், வீட்டு உரிமையாளரும்தான் தன் கண் முன்னால் நிழலாடிக் கொண்டே இருப்பார்கள் என்று கண்ணீருடன் கூறினார். இந்த நிலையில் தன் மகள்களை படிக்க வைப்பதே சிரமமாக இருப்பதாகவும் கூறினார்.

ஆட்சியர் ரோகிணி

இதுபற்றி நாம், சமூக பாதுகாப்புத் துறையின் மாநில ஆணையர் லால்வேனாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 14 மாதமாக சம்பளம் வழங்கப்படாதைக் கேட்டு அவரும் ஆச்சர்யம் அடைந்தார். உங்கள் புகாரின்பேரில் மாவட்ட ஆட்சியர் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளாரா என்றும் கேட்டார். முன்பிருந்த ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றோம். இதையடுத்து அவர், இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமை குறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால்தான் இசக்கிமுத்துவின் குடும்பமே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது. இப்பிரச்னையில், சேலம் மாவட்ட நிர்வாகமும் அலட்சியம் காட்டி, நெல்லை சம்பவம் சேலத்திலும் நிகழ்ந்துவிடாதபடி காக்க வேண்டியது அவசியம்.

ஆட்சியர் ரோகிணி நடவடிக்கை எடுப்பாரா?

பாதிக்கப்பட்டவர்களுடன் பேச: 9442970056.

– பேனாக்காரன்.