Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

ராஜ்கோட்டில் இன்று (நவம்பர் 4, 2017) நடந்த இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் கோலின் முன்ரோ சதம் அடித்து சாதனை படைத்தார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது. அதனால் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்தும் களமிறங்கின.

அதிரடி தொடக்கம்:

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முதலாக வாய்ப்பு பெற்றார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டாம் லேதம் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கிளைன் பிலிப்ஸ், மில்னே வாய்ப்பு பெற்றனர்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் குப்தில், கோலின் முன்ரோ ஆகியோர் அபாரமாக ஆடினர். குப்தில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலின் முன்ரோ சதம்:

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் தன் பங்குக்கு 12 ரன்கள் எடுத்து, ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற ஆல் ரவுண்டர் முன்ரோ அபாரமாக ஆடி சதம் அடித்தார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் முன்ரோ அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும்.

அவருக்கு பக்கபலமாக டாம் புரூஸ் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. முன்ரோ 109 ரன்களுடனும், டாம் புரூஸ் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போல்ட் அபாரம்:

இதையடுத்து, 197 ரன்கள் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியில் பட்டையைக் கிளப்பிய இந்திய தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், ரோஹித் ஷர்மாவும் இன்றைய ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தனர்.

ரோஹித் ஷர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வீழ்த்தினார்.

கோஹ்லி அரை சதம்:

அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் கேப்டன் விராட் கோஹ்லியும், ஸ்ரேயாஸ் அய்யரும் நிதானமாகவும், அதேநேரம் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு விரட்டியும் ரன்களை சேகரித்தனர். அபாரமாக ஆடிய விராட் கோஹ்லி அரை சதம் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்கு டோனி களம் புகுந்தார். அவர் நிதானமாக ஆடினாலும் கோஹ்லியின் ஆட்டத்தில் அனல் பற ந்தது. எதிர்பாராத விதமாக, சான்ட்னர் பந்து வீச்சில் கோஹ்லி 65 ரன்களில் (42) ஆட்டமிழந்தார். இந்திய அணி, ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க இழக்க, மற்றொருபுறம் வெற்றிக்கான ரன் ரேட்டும் எகிறிக் கொண்டே இருந்தது.

நியூஸிலாந்து வெற்றி:

அதன்பிறகு வந்த இந்திய வீரர்கள் எவருமே நிலைத்து நின்று ஆடவில்லை. கடைசி வரை போராடிய டோனி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் நியூஸிலாந்து, இந்திய அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டமிழக்காமல் 109 ரன்களும், ஒரு விக்கெட்டும் வீழ்த்திய கோலின் முன்ரோ ஆட்ட நாயகன் விருது பெற்றார். இன்றைய ஆட்டத்தை வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் டி-20 தொடரில் இரு அணிகளும் 1-1 சமநிலையில் உள்ளது.

மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி, வரும் 7ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.