Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா

திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.

பாலா வரைந்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம்.

அந்தக் கட்டுரையில், ”கந்து வட்டி கும்பலைவிட புகார் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், இரு குழந்தைகளின் தகப்பனாக வயிறு எரிந்து சொல்கிறேன். பற்றிய நெருப்பு உங்களை தலைமுறையாக விடாது. மனசும் உடம்பும் எரியுது பாவிகளா,” என்றும் காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை சித்தரிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முழு நிர்வாணமாக தங்களது ஆணுறுப்பை மட்டும் பணக்கட்டினால் மறைத்துக் கொண்டு நிற்பது போலவும், அவர்களின் முன்னால் ஒரு பச்சிளம் குழந்தை தீயில் எரிந்து கொண்டு இருப்பது போலவும் கார்ட்டூன் வெளியிட்டு இருந்தார்.

காண்போரை பதற வைக்கும் விதமாக அமைந்து இருந்த அந்த கார்ட்டூன் அப்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல்துறையில் புகார் அளித்தார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி

இதையடுத்து, சாதாரண உடையில் சென்னை கோவூருக்கு இன்று வந்த காவல்துறையினர் நான்கு பேர், கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். அவரை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றனர். விசாரணைக்காக அவரை திருநெல்வேலிக்குக் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊடக சுதந்திரமும், ஊடகத்தினர் மீதான பாதுகாப்பும் மறுக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது ஊடகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட பாலா, பிரபலமான ஒரு வார இதழில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ட்டூனிஸ்டாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.