Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

பணமதிப்பிழப்பு என்பது பாஜக அரசு செய்த மிகப்பெரும் பண மோசடி என்று முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இப்போது அருண்ஷோரியும் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி.

அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது:

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர்.

பழைய ரூபாய் நோட்டுக்கள் 99 சதவீதம் வங்கிகளிடம் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. அப்படியானால் கருப்பு பணமும், கணக்கில் வராத பணமும் இந்த திட்டத்தால் ஒழிக்கப்படவில்லை என்று தானே அர்த்தம். அரசின் தவறான வழிகாட்டுதலே ஜிஎஸ்டி.

கடந்த 3 மாதங்களில் 7 முறை இதன் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இந்த மோசமான திட்டத்தை சுதந்திரத்துடன் ஒப்பிட்டு, சிறப்பு பார்லி., கூட்டம் நள்ளிரவில் கூட்டப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்காவின் கருத்திற்கு பா.ஜ., அளித்துள்ள பதில் பற்றி கூறிய அருண் சோரி, இது தான் அவர்களின் வழக்கமான செயல்பாடு. யஷ்வந்த் சின்காவின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து பா.ஜ.,வில் பலருக்கும் இதே போன்ற கருத்து உள்ளது. ஆனால் தயக்கம் அல்லது பயத்தின் காரணமாக அவர்கள் கேள்விகள் எழுப்புவதில்லை.

இவ்வாறு அருண் ஷோரி கூறியுள்ளார்.