வெள்ளித்திரைக்கு வெளியே அரசியல் தொடர்பாக ரஜினி எப்போது பேசினாலும், அவர் மீது ரசிகர்கள் சாராத மக்களுக்கு ஒருவித அய்யப்பாடு இதுவரை இருந்து வந்திருக்கிறது. ‘எல்லாம் அடுத்த பட புரமோஷனுக்கான வேலைப்பா. படம் ரிலீசாகும்போது இப்படி பேசினாத்தானே கல்லா கட்ட முடியும்…’ என்ற விமர்சனங்கள் எழுவது உண்டு.
அந்த விமர்சனங்களை நாம் முற்றாக புறந்தள்ளிவிடவும் முடியாது; அதேநேரம் ரஜினியின் சந்தை நிலவரம் அந்தளவுக்கு சரிந்து விட்டதாகவும் கூற முடியாது. இன்றைக்கும் தமிழில் ரஜினியை வைத்து மட்டுமே மிகப்பெரும் பட்ஜெட்டில் படமெடுக்க முடியும் என்று நம்பும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உண்டு. உதாரணம், முன்பு ‘எந்திரன்’. இப்போது, ‘2.0’
ரஜினி ஒரு படத்துக்கு ரூ.55 கோடி ஊதியம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனின் நிலவரம் அப்படிப்பட்டதன்று. ரஜினியின் ஊதியத்தில் பாதிதான் கமலின் ஊதியம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர் உலகத்தரம் வாய்ந்த படைப்பாளி.
ஆனாலும், கமல்ஹாசனின் சந்தை நிலவரம் எப்போதுமே சீசா விளையாட்டு போலதான். ஏறும்; தாழும். அனைத்து அம்சங்களும் நன்றாக இருந்தால் மட்டுமே வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும். இல்லாவிட்டால், விருதுகளை குவிக்கும் படமாக மட்டுமே இருந்து விடும்.
சினிமாவில் அலுத்துப் போனவர்களின் கடைசி புகலிடம் அரசியல்தானே?. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அத்தகைய புகலிடத்தைத் தேடி கமலும், ரஜினியும் நகர்வது அல்லது நகர்த்தப்படுவதும் இயல்பாகவே இருக்கிறது. அப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.
ஆந்திரத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ் மட்டுமே, கட்சி ஆரம்பித்த ஆறே மாதத்தில் அரசியலிலும் வெற்றி பெற்று, முதல்வர் ஆனார். தமிழகத்தில், 1972ல் அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், எடுத்த எடுப்பிலேயே அரசியலை புரட்டி போட்டுவிடவில்லை. கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மக்களை அணுகினார். 1977ல் நடந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வர் ஆனது ஊரறிந்த வரலாறு.
போர் வரட்டும் பார்க்கலாம் என்றதுடன் ரஜினியின் அரசியல் ஆரவாரம் அத்துடன் முடிந்து விட்டது. ரஜினி முதல்வர் ஆனால் மாற்றங்கள் வரும் என்று லதா ரஜினிகாந்த் சொன்னதை இணையவாசிகள் கேலி செய்கிறார்கள். ரஜினியை அவதார புருஷனாக பார்த்த காலம் மாறிவிட்டதைத்தானே இந்த விமர்சனங்கள் காட்டுகிறது.
அவர், ‘2.0’ மற்றும் ‘காலா’ படப்பிடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். அதன்பின், கமல்ஹாசன் தமிழக ஆட்சியாளர்கள் மீது வெகுண்டெழுந்தார். அவரும் ‘பிக்பாஸ்’ ஒப்பந்தம் காரணமாக வெளிப்படையாக களத்தில் இறங்காமல் டுவிட்டர் களத்தில் மட்டுமே போராடி வருகிறார்.
அடுத்து, ஒரு வாரப்பத்திரிகையில் தன்னை மையம் கொண்ட புயலாக சீறப்போகிறார். ‘ஆளவந்தான்’ படம் பெரும் தோல்வி அடைந்த விரக்தியில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு, ‘கமல்ஹாசன் சொந்தக்காசில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அடுத்தவர் காசில் ரிஸ்க் எடுக்கக் கூடாது,’ என்று புலம்பித் தள்ளினார்.
கடந்த மூன்று மாதங்களாக பிக்பாஸ் மேடையில் அரசியல் நெடி பரப்பி வந்த கமல்ஹாசன், இனி வாரப் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்வார். அதில் இருதரப்புக்குமே கொள்ளை லாபம் உண்டு. வழக்கம்போல் வாசகன், ரசிகர்களின் பாக்கெட்டில் இருந்து இருதரப்புமே சுரண்டி விடக்கூடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்
இறுதி பகுதியில், நான் வருவேன்
வந்தே தீருவேன் என்று
முழங்கிய கமல்ஹாசன்,
அதே மேடையில் இந்தியன்-2
படத்தின் அறிவிப்பையும்
வெளியிடுகிறார். இங்குதான்
அவர் மீது ரசிகர்களுக்கும்,
மக்களுக்கும் குழப்பமும்,
சந்தேகமும் வருகிறது.
ஒருவேளை ரஜினிகாந்த் போல,
கமல்ஹாசனும் ‘அரசியலுக்கு
வந்த மாதிரியும் இருக்கணும்
வராத மாதிரியும் இருக்கணும்’
என்ற பாணியில் பேசத்
தொடங்கிவிட்டாரா என்ற
கேள்விகளும் எழாமல் இல்லை.
ஏனெனில் அவர் இயக்கி,
நடித்த ‘விஸ்வரூபம்-2’,
‘சபாஷ் நாயுடு’ ஆகிய
படங்கள் எப்போது ரிலீஸ்
ஆகும் என அவருக்கே
தெரியாத நிலையில் இப்போது
அடுத்த படம் குறித்த
அறிவிப்பும்
வெளியிட்டிருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில்
ஒரு படம் உருவாக
குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும்.
அரசியலுக்கு வந்தால்
சினிமாவை விட்டு ஒதுங்கி
விடுவேன் என்றும் கமல்
சொல்லியிருக்கிறார்.
எனில் அவருடைய
கனவுப்படமான
மருதநாயகம் என்னாகும்?
அந்தப் படத்திற்கு
சில வெளிநாட்டு
முதலீட்டாளர்கள்
உதவுவதாகவும், லைகா
நிறுவனம்கூட அதற்குத்
தயாராக இருப்பதாகவும்கூட
சொல்லப்பட்டதே?
இங்குதான் ரசிகர்களுக்கு இவ்விரு நடிகர்கள் மீதுமே சந்தேக நிழல் படிகிறது. இப்படி சொல்வதால், இந்தக்கட்டுரைக்கு இணையவாசிகள் சமூக ஊடகங்களில் நம்மையும் கழுவி ஊற்றக்கூடும். அப்படி செய்வது, அவர்களின் குற்றமல்ல; அத்தகைய ரசிகர்களை உருவாக்கிய அவர்களின் தலைவர்களின் குற்றமே.
ரஜினி நடித்து முடித்துள்ள ‘2.0’ மற்றும், அவருடைய மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காலா’ ஆகிய இருபடங்களும் நல்ல விலைக்கு போனால்தான் முதலீட்டை திரும்பப் பெற முடியும். அதற்கு மேல் லாபம் சம்பாதிக்க வேண்டும்.
அதேபோல்தான்
‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயுடு’
மற்றும் அடுத்து வரவுள்ள
‘இந்தியன்-2’ படங்களும்
நல்ல விலைக்குப் போக வேண்டும்.
அதற்கான யுக்தியாகவும்
இவ்விரு நடிகர்களும் தற்போது
அரசியல் அஸ்திரத்தை கையில்
தூக்கிப் பிடித்துள்ளதாகவும்
சொல்லப்படுகிறது.
ஏனெனில், ரஜினி, கமல்
ஆகியோரின் கைவசம் உள்ள
4 படங்களும் கிட்டத்தட்ட
ரூ.2000 கோடிக்கு மேல்
வணிகம் ஆனால்தான்
தயாரிப்பாளர்களும் லாபமீட்ட
முடியும். அதே சூட்டோடு
‘இந்தியன்-2’ படமும்
கல்லா கட்டிவிடும்.
இவ்விரு நடிகர்களும் அரசியல் கருத்துகளை வெளியிட்டு வருவது வணிக ஆதாயத்திற்காகத்தான் என்று நாம் சொல்லவில்லை. ஆனால், அவர்களின் அஜன்டாவில் ரூ.2000 கோடி சினிமா வியாபாரமும் பொதிந்து இருக்கிறது என்றே சொல்கிறோம். எதுவாயினும், அம்பலத்திற்கு வந்துதானே ஆக வேண்டும்?
kamal speech about ‘Maruthanayagam’
– அகராதிக்காரன்.