Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது.

இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது.

ஆனால் 140 கோடி மக்களின்
தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய
மக்களவை உறுப்பினர்களை நாம்
பெரும்பான்மை அடிப்படையில்
தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின்,
5 ஆண்டுகளுக்கு அவர்களை
திரும்ப அழைக்கவே முடியாது.
இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை.
வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை
அளிக்கப்பட்டுள்ள தேசத்தில்
அவர்களை நீக்குவதற்கான அதிகாரம்
வழங்கப்படாததே ஒருதலைப்பட்சமானதுதான்.
ஆகையால் ஏப். 19இல் வாக்களிக்கும்
முன்பாக நாம் ஒரு நிமிடம் சிந்தித்து
வாக்களிப்பது அவசியமாகிறது.

தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டாலே
அது அயோக்கியனுக்கும், கேடுகெட்ட
அயோக்கியனுக்குமான நேரடி போட்டியாகி விடுகிறது.
நாம் தேர்ந்தெடுக்கப்போவது அயோக்கியனையா?
அல்லது கேடுகெட்ட அயோக்கியனையா?
இந்த இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன.
இவர்கள் இருவருமே சேர்ந்து மூன்றாவது
வாய்ப்பை உருவாக விடாமல்
மிக சாமர்த்தியமாக தடுத்து விடுகின்றனர்.
இதை திருவாளர் பொதுஜனங்கள் உணர்வதே இல்லை.
ஒன்று நம்மை நாமே சுட்டுக்கொண்டு மடிய வேண்டும்;
அல்லது, நம்மை கொல்லக்கூடிய
முகவரை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனில், இங்கு வாக்காளர்கள் மடிவது
என்பது மட்டுமே நிலையானதாகி விடுகிறது.

2009 முதல் 2014 வரையிலான
மன்மோகன்சிங் தலைமையிலான ஐ.மு.கூ. அரசில்
2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் ஊழல்,
காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல்
என்று வரிசைக்கட்டிய ஊழல்களால்தான்
காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பினர்.

2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக குஜராத்தில் இருந்து இந்தியாவுக்கான மீட்பராக நரேந்திரமோடி வந்துவிட்டார் என்று திட்டமிட்டு அவரைச் சுற்றி ஒரு நாயக பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

ஐ.மு.கூ. அரசு கொண்டு வந்த ஆதார்,
வங்கிகள் மூலமான நேரடி பணப்பயன்,
ஜிஎஸ்டி, நீட் ஆகியவற்றை கடுமையாக
எதிர்த்து வந்த பாஜக, ஆட்சிக்கு வந்த பின்னர்
அவற்றை எல்லாம் காங்கிரஸை விட
வேக வேகமாக நடைமுறைப்படுத்தியது.

ஊழலுக்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டே நரேந்திர மோடி தலைமையிலான ஜே.ஜ.கூ., அரசு, தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் சட்டப்பூர்வமாக கொள்ளையடிக்கும் உத்தியை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதுவும் காங்., ஆட்சியின்போது கொண்டு வந்த திட்டம்தான். ஆனாலும் திருடுவதில் காங்கிரஸ் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தால், சங்கிகளோ அசுரத்தனமாக வேட்டையாடுகின்றனர்.

நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள்
தனது லாபத்தில் அதிகபட்சம் 7.5 சதவீதம்
வரைதான் நன்கொடை வழங்க முடியும்;
நிறுவனம் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம்
3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்;
20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை
வழங்கினால் கணக்கில் கொண்டு வர வேண்டும்
என்றெல்லாம் விதிகளை வகுத்து இருந்தது
முந்தைய காங்கிரஸ் அரசு.
ஆனால் மோடி அரசோ, இவற்றை ரத்து செய்துவிட்டு,
யார் வேண்டுமானாலும் எவ்வளவு
வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என்றது.
இந்த இடம்தான் விஞ்ஞானப்பூர்வ
ஊழலுக்கான ஆரம்பப்புள்ளி.

மோடி அரசின் ஊழல் பணமெல்லாம்
பினாமி நிறுவனங்களின் பெயர்களில்
மீண்டும் கட்சிக்கே தேர்தல் நிதி பத்திரங்கள்
மூலம் திரும்பி வந்தன.

கடந்த 2019 முதல் 2024 வரையிலான
காலக்கட்டத்தில் தேர்தல் நிதி பத்திரங்கள்
நன்கொடை மூலம் பாஜக 6061 கோடி
ரூபாயை வாரிச்சுருட்டி இருக்கிறது.
அதுவும், தனது கூலிப்படைகளான
ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ., ஏஜன்சிகள் மூலமாக
கார்ப்பரேட் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி,
அவர்களை அச்சுறுத்தி நன்கொடை என்ற
பெயரில் பணம் பறித்து இருக்கிறது பாஜக.

கோவையைச் சேர்ந்த லாட்டரி மாபியா மார்ட்டின்,
அவருடைய மருமகன் ஆதவ் அர்ஜூனுக்குச்
சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனத்தில் ஐ.டி.,
ரெய்டு நடத்திய பாஜக அரசு, அவர்களிடம் இருந்து
அடுத்த சில மாதங்களில் 1368 கோடி ரூபாயை
நன்கொடையாக அள்ளியிருக்கிறது.

காவிகளின் ஸ்டைல்
இப்படியானது மட்டுமல்ல…
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம்
நன்கொடைகளைப் பெறுவதும்;
நன்கொடை வழங்கிய நிறுவனங்களுக்கு
கோடிக்கணக்கான மதிப்புள்ள
அரசுப்பணிகளை ஒப்பந்தங்கள் வழங்குவது என்ற
விஞ்ஞானப்பூர்வமான ஊழலைச் செய்துள்ளனர்.
அப்படி, நன்கொடை வழங்கிய 33 நிறுவனங்களுக்கு
172 ஒப்பந்தப்பணிகளை வழங்கியிருக்கிறது
மோடி – அமித்ஷா கூட்டணி.

ஈ.டி., ஐ.டி., ரெய்டுகள் நடத்தப்பட்ட
41 நிறுவனங்களிடம் இருந்து 2417 கோடி ரூபாய்,
தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக
நன்கொடையாக பெற்றிருக்கிறது.
கணக்கில் வந்தவை மட்டுமே இவ்வளவு எனில்,
கணக்கில் வராதது சில லட்சம் கோடிகளைத்
தாண்டும் என்கிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து
நன்கொடைகளை பெற முடியாது என்ற நிலையில்
கடந்த 2010ல், காங்கிரஸூம், பாஜகவும்
வேதாந்தாவிடம் நன்கொடை பெற்று இருந்தது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில்,
டெல்லி உயர்நீதிமன்றம் இரு கட்சிகள் மீதும்
நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு
உத்தரவிட்டு இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு
இரு கட்சிகளும், தேர்தல் ஆணையமும்
உயர்நீதிமன்ற தீர்ப்பை
கிடப்பில் போட்டுவிட்டன.

முதல்கட்ட தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை கச்சத்தீவு குறித்து காங்கிரஸூம், பாஜகவும் மாறி மாறி அறிக்கை அரசியல் செய்து வந்த நிலையில், இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு பற்றி வாயே திறக்கவில்லை. சீனாவின் ஊடுருவலுக்கு எதிராகவும் இருவருமே கப்சிப்தான். அதாவது திருட்டு, ஊழல் என்றால் இரண்டு தேசிய கட்சிகளுமே ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. சுருட்டலின் அளவும், வேகமும் மட்டுமே இவர்களிடம் சற்று வேறுபடுகிறது.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளும் யோக்கியவான்கள் அல்ல. அக்கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் கணிசமான நன்கொடைகளை அள்ளி இருக்கின்றன.

ஏப். 17ஆம் தேதி வெளியான பத்திரிகைகளில் திமுக அளித்துள்ள முழுப்பக்க விளம்பரத்தில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பணப்பயன்களை வழங்குவதாக பொய் மூட்டையை அள்ளி விட்டிருந்தது. ஒரு குடும்பத்தில் முதியோர் உதவித்தொகை அல்லது வேறு பணப்பயன்கள் பெறுபவர் இருந்தால், அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது. ஆனால் திமுக கொடுத்துள்ள விளம்பரத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கும் குடும்பத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக நா கூசாமல் அடித்து விட்டுள்ளனர்.

சாதாரண ரேஷன் கடை சேல்ஸ்மேன் பணிக்கு கூட 9 லட்சம் ரூபாயும், கிளரிகல் பணிக்கு 12 லட்சம் ரூபாயும், மாநகராட்சி கிளரிகல் பணிக்கு 40 லட்சம் ரூபாயும் வாங்கிக்கொண்டுதான் பணி நியமன உத்தரவே வழங்குகிறது இந்த திராவிட மாடல் அரசு. ஜிஎஸ்டி வரி விதிப்பு மட்டுமின்றி, கடும் மின் கட்டண உயர்வாலும் ஜவுளி மற்றும் சிறு, குறு தொழில்கள் பெரிய அளவில் முடங்கி விட்டதுதான் உண்மை.

அண்ணா திமுகவை பொருத்தவரை, மாநிலத் தலைமை மீதுதான் அதிருப்தியே தவிர, பாஜக தலைமையுடன் அல்ல. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்வார்கள். ஆக, எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல் எல்லாம் ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க முடியாது. நடப்பது மக்களவை தேர்தல் என்பதை மறந்துவிட்டு, இப்போதும் உள்ளூர் பஞ்சாயத்தையே பேசிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி.

ஊழல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்தான் என்றாலும் கூட, இன்றைய நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களால் இந்த தேசம் வேறு ஒரு பேராபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை வாக்காளர்கள் மறந்து விடக்கூடாது.

ஆர்எஸ்எஸின் இந்து ராஷ்டிரத்தை
நிறுவுவதற்கான எல்லா வேலைகளையும்
செய்து வருகிறது பாஜக.
மீண்டும் மோடி தலைமையிலான அரசு அமையுமெனில்,
அவர்கள் தேர்தல் ஜனநாயகம் என்ற
நடைமுறையையே பூண்டோடு அழித்து விடுவார்கள்.
அவர்கள் இந்த தேசத்தை நான்கைந்து
பிராந்தியங்களாக பிரித்து,
அதிபர் முறையை கொண்டு வருவார்கள்
என்ற அச்சம் ஜனநாயகவாதிகளுக்கு உள்ளது.

இப்படியான அச்சத்தை
இலகுவாக கடந்து முடியாது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பதை
சங்க பரிவாரங்கள் தீர்க்கமாக
முழக்கமிடுகின்றன.
இது இந்த நாட்டின் மிக வலிமையான
அம்சமான பன்மைத்துவத்தை
சுக்கல் சுக்கலாக தகர்த்து விடும்.
பல மாநிலங்களின் ஒன்றிணைவே
இந்திய ஒன்றியம் ஆகும்.
பன்மைத்துவத்தை துண்டாடுவது என்பதே
அரசியல் அமைப்புக்கு எதிரானதுதான்.
இந்தியா என்ற பெயரை ஒழித்துவிட்டு
சனாதனப் பார்வையில் பாரத் என்ற
சொல்லை முன்னிலைப்படுத்துவதுதான்
ஆர்எஸ்எஸ் சங்கப் பரிவாரங்களின் சதித் திட்டம்.

யுஎஸ்ஏ போல, ‘யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் இண்டியா’ (யுஎஸ்ஐ) என்ற கருத்து உருவாக்கம் பெற்று வரும் நிலையில், சிஏஏ மூலம் மத ரீதியாக பிரித்தாள்வதும், ஒரே தேர்தல் என்பதும் தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளதும்கூட மைனாரிட்டி சமூகங்கள் மீதான தாக்குதலாகும்.

மாறுபட்டு இருக்கும் உரிமையை நாம் இழந்துவிட்டால், சுதந்திரமாக இருக்கும் சலுகையை நாம் இழந்து விடுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரி. அப்படி என்னதான் இந்துக்களின்
பாதுகாவலனாக பாஜக திகழ்கிறது என்றால்
அதிலும் கேள்விகளே மிஞ்சும்.
பட்டியல் சமூகத்தினரை புறந்தள்ளி,
ஓபிசி சமூகத்தினரை மையப்படுத்தியே
திட்டங்களை வகுத்து வருகிறது.
இப்போதுவரை பாஜக, உழைக்கும்
வர்க்கத்தினருக்கான கட்சியாக அல்லாமல்,
எலைட் பிரிவினருக்கானதாகவே
இருந்து வந்திருக்கிறது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிலும்,
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிலும்
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர்
திரவுபதி முர்முவை அழைக்காத பாஜகதான்,
2025ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக
அறிவிக்கப் போகிறது என்பது பெரும் நகைப்புக்குரியது.
கணவரை இழந்தவர் என்பதாலேயே
இந்த விழாக்களில் அவரை
அழைக்கவில்லை பாஜக.
இதுதான் சனாதனம்.
இதை வேரறுக்க வேண்டியது
நமது கடமை.

ஊழலுக்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டே அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்கிறார் மோடி. துறைமுகத்தில் இருந்து விமான நிலையங்கள் வரை அதானி கையில் ஒப்படைத்துவிட்டு கமிஷன் பெறும் அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது பாஜக அரசு. முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக ஜாம் நகர் விமான நிலையத்தை வாடகைக்கு விட்டதுதான் மோடி தலைமையிலான கேடுகெட்ட தரகு அரசாங்கம்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது; விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளன. வேடிக்கை என்னவெனில், இவை கடந்த 2014, 2019 தேர்தல் அறிக்கையிலும் சொல்லப்பட்டவைதான்.

செல்லும் இடங்களில் எல்லாம் 56 அங்குல மார்பை விரித்துக்காட்டி உரக்கப்பேசும் நரேந்திர மோடி, இந்தியாவில் உயரடுக்கில் உள்ளவர்களுக்கும் கடைநிலையில் உள்ளவர்களுக்குமான இடைவெளியை குறைப்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மோடி பரிவாரில் கடைநிலை என்ற வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட வேண்டியது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இந்த தேசத்தில் உயரடுக்கில் உள்ள ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் 58 சதவீத சொத்துகள் உள்ளன. இதுவே அமெரிக்காவில் ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் 37 சதவீத சொத்துகள் உள்ளன. அமெரிக்காவை விட இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம்.

நாட்டின் மொத்த வரி வருவாயில் 50 சதவீதத்திற்கு அதிகமான வருவாய், கடைநிலையில் உள்ள 64 சதவீத மக்களிடம் இருந்துதான் பெறப்படுகின்றன. ஆனால், கடந்த பத்து ஆண்டு கால மோடி ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் 14 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரிச்சுமை மட்டும் ஏழைபாலைகள் மீது திணிக்கப்படுகின்றன. பட்டினி குறியீட்டில் இன்னும் இந்தியா மோசமான நிலையில்தான் இருக்கிறது. சங்கிகளின் ராஜ்ஜியத்தில் சாமானியர்கள் மீது துளியும் இரக்கம் இல்லை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று சொல்ல முடியும்?

அருணாச்சல் பிரதேசத்தில் ஊடுருவி குடியிருப்புகளே கட்டிவிட்ட சீனாவை வார்த்தை அளவில்கூட கண்டிக்க முடியாத மோடிதான், தனக்கு பரந்த மார்பு இருப்பதாக புஜபலம் காட்டுகிறார்.

நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, தொழில் வளர்ச்சி, தனி நபர் வருமான உயர்வு என எல்லாவற்றிலும் பின்தங்கிவிட்ட இந்த அரசு முதலாளிகளுக்கு மட்டுமே முழுநேரமாக சிந்தித்து, நாட்டின் வளங்களை சுரண்டி வருகிறது.

என்னதான் ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிபட்டுக் கொண்டே இருந்தாலும், எப்போதெல்லாம் மாநில உரிமைகள் காவு வாங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராக திமுக குரல் கொடுக்க தயங்கியதே இல்லை. அக்கட்சிக்கு இன்று கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாமல் போனாலும் அறிவுஜீவிகள் குழு உயிர்ப்புடன்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 51 சதவீதம் ஆகிவிட்ட நிலையில், 2030க்குள் நாட்டில் உயர்கல்வி பெறுவோரை 50 சதவீதமாக்க இலக்கு நிர்ணயிக்கிறது மோடியின் அரசு. கல்வி, மருத்துவம், பொருளாதாரம், ஏற்றுமதி வர்த்தகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என தமிழகத்தின் தனித்துவமான வளர்ச்சிக்கு இரு திராவிட இயக்கங்களுமே காரணம்.

இதை உணராது ஓபிசி பிரிவினரும், சமூகத்தில் மேலடுக்கில் உள்ளவர்களும் காவிகளுக்கு கம்பளம் விரிப்பது என்பது பிற்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர்வதாயில்லை.

மாநில சுயாட்சி, சமூக நீதி கொள்கைகளுக்கு பங்கம் விளையும் போதெல்லாம் அதை எதிர்த்து களமாடுவது திராவிட இயக்கங்கள்தான். குறிப்பாக, திமுக இக்கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

சமூகநீதி, மாநில சுயாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றை குழி தோண்டி புதைக்கும் பாஜகவை புதைகுழியில் இறக்கி சமாதி கட்ட வேண்டியது இப்போதைய அவசியமாகிறது. உள்ளூர் சண்டையை பின்னர் வைத்துக் கொள்ளலாம்.

பாஜக, நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு.

 

– பேனாக்காரன்

Leave a Reply