Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

தரம்சாலாவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஹிமாச்சல்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று (டிசம்பர் 10, 2017) நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பனிப்பொழிவு காரணமாக பகல் 11.30 மணிக்கே போட்டி தொடங்கியது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் சென்றதால், ஒரு நாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரஹானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதன்முதலாக ஆடும் லெவனில் இடம் பிடித்தார்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் சோபிக்கவில்லை. தவான் ரன் ஏதுமின்றி ‘டக்’ அவுட் ஆனார். ரோஹித் ஷர்மா, 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தாக்குதல் பாணியில் பந்து வீசி திணறடித்தனர். அதனால் இந்திய வீரர்கள் களத்திற்கு வருவதும், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். முதன்முதலில் களம் காணும் வாய்ப்பைப் பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்களில் வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக்கும் ‘டக்’ அவுட் ஆனார். மனீஷ் பாண்டே 2 ரன், ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 29 ரன்களில் 7 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 50 ரன்களையாவது எட்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தோனியும், சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வும் அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர்.

குல்தீப் யாதவ் 19 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடிய தோனி, தனக்கான சிறந்த பங்காளி கிடைக்காமல் தடுமாறினார். புவனேஷ்வர்குமாரும் ரன்களின்றி வெளியேறினார். பும்ரா, சாஹல் ஆகியோர் ஒத்துழைப்புடன் தோனி 65 ரன்கள் (85 பந்துகள்) குவித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

முடிவில் இந்திய அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை எடுத்தது. டோனியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி ஓரளவு கவுரவமான ரன்களை திரட்டியது.

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. இலங்கை வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குணதிலகா (1 ரன்), திரிமான்னே (0 ரன்) ஏமாற்றினாலும், உபுல் தரங்கா 49 ரன்கள் திரட்டி நம்பிக்கை அளித்தார். அடுத்து களமிறங்கிய மாத்யூஸ் 25 ரன், டிக்வெல்லா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், இலங்கை அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். 20.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து அந்த அணி, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய தரப்பில் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 13ம் தேதி மொஹாலியில் நடக்கிறது.