தேர்தல் அரசியல் களத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருடைய வியூகங்களும் களப்பணிகளும் காட்டுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவருடைய செயல்பாடுகள் ரொம்பவே கேலிக்குள்ளாகி இருக்கின்றன.
திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் பார்க்கப்படுகிறார்.
மேயர், எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் படிநிலைகளிலும், இளைஞரணி செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என கட்சிக்குள்ளும் அவருடைய வளர்ச்சி நின்று நிதானமாகவே இருந்து வந்திருக்கிறது.
சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டதாலேயே அவர் கைக்காட்டிய மன்னார்குடி பரிவாரங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை வாரிக்கொடுத்த ஜெயலலிதா போல், இந்திய அரசியலின் ஆகப்பெரும் தலைவரான கருணாநிதி தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு அப்படி ஒன்றும் கண்மூடித்தனமாக கட்சி, ஆட்சி அதிகாரங்களை வாரிக்கொடுத்துவிடவில்லை.
கிடைத்த வாய்ப்புகளில் தனக்கென ஓர் இமேஜை வளர்த்துக்கொண்டார் மு.க.ஸ்டாலின். ‘நமக்கு நாமே’ பயணம் அவருடைய அரசியல் இமேஜை ஒரு படி உயர்த்தியது என்றே சொல்லலாம்.
ஆனால், தேர்தல் அரசியல் வியூகம் வகுப்பதில் கருணாநிதியைப்போல் அத்தனை சூட்சுமங்களை ஸ்டாலின் அறிந்தவர் அல்ல என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்தையே தர்க்க ரீதியாக ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணவோட்டமாக இருந்தது. ஆனால், ஸ்டாலின் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசித்ததாகவே தெரியவில்லை.
2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல; 2011ம் ஆண்டு நடந்த தேர்தலின்போதே கூட மு.க.ஸ்டாலின்தான் கூட்டணி அமைப்பதில் முன்னின்று செயல்பட்டார். கருணாநிதியும், அதை அவருக்கான பயிற்சிக்களமாகவே பார்த்தார். அந்த தேர்தலில் ஸ்டாலினால் எதிர்க்கட்சித் தலைவராகக்கூட வர முடியவில்லை.
அடுத்து, 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல். திமுக தலைமையில் கட்சிகள் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா தீர்மானமாக இருந்து சாதித்தும் காட்டினார். அந்த தேர்தலிலும் ஸ்டாலின் வகுத்த எந்த வியூகமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. மாறாக, கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை தாரை வார்த்து, அவற்றில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வி, அக்கட்சியை மீண்டும் எதிர் வரிசையில் அமர வைக்கும் அளவுக்கு இட்டுச் சென்றது.
இதோ இப்போது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடந்தது என்ன?. ஆளுங்கட்சியின் அதிகார பலம், மத்திய அரசின் ஆதரவு, பணபலம் எல்லாவற்றையும் மீறி ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன்.
காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்பட பத்து கட்சிகளின் கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வெறும் 24581 வாக்குகளே பெற முடிந்திருக்கிறது. டெபாசிட்டும் போச்சு. 2016ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக 57673 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் அப்படியே 50 சதவீதம் வரை வாக்குகள் சரிந்தது ஏன்?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவால் 13.90 சதவீத ஓட்டுகளே பெற முடிந்தது. அக்கட்சிக்கென இருந்து வந்த 23 சதவீத ஓட்டு வங்கி எங்கே போனது? பிரஷ்ஷர் குக்கரின் பிரஷ்ஷர் தாங்காமல் சிதறிப்போனதா?
ஆளுங்கட்சியினர், டிடிவி தினகரன் ஆகியோர் பணம் கொடுத்ததால்தான் திமுகவால் வெற்றி பெற முடியாமல் போனதாக ஸ்டாலின் கூறுவது, ஒப்புக்கு ஒரு காரணத்தைத் தேடிப்பிடிப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும், அவருடைய கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், என்னதான் பணம் பாய்ந்தாலும் கட்சிக்கென இருக்கும் நிலையான வாக்கு வங்கி, கூட்டணி ஆதரவு தெரிவித்த கட்சிகளின் வாக்குகள் எல்லாம் எங்கே என்பதுதான் திமுக மற்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இமேஜ் மீது எழுப்பப்படும் கேள்வி.
இத்தனைக்கும் வாக்குப்பதிவு நாளன்றுதான் (டிசம்பர் 21, 2017) திமுக எம்பி கனிமொழி, ஆ.ராஜா உள்ளிட்டோர் 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பும் வெளியானது. பகல் 12 மணிக்கு முன்பே தீர்ப்பு வெளியாகியும், திமுகவுக்கு அந்த தீர்ப்பு எந்த வகையிலும் கைக்கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவினர் தேர்ந்தவர்கள் என்ற எண்ணம்கூட மக்களிடம் ஆழப்பதிந்திருக்கலாம் அல்லது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற முன்முடிவில் மக்களும் இருந்திருக்கலாம். அதனால்தான் 2ஜி தீர்ப்பு, தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனக்கருதுகிறேன்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசிய திருமாவளவன், இடைத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் பணம் செலவழிக்கக் கூடாது (அதாவது, ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது) என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதனால்தான் பணம் கொடுத்தவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போட்டுவிட்டதாக கூறினார்.
எனில், தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றியைப் பெற முடியும் என்று மு.க.ஸ்டாலினும் நம்புவதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அல்லது, வாக்குக்கு பணம் கொடுக்காவிட்டால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தோற்றுவிடுவார் என்று அவர் முன்பே கணித்து இருக்கிறார். அப்படியெனில், மருதுகணேஷ் பலிகடா ஆக்கப்பட்டாரா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழாமல் இல்லை.
பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுகதான் வெற்றி பெற்றது. ஆயினும், 2011ல் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அதேபோன்ற தர்க்கத்தை இப்போதும் சிலர் முன்வைக்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்றிருந்தாலும், அடுத்த தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்கின்றனர். இதற்கும் கிளி ஜோசியத்திற்கும் துளியளவுகூட வித்தியாசம் இல்லை என்பதாகத்தான் பார்க்கிறேன்.
திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சித் தலைவர்களேகூட, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.
அதனால்தான் டிடிவி தினகரனுக்கு, திமுக மறைமுக ஆதரவு தெரிவித்ததாக யூகங்களும் கிளம்பியிருக்கின்றன. டிடிவி தினகரனை வெற்றிபெறச் செய்து, அவர் மூலம் ஆளுங்கட்சியை கவிழ்ப்பதுதான் ஸ்டாலினின் வியூகம் என்கிறார்கள் சிலர்.
இந்த வியூகம் / யூகம் உண்மையாகவே கொண்டாலும், டிடிவி தினகரன் ஆளுங்கட்சியினரோடு இணக்கமாகிவிட்டால் ஸ்டாலின் என்ன செய்வார்? அல்லது, ஸ்டாலினுக்கு எதிரான சக்திமிக்க தலைவராக தினகரனேகூட உருவெடுத்துவிட்டால் அதுவும் அவருக்கு கைக்கொடுக்காமல் போகும்தானே?.
ஆக, எப்படிப் பார்த்தாலும் டிடிவி தினகரனுக்கு, திமுக ஆதரவு என்பதெல்லாம் ஏற்புடைய வாதமாக இருக்க முடியாது.
திமுகவின் சொந்த செல்வாக்கு சரிந்து வருவதை, இப்படியெல்லாம் பேசி சரிக்கட்டுகிறார்களோ என்றுகூட எண்ணுகிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதி 1989 மற்றும் 1996 ஆகிய தேர்தல்களைத் தவிர காலம்காலமாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. பாஜகவுக்கு சேவகம் செய்து வரும் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று பிரச்சாரக் கூட்டங்களில் நெஞ்சை நிமிர்த்தி டிடிவி தினகரன் பேசியதை, அங்குள்ள மக்கள் ஆளுமைமிக்க ஒருவர் கிடைத்துவிட்டதாகவே பார்க்கின்றனர். அத்தகைய உறுதிப்பாட்டை திமுகவிடம் காணமுடியவில்லை.
ஒரே நாளில் 2000 ஊழியர்களுடன் 200 இடங்களில் வருமானவரித்துறை சோதனை, ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கைது, திஹார் சிறை, தொப்பி சின்னம் மறுப்பு என தொடர் இன்னல்களுக்குப் பிறகும் டிடிவி தினகரன் உரத்துப் பேசுகிறார். ஊடகங்களிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி போல், ‘மிஸ்டர் கூல்’ ஆக இருப்பதும் மக்களிடம் நன்றாகவே எடுபட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த நாளன்றுகூட, இந்த தேர்தல்ல யார் சார் வெற்றி பெறுவார் என ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, ‘இதுல என்ன சார் சந்தேகம். நிச்சயமா நான்தான் வெற்றி பெறுவேன்,’ என டிடிவி தினகரன் ‘கூல்’ ஆக சிரித்தபடியே சொன்னபோது அவருடைய உடல்மொழியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
பல்வேறு குடைச்சல்களுக்கு இடையிலும் வெற்றி பெற்றிருக்கிறார் டிடிவி தினகரன். ஜெயலலிதா அற்ற அதிமுக, உள்கட்சி பிளவு, அரசு மீதான மக்களின் வெறுப்பு என இயற்கையாய் அமைந்த காரணிகளைக்கூட பயன்படுத்திக் கொள்ளாமல் தவறி விட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியைப் போல் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவருடைய நிழலில் இருந்து பாடம் பயின்ற மு.க.ஸ்டாலின், தந்தையின் ஆளுமையில் பாதியளவாவது பெற்றிருப்பது அவசியம்தானே?
– பேனாக்காரன்.