Monday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த நிமிடத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இந்த தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ., சிபிஎம்., மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 25 கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதிமுக தலைமையில் பாஜக., அமமுக, தமாகா., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த இரு கூட்டணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி, புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக., ஆகிய கட்சிகளும் தேர்தல் களம் கண்டன.

மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், டாக்டர் ராமதாஸின் அணி கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கணிசமான தொகுதிகளில் தனித்துக் களம் கண்டது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப். 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 28030658 பேர் ஆண் வாக்காளர்கள். 29304905 பேர் பெண் வாக்காளர்கள். 7728 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில், இளைஞர்கள் பெருமளவு வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். குறிப்பாக, இளம்பெண்கள் ரொம்பவே உற்சாகமாக வந்து வாக்களித்தனர்.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வசதியாக அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சில இடங்களில் சின்னச்சின்ன ரகளைகள் நடந்தபோதும், மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மூடி, சீல் வைத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தேர்தலில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 85.14 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். தேர்தல் ஆணையம் ஏப். 25ம் தேதி வெளியிட்ட இறுதிக்கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அபரிமிதமாக வாக்குப்பதிவு நடந்ததாக அரசியல் களத்தில் பரபரப்பு பேச்சுகள் கிளம்பின.

இது தொடர்பாக அரசியல் வல்லுநர்களிடம் கேட்டபோது, ”தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளால் (எஸ்ஐஆர்) இறந்தவர்கள், இடம் மாறிச்சென்றவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்மூலம் ஏற்கனவே பட்டியலில் இருந்த வாக்காளர்களில் 12 சதவீதம் பேர் குறைக்கப்பட்டது.

இதன்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே கடந்த தேர்தல்களில் வாக்களித்த அதே எண்ணிக்கையிலான வாக்காளர்களே இந்தமுறையும் வாக்களித்து இருந்தால் வாக்குப்பதிவு தானாகவே உயர்ந்து விடும்.

சான்றாக, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 100 என வைத்துக் கொள்வோம். இவர்களில் 70 பேர் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கின்றனர் எனக் கொண்டால், 70 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள் என்று பொருள்.

தற்போது, எஸ்ஐஆர் பணிகளால் மொத்தமுள்ள 100 வாக்காளர்களில் 10 பேர் நீக்கப்பட்டு விட்டால், 90 வாக்காளர்களாக குறைந்து விடுவார்கள். இவர்களில் முந்தைய தேர்தலைப் போலவே 70 வாக்காளர்கள் இந்தத் தேர்தலிலும் வாக்களித்து இருந்தார்கள் எனில் வாக்குப்பதிவு விகிதம் 77.77 ஆக உயர்ந்துவிடும். இதுதான் இந்தத் தேர்தலில் நடந்தது.

கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிட்டால் நடப்பு தேர்தலில் 15 லட்சம் முதல் 25 லட்சம் (4 லட்சம் தபால் வாக்குகளையும் உள்ளடக்கியது) வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்து உள்ளனர். இது, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏற்படக்கூடிய வழக்கமான உயர்வுதான். விஜய் வருகையால் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருப்பது புதிய எழுச்சிதான்,” என்றார்கள் தேர்தல் வல்லுநர்கள்.

சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு:

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வாக்குப்பதிவுக்காக 3469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விகிதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

காலை 7 முதல் 9 மணி வரை 19.96 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு அடுத்த இரண்டே மணி நேரத்தில் (11 மணி) 40.60 சதவீதமாக உயர்ந்தது. இதே வேகத்தில் சென்றால் 95 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சேலம் மாவட்டத்தில் 1382049 ஆண் வாக்காளர்கள், 1397983 பெண் வாக்காளர்கள், 324 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2780356 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் பதிவான வாக்குப்பதிவு விகிதம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் வாக்குப்பதிவு நாளன்று இரவு அறிவித்தார். சேலம் மாவட்டத்தில் 90.75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார்.

தமிழக அளவில் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் மிக அதிகபட்சமாக 93.43 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 92.09 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது, முந்தைய தேர்தலைக் காட்டிலும் 6.45 சதவீதம் அதிகம்.

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:

கெங்கவல்லி 88.78, ஆத்தூர் 90.18, ஏற்காடு 92, ஓமலூர் 90.91, மேட்டூர் 89.20, எடப்பாடி 92.08, சங்ககிரி 92.54, சேலம் மேற்கு 90.06, சேலம் வடக்கு 87.42, சேலம் தெற்கு 91.02, வீரபாண்டி 93.36 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிட்ட சேலம் வடக்குத் தொகுதியில், மற்ற தொகுதிகளை விட சற்று குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply