Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது.

இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை.

முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையின்போது, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரூ.33 கோடி மற்றும் தங்கக் கட்டிகள், வெள்ளி நகைகளை வருமான வரித்துறையே படங்களையும், தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால், மன்னார்குடி வகையறாக்கள் விவகாரத்தில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடாதது சில சந்தேகங்களையும் கிளப்பி இருக்கிறது.

இப்போது கைப்பற்றப்பட்டுள்ள சொத்து ஆவணங்களை மதிப்பீடு செய்யும்போது, அவை முறையான கணக்கு வரம்பிற்குள் இருக்குமேயானால், வருமானவரித்துறையின் முந்தைய தகவல்கள் பொய்யானவையாக ஆகிவிடக்கூடும் என்பதால், இப்போது தகவல்கள் ஏதும் தராமல் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இன்று காலை ஊடகங்களைச் சந்தித்த தினகரன், ”நான் ஒன்றும் காந்தியின் பேரன் கிடையாது. அதேநேரம் என் மீது குற்றம் சொல்பவர்கள் காந்தியின் பேரன்களா?. என்னுடைய வரவு செலவு, என் மனைவியின் சொத்துக் கணக்குப் பற்றி வேண்டுமானால் சொல்ல முடியும்.

என் ஆதரவாளர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? அவர்களின் சொத்து விவரங்கள் எனக்கு எப்படி தெரியும்? சோதனையில் ஆவணங்களோ, தங்கமோ கைப்பற்றப்பட்டவிட்டதாலேயே அது முறைகேடாக சேர்த்ததாக சொல்லிவிட முடியாது. விசாரணை முடிவில்தான் அதன் விவரங்கள் தெரிய வரும்,” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாளாக நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து அதிமுக அம்மா அணியின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு, ”அடக்குமுறையையும் அவதூறுகளையும் துடைத்து எறிவோம்! அம்மா ஆட்சி மலர எத்தகைய தியாகத்திற்கும் தயாராவோம்!!” என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

வருமான வரித்துறை, நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தினகரன் தரப்பினர் மீதான வருமான வரித்துறை சோதனைகள் குறித்தும், பாஜக அரசைக் கண்டித்தும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

ஆனால், டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடோ நடுவண் அரசையும், பாஜகவையும் நேரடியாக விமர்சிக்காமல் மென்மையான போக்குடன் கட்டுரை எழுதி இருக்கிறது.

மாறாக, இந்த சோதனைக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருப்பதாகவே அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் எதற்காக இந்த சோதனை என்பதையும் அந்த கட்டுரை மறைமுகமாகச் சொல்லத் தவறவில்லை. கட்டுரையில சொல்லப்பட்ட சேதி சுருக்கமாக…

”சதிகாரர்களின், சூழ்ச்சியாளர்களின் ஒவ்வொரு சதிகளையும், அசைவுகளையும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை உணரும் தருணம் இது. யாருடைய தூண்டுதலால் சோதனை என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் மக்கள் செல்வரை அடக்கவும், ஒடுக்கவும் எவ்வளவுதான் முயற்சித்தாலும், கழக உடன்பிறப்புகளின் உள்ளங்களில் இருந்து தியாகத்தலைவி சின்னம்மாவையும், மக்கள் செல்வர் டிடிவி தினகரனையும் அகற்றவே முடியாது.

பந்தத்தை உடைக்க முடியாது. உடன்பிறப்புகளிடம் இருந்து அணுவளவும் பிரிக்க முடியாது. கழக உடன்பிறப்புகளை திசை திருப்பும் முயற்சியில் ஒரு நாடகமாக அச்சுறுத்த நினைத்து, சோதனை என்ற ஆயுதத்தைக் கையாண்டு, துரோகிகளின் தூண்டுதலால் கழக உடன்பிறப்புகளை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் சூழ்ச்சியாளர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

எம்ஜிஆர் ஆட்சியின்போதும், பின்னர் அம்மாவின் ஆட்சியிலும் பதவி சுகம் அடைந்தவர்கள், அதன்பின் தியாகத்தலைவி சின்னம்மா தயவிலும் பதவிக்கு வந்தவர்கள், பதவி சுகத்திற்காக யாரோ ஒருவரிடம் சரணாகதி அடைந்துள்ளனர். சுயநலவாதிகள் அமைச்சர்கள் என்ற போர்வையில் வந்த வழிகளை மறந்துவிட்டு, எட்டப்பர்களாகி வாய்கிழியப் பேசுகின்றனர்.

அத்தகைய துரோகிகளிடம் மக்களை ஈர்க்கக்கூடிய சக்தி இல்லை. நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாணவர்களையும், கூலிக்கு ஆள்களையும் அழைத்து வரக்கூடிய அவல நிலைதான் உள்ளது.

மக்கள் செல்வரோ, எங்கு பொதுக்கூட்டத்திற்குச் சென்றாலும், இல்ல நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இதைக் கண்டு அஞ்சும் செல்லாக்காசு கூட்டத்தினருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு, குரோத புத்தியோடு செயல்படுகின்றனர்.

தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர எத்தகைய தியாகத்திற்கும் தயாராவோம். இப்படை எதிர்ப்பின் எப்படை வெல்லும்? என்பதை நிரூபித்துக் காட்டிட 2 கோடி தொண்டர்களுக்கு காலம் அளித்த பொன்னான வாய்ப்பை இனியும் நழுவ விடக்கூடாது,” என்று அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டு உள்ளது.

முதல் நாள் சோதனையின்போதே, வருமான வரித்துறையின் பாய்ச்சலுக்கு என்ன காரணம் என்பதை ‘புதிய அகராதி’ விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தது.

அதில், அதிமுகவில் இருந்து சசிகலா கும்பலை முற்றாக வெளியேற்றுவதற்காகவே இந்த சோதனை நடத்தப்படுவதாகச் சொல்லி இருந்தோம். இன்றைய நமது எம்ஜிஆர் நாளேடும் அந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

– அகராதிக்காரன்.