Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

இலங்கைக்கு எதிரான டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டியில், கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரே ஒரு டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி நேற்று (செப். 6) கொழும்பு பிரேமாதாசா மைதானத்தில் நடந்தது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி, மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய அணி தரப்பில் ரஹானே, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டு இருந்தனர். இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிக்வெல்லா, கேப்டன் உபுல் தரங்கா ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தரங்கா 5 ரன்களிலும், டிக்வெல்லா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அந்த அணியில் முனவீரா மட்டும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 9 ரன்களிலும், லேகேஷ் ராகுல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. அவர் 54 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய மனீஷ் பாண்டே, 51 ரன்கள் விளாசினார். தோனி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் கோஹ்லிக்கு இது 50வது சர்வதேச டி-20 போட்டியாகும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

ஏற்கனவே இலங்கை அணியை, டெஸ்ட் போட்டித்தொடரை 3-0 கணக்கிலும், ஒரு நாள் தொடரை 5-0 கணக்கிலும் முழுமையாக வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.