Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

கர்நாடகாவில் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், இந்தியாவில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கவுரி லங்கேஷ்

கர்நாடகாவில், கடந்த ஆண்டு எழுத்தாளர் கல்புருகி கொல்லப்பட்டார். நேற்று (செப். 5) லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ். இருவருமே இடதுசாரி சித்தாந்தங்களை பேசக்கூடியவர்கள்; எழுதக்கூடியவர்கள். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். கவுரி லங்கேஷின் படுகொலைக்கு காரணமென காவி கும்பல்களின் மீதான சந்தேகம் இயல்பாகவே வலுத்துள்ளது.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (International Federation for Journalists) சில தகவல்களை வெளியிட்டுள்ளது. 140 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு, இந்த சம்மேளனம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. இதில், 93 பேர் இலக்கு வைத்து கொல்லப்பட்டவர்கள். கவுரி லங்கேஷ்போல. இதரர், விபத்து, அல்லது வேறு காரணங்களால் மரணித்தவர்கள் என்கிறது. 2015ம் ஆண்டில் 112 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2015ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 2297 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகச் சொல்கிறது, இந்த சம்மேளனம்.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு என்ற மற்றோர் அமைப்பு (Committee to Protect Journalists), 1992 முதல் நடப்பு ஆண்டு வரை 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகக் கூறுகிறது. நடப்பு 2017ம் ஆண்டில் மட்டும், கவுரி லங்கேஷ் நீங்கலாக 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 27 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக், மெக்ஸிகோ, லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறியானது என்பதை இதன் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கவுரி லங்கேஷின் படுகொலை மூலம் பத்திரிகையாளர்கள் தங்களுக்கும், துறைக்குமான பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்க வேண்டிய தருணம் இது. இஸ்லாமிய நாடுகளில் பத்திரிகையாளர்கள் சகட்டுமேனிக்கு கொல்லப்படுவது போன்ற அதிபயங்கரங்கள் இந்தியாவில் இல்லை. ஆனால், வழக்கு மேல் வழக்கு போட்டு தொடர் மன உளைச்சலை ஏற்படுத்துவதும், ஒருகட்டத்தில் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை செயல்பட விடாமல் முடக்கும் யுக்திகளும் இந்தியாவில் மலினமாகிவிட்ட ஒன்று.

ஈராக் போன்ற நாடுகளில், போர் குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்றபோது பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது கணிசமாக இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் அத்தகைய கொலைகள் நடப்பது இல்லை. ஆனால், ஆட்சியாளர்கள் அல்லது தனிப்பட்ட நபர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தும்போது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவதூறு வழக்குகள் தொடர்கின்றனர். இத்தனைக்கும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகும்போதும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தொடர்வது உச்சக்கட்ட வேதனை.

உதாரணத்திற்கு, தமிழகத்தில் வாரம் இருமுறை வெளியாகும் புலனாய்வு இதழான நக்கீரன் பற்றி சொல்லலாம். அந்த இதழ் மீது ஆட்சியாளர்கள் 270க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அவை தற்போதும் விசாரணையில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட வழக்குகள்.

ஊடகங்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூண். ஆனால் ஊழல் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும்போது அதிகார மையங்கள் தங்கள் மீதான தவறுகளை திருத்திக் கொள்வதற்கு பதிலாக, செய்தி வெளியிட்ட ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்துவது, வழக்குகள் பதிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

பெட்ரோல் குண்டு வீச்சில் பற்றி எரியும் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம்

கடந்த 2007ம் ஆண்டு, திமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்று தினகரன் நாளிதழ் ஒரு சர்வே நடத்தியது. இதில், மு.க. அழகிரிக்கு, குறைந்தளவிலான மக்கள் செல்வாக்கே இருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மு.க. அழகிரி தரப்பு குண்டர்கள், மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் பத்திரிகை வடிவமைப்பு ஊழியர்கள் கோபிநாத், வினோத்குமார், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் தீயில் எரிந்து கரிக்கட்டை ஆயினர். கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட மிகக்கொடூரமான தாக்குதல் இது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்தே, பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நேஷனல் ஹெரால்டு. நேரு குடும்பத்திற்குச் சொந்தமான பத்திரிகை. 1962ம் ஆண்டு, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை தொடங்கி வைக்கும்போது, ‘சார்பு தன்மை இல்லாமல், யார் தவறு செய்தாலும் துணிவுடன் இந்த பத்திரிகை சுட்டிக்காட்டலாம்,’ என பொதுமேடையில் சொன்னார். அவரிடம் இருந்த சகிப்புத்தன்மை எல்லா ஆட்சியாளர்களுக்கும் எல்லா காலத்திலும் இருக்காதே.

தமிழகத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆரை என்னதான் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், அவர் காலத்திலும் விகடன் நிறுவனத்திற்கு ரொம்பவே குடைச்சல் கொடுக்கப்பட்டது.எம்ஜிஆரின் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டையில் ஊழல் நடப்பதாக செய்தி வெளியிட்டதற்காக தினகரன் அலுவலகத்தை தாக்குவதற்காக குண்டர்கள் அனுப்பப்பட்டதாக சொல்கிறார், ‘முரசொலி’ பத்திரிகையின் மூத்த செய்தியாளர் கே.ஆர். திருவேங்கடம்.

எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் ஜெயலலிதாவிடமும் இருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, (1992ம் ஆண்டாக இருக்கலாம்) தராசு பத்திரிகை மீது அதிமுக குண்டர்கள் தாக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சப் – எடிட்டர் உள்பட இரு ஊழியர்கள், மாடியில் இருந்து கீழே குதித்தபோது காயமடைந்து உயிரிழந்தனர் என்று மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட்டார் அவர்.

”மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் மூத்த பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அடங்கிய ‘பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் மிரட்டல் அல்லது தாக்குதலுக்கு உள்ளாகும்போது இந்த அமைப்பிடம் புகார் அளித்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அமைப்பின் செயல்திட்ட நடைமுறைகள் இருக்க வேண்டும்,” என்று புதிய யோசனையை முன்வைத்தார் கே.ஆர்.திருவேங்கடம்.

திருவேங்கடம்

”பத்திரிகைத் தொழில் என்பது எப்போதும் பாதுகாப்பற்றத் தொழில்தான். நிறுவனம் – பத்திரிகையாளர் – மக்கள் என மூன்றும் இணைந்தது, இந்த துறை. அச்சு ஊடகங்கள் மட்டும் இருந்த வரை பத்திரிகையாளர்களுக்கு மக்கள் மத்தியில் ஒருவித பயமும், மரியாதையும் இருந்தது. என்றைக்கு மின்னணு ஊடகங்கள் அதிகரித்தனவோ, அப்போதே இந்த இந்த நிலை மாறி விட்டது. மின்னணு ஊடகங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூர்மையான பார்வை தேவை. ஊடகங்கள்  மலிந்து போகும்போது அவர்கள் மீதான தாக்குதலும் அதிகரிக்கிறது,” என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவருமான டி.கூடலரசன்.

நான்கு திசைகளில் இருந்து வரும் தகவல்களையும் திரட்டக்கூடிய பொறுப்பில் இருக்கும் பத்திரிகையாளர் அல்லது புகைப்படக்காரருக்கு எந்த தருணத்தில், எந்த திசையில் இருந்து தாக்குதல் வரும் என்று மட்டும் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

”எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் வி.என்.ஜானகி முதல்வரான நேரம். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். அவருக்கு அதுதான் முதல் மேடையும்கூட. அப்போது மாலைப்பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் வி.என்.ஜானகி அருகில் சென்று ‘குளோஸ்- அப்’ படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த, வி.என். ஜானகியின் செயலாளர், அந்தப் புகைப்படக்காரரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அதில் அவருடைய ஒரு கண்ணில் அடிப்பட்டு, வீக்கம் அடைந்து விட்டது.

கூடலரசன்

இந்த தாக்குதலுக்கு அப்போது நான் உள்பட சிலர் கண்டனம் தெரிவித்தோம். அதற்கு மேடையிலேயே காளிமுத்து, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் எங்களை தாக்குவதற்காக குண்டர்கள் சிலர் எங்கள் இருக்கைகளைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் எங்களை தாக்கவும் திட்டமிட்டு இருந்தனர். இதுபற்றி நான் ஒரு துண்டு சீட்டில் எழுதி, மேடையில் இருந்த முத்துசாமியிடம் (இப்போது திமுகவில் இருக்கிறார்) கொடுத்தேன். ‘கூட்டம் முடிந்ததும் யாரும் கலைந்து செல்ல வேண்டாம். நானும் வந்து விடுகிறேன்’ என்று துண்டு சீட்டில் பதில் அனுப்பினார். காவல்துறையினரும் பாதுகாப்புக்கு எங்கள் அருகில் வந்தனர். அதன்பிறகு அந்த குண்டர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

கவுரி லங்கேஷ் கொலையை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம். விசாரணையும் நடந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், குத்து வாங்கிய புகைப்படக்காரர் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக புகாரை திரும்பப் பெற்றிருக்கலாம்,” என்று சொந்த அனுபவங்களை நினைவு கூர்ந்தார் டி.கூடலரசன்.

”பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு சட்டம் ஒன்றை இந்திய அரசு இயற்ற வேண்டும். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து கோட்டாட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் நேரடியாக விசாரிக்கும் வகையில் அந்த சட்டம் அமைய வேண்டும். முதல் கட்டமாக, பத்திரிகையாளர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும்,” என்றும் கூறுகிறார்.

பேனா முள் கீழ் நோக்கி சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் பத்திரிகையாளர்களை கண்டுகொள்வதில்லை. அதுவே, அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போது கொலை செய்யவும் தயங்குவதில்லை என்பதே அண்மைக்கால போக்கு. பெருமுதலாளிகள் / அரசியல் சார்பு முதலாளிகளின் கரங்களில் ஊடகங்கள் இருக்கும்வரை பத்திரிகையாளர்கள் சுய பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெறவே இயலாது. மக்களுக்கான ஊடகங்கள் பெருகும்போது இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் தானாகவே கிடைத்துவிடும். அதுவரை ஊடகவியலாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பை, பேனா முனையில் இருந்தே பெற வேண்டும். பெற முடியும்.

– பேனாக்காரன்.
தொடர்புக்கு: 9840961947

E-mail: selaya80@gmail.com