Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கடைசி டி20: இந்தியா போராடி வெற்றி; இலங்கை ‘வாஷ் அவுட்’

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்திலும் வென்று, இலங்கை அணியை இந்தியா ‘வாஷ் அவுட்’ செய்தது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிசம்பர் 24, 2017) நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில் இன்றைய வெற்றி, தோல்வி இந்திய அணியை பாதிக்காது.

எனினும், இலங்கை அணியை, ‘வாஷ் அவுட்’ செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது. ஒரு வெற்றியாவது பெற்று விடமாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் இலங்கை அணியும் களம் கண்டது. இந்திய அணியில் பந்து வீச்சாளர்கள் சாஹல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளி க்கப்பட்டு, சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சர்வதேச டி20 போட்டியில் முதன்முதலாக இன்று அறிமுகமாகிறார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, குசல் பெரேரா துவக்கம் தந்தனர். இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக ஆடினர். உனத்கட் வேகத்தில் டிக்வெல்லா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த தொடரில் டிக்வெல்லா விக்கெட்டை தொடர்ந்து மூன்றாவது முறையாக உனத்கட் வீழ்த்தினார்.

இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் சுழலில் குசல் பெரேரா 4 ரன்களில் வீழ்ந்தார். மீண்டும் வந்த உனத்கட், தரங்காவை 11 ரன்களில் வெளியேற்றினார். சமரவிக்ரமா 21 ரன்களிலும், குணதிலகா 3 ரன்களிலும், திசரா பெரேரா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக குணரத்னே மட்டும் 36 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. ஷனாகா 29 ரன்களுடனும், தனஞ் செயா 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக உனத்கட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 136 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியை அடித்து துவைத்த இந்திய அணி, இன்றைய போட்டியில் ரொம்பவே தடுமாறியது. அந்தளவுக்கு இலங்கை வீரர்கள் துல்லியமான நீளத்தில் பந்து வீசி நெருக்கடி அளித்தனர்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா 27 ரன்களில் வெளியேறினார். லோகேஷ் ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டம், இலங்கை அணியின் வசம் சென்றது. இதையடுத்து மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யரும் ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடினர்.

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர், எதிர்பாராத விதமாக ‘ரன் அவுட்’ ஆகி 30 ரன்களில் வெளியேறினார். மனீஷ் பாண்டே நேராக அடித்த பந்தை, அகிலா தனஞ்செயா விரலில் உரசிபடி சென்று எதிரில் உள்ள ஸ்டம்பில் பட்டது. அப்போது எல்லைக்கோட்டை விட்டு வெளியே நின்ற ஸ்ரேயாஸ் அய்யர், ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யாவும் (4 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சிறப்பாக ஆடிய மனீஷ் பாண்டே 32 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து விக்கெட் கீப்பர் டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இணை, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கடைசிக் கட்டத்தில் டோனி ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. டோனி 16 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சமீரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 கணக்கில் வென்று, இலங்கையை ‘வாஷ் அவுட்’ செய்தது.

இன்றைய போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது மற்றும் சிக்கனமான பந்து வீச்சு ஆகியவற்றுக்காக இந்திய பந்து வீச்சாளர் உனத்கட் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா கூறுகையில், ”வெற்றிக்கான இலக்கு குறைவு என்ற போதிலும் இன்றைய போட்டியில் எங்களுடைய பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. அதற்காக பந்துவீச்சாளர்களை பாராட்டுகிறேன். அதேபோல் ஃபீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இந்த தொடரில் நாங்கள் சில முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டோம்,” என்றார்.

மிகச்சிறப்பாகத்தான் இருந்தது. எனினும், இலக்கு குறைவு என்பதால் எஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களையும் இழந்திருந்த நிலையில், இப்போது டி20 தொடரையும் 3-0 கணக்கில் இழந்து, வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.

இந்தியா சாதனை: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய தொடருடன் சேர்த்து தொடர்ந்து 6வது முறையாக தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.