Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர்.

சிறுமிகள் பலி:

சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்தாள். சடலங்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமிகளுள் ஒருவரின் தாயாருக்கு, அதிர்ச்சியில் திடீரென்று வலிப்பு வந்தது. அவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அலட்சியமே காரணம்:

மின் இணைப்புப் பெட்டியில் மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்து அந்தப் பகுதி மக்கள் ஏற்கனவே மின்வாரியத்திடம் பலமுறை புகார் மனுவாகவும், வாய்மொழியாகவும் தகவல் சொல்லியும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தினால் இப்போது இரண்டு சிறுமிகள் அநியாயமாக பலியானதாகச் சொல்லி அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

மகள்களின் சடலங்களைப் பார்த்து அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த நிகழ்வால் அந்தப்பகுதியில் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

 

பிரச்னைக்குரிய அந்த மின் இணைப்புப் பெட்டி, குழந்தைகளின் கைக்கு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அந்த ஒரு பெட்டியில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

மின் இணைப்புப் பெட்டி அபாயகரமாக திறந்து கிடப்பது குறித்தும், மின்கம்பிகளை பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஏற்கனவே அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். அதற்கும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்களின் தொடர் அலட்சியம் காரணமாகவே இன்று இரண்டு குழந்தைகளை கொடுங்கையூர் மக்கள் பலி கொடுத்துள்ளனர்.

பிரச்னைக்குரிய பகுதியில் மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அங்கு, அறுந்து கிடந்த மின்கம்பிகள் சரிசெய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, ”சிறுமிகள் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட கு டும்பங்களுக்கு முதல்வருடன் பேசி உரிய இழப்பீடும் வழங்கப்படும்,” என்றார்.

8 பேர் பணியிடைநீக்கம்:

இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்திய வியாசர்பாடி மின்வாரியம், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் என மூன்று அதிகாரிகள் உள்பட 8 ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இழப்பீடு:

சிறுமிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு, தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.