Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் ‘அவசரத்துக்கு ஒதுங்கும்’ அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது.

சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது.

ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்றும், மக்கள் தனிநபர் கழிப்பறையைத்தான் பயன்படுத்துகின்றனர் என்றும் கடந்த 31.12.2016ம் தேதியே அறிவித்தது.

சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மூலம் நடத்திய ஆய்வில் வெறும் 8 கோட்டங்களில்தான் மக்கள் வேறு வழியின்றி திற ந்தவெளியில் மலம்ஜலம் கழிப்பதாகவும், அந்த பகுதிகளிலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி 31.6.2017ம் தேதிக்குள் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நகரமாக அறிவிக்க இருப்பதாகவும் முன்னாள் ஆணையர் செல்வராஜ் கூறியிருந்தார்.

ஆனால், திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்று அறிவிக்கப்பட்ட 52 கோட்டங்களுமே இன்னும் அத்தகைய உன்னத நிலையை அடையவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.

இந்த நிலையில்தான், மாநகராட்சியின் 24வது கோட்டத்திற்கு உட்பட்ட சின்னேரிவயல்காடு, அங்கம்மாள் காலனி பகுதிகளில் பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் ரயில் தண்டவாளம், புதிய பேருந்து நிலையம், பள்ளப்பட்டி ஏரி, முள்புதர் மறைவிடங்களில் மலஜலம் கழிக்க ஒதுங்க வேண்டிய அவலநிலை உள்ளதாக, டிஒய்எப்ஐ புகார் கிளப்பி உள்ளது.

இதையெல்லாம் இந்த நூற்றாண்டியின் அவலங்களாக மாநகராட்சி நிர்வாகம் உணரவே இல்லை. விளிம்புநிலை மக்களின் அத்தியாவசிய தேவையான பொதுக்கழிப்பறைகளின் அவசியத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சேலத்தை எப்படி பொலிவுறு நகரமாக்க (ஸ்மார்ட் சிட்டி) முடியும்?

”சின்னேரிவயல்காடு பகுதியில் போடப்பட்ட தார்ச்சாலை தரமானதாக இல்லாததால் பல இடங்களில் புதைகுழிபோல் உருமாறி விட்டது. தரமற்ற சாலையால் மக்கள் வரிப்பணம் சுருட்டப்பட்டுவிட்டது.

அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக போராடியும் இன்னும் பொதுக்கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை. ஆனால் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகரமாக அறிவித்திருப்பது அப்பட்டமான பொய். கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் இன்றைக்கும் இருட்டைத் தேடிச்செல்லும் நிலை இருக்கிறது.

அங்கம்மாள் காலனி குப்தா நகரில் சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. பலமுறை இது தொடர்பாக புகார் மனுவும் கொடுத்திருக்கிறோம். இத்தனைக்கும் அங்கம்மாள் காலனியில்தான் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

அங்கு ஒருமுறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர இருந்ததால் அப்போது மட்டும் அவசர அவசரமாக சாலை போடப்பட்டது. ஆனால், சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது,” என்கிறார் டிஒய்எப்ஐ போராட்டக்குழு நிர்வாகி பிரவீன்குமார்.

தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து 100 அடி நீளத்தில் மனுவாக எழுதி, அதில் 2000 பேரிடம் கையெழுத்துப் பெற்று வந்து சேலம் மாநகராட்சி ஆணையரிடம் டிஓய்எப்ஐ இளைஞர்கள் வழங்கினர். 100 அடி நீள கோரிக்கை மனுவை அவர்கள் சாலையில் வரிசையாக சுமந்து வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

சின்னேரிவயல்காடு, குப்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி மாதத்திற்குள் புதிய தார்ச்சாலை அமைக்கப்படும் என்றும், பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கான இடவசதி இருந்தால் கட்டித்தர தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்ததாகவும், பிரவீன்குமார் கூறினார்.

 

– பேனாக்காரன்.