Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

இந்தியா போன்ற புராதன நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடுகளில் காதல், திருமணம், குழந்தைப்பேறு, கலவி குறித்த சங்கதிகள் யாவுமே அளவுக்கு அதிகமாகவே புனிதமாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புனிமாக்கும் போக்கு, ஒருவேளை சமூகத்தில் குற்றங்கள் பெருகி விடும் என்ற அச்சத்தினாலோ அல்லது அறியாமையினலோகூட இருக்கலாம். சொல்லப்போனால் அத்தகைய உணர்வுகள் புனிதங்களே அல்ல.

 

ஆனால் ஆண், பெண் உடலியலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை பதின்பருவ சிறுவர், சிறுமிகளுக்கு கற்பிக்காமலே வந்திருப்பது ஆகப்பெரும் சமூகக் குற்றமாகத்தான் பார்க்கிறேன். அப்படியான ஒரு சங்கதி பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

 

நடிகர் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’யில், ஒரு காட்சியில் ‘தலைவாசல்’ விஜய், ”இந்த பசங்க பாத்ரூமுக்குள் போய் அப்படி ரொம்ப நேரமா என்னதான் பண்ணுவானுங்களோ…?” என்று சலிப்புடன் கூறுவார். எல்லோருமே பதின்பருவக் கோளாறுகளை அல்லது உளவியல் மாற்றங்களை கடந்து வந்திருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பதின்பருவ பிள்ளைகளைக் கையாளுவதில் ஏனோ தேர்ச்சி பெறவே இல்லை.

இது ஒருபுறம் இருக்க, தலைமுறை தலைமுறையாக சித்த வைத்தியம் அளித்து வருவதாகச் சொல்லி வரும் சித்த வைத்திய சிகாமணிகள், ஆண் பிள்ளைகளின் சுயஇன்பப் பழக்கத்தை பூதம்போல் கட்டமைக்கவே முனைகின்றனர். ஏதோ, ஒவ்வொரு துளியிலும் உயிர்க்கொலை செய்வதுபோல. சுய இன்பம் (Masturbation) செய்வதால், ஆயுள் குறைந்து போகும் என்றும், ஆண்மை பறிபோகும் என்றும் எதை எதையோ சொல்லி மிரட்டுகிறார்கள் சித்தவைத்திய சிகாமணிகள்.

 

சுயஇன்பம் குறித்த தெளிவான புரிதலும் நம் சமூகத்தில் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால், உளவியல் ஆலோசகரான மருத்துவர் ஷாலினி, தனது யூடியூப் பக்கத்தில் சுயஇன்பம் பற்றிய குழப்பங்களுக்கு தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். அதை நாம், நமது ‘புதிய அகராதி’ வாசகர்களுக்காக இங்கே கொடுத்திருக்கிறோம்.

 

மருத்துவர் ஷாலினியின் உரையில் இருந்து…

 

”இளம் ஆண்களுக்கு தங்களது ஆணுறுப்பு நீளம் பற்றிய கவலை இருக்கு. அவர்களின் உடல் பற்றி நிறைய சந்தேகம் இருக்கு. இதுபற்றி அவர்கள் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இங்கே குறைவு. அதனால், இணையங்களில் கிடைக்கும் செக்ஸ் வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அது, பல நேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படவும் வாய்ப்பு உள்ளது.

 

ஆணுறுப்பு சைஸ் சின்னதாக இருக்கிறதா? அல்லது சரியான அளவில் இருக்கிறதா? என்பது பல இளம் ஆண்களுக்கு கவலை அளிக்கக்கூடிய கேள்வியாக இருக்கிறது. மனித ஆண்களுக்கு, தளர்ந்த நிலையில் 8 முதல் 9 செ.மீ. வரையிலும், விறைப்பான நிலையில் 12 முதல் 13 செ.மீ. நீளமும் இருக்கும். கலவியில் ஈடுபடுவதற்கு இந்த நீளம் போதுமானது. பெண்ணின் யோனி (பெண்ணுறுப்பு) குழாயின் நீளத்திற்கு, ஆணுறுப்பின் இந்த நீளம் போதுமானது.

 

உடலுறவின்போது ஒரு பெண்ணுக்கு இன்பம் கிடைப்பது என்பது ஆண்குறியின் நீளத்தை பொருத்தது அல்ல. கலவியில் ஈடுபடும் வழிமுறைகளைப் பொருத்தே பெண்ணுக்கு இன்பம் கிடைக்கிறது.

 

ஆண்குறியை பார்த்து சக பையன்கள் கிண்டல் செய்ய வேண்டியதில்லை. ஒரு இளம் ஆனுக்கு ஆண்குறி சின்னதாக இருக்கிறது என்றோ, நீளமாக இருக்கிறது என்றோ கிண்டலடித்தோ, அவர்களை காயப்படுத்தியோ மகிழ்ச்சிய அடையத் தேவையில்லை. ஆண்குறியின் நீளத்தை வைத்து கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும்.

 

ஆண்கள் கவலைப்படும் இரண்டாவது விஷயம், சுயஇன்பம் பற்றியது. பெண்களுக்கும் இத்தகைய பழக்கம் இருந்தாலும், அவர்கள் சுயஇன்பம் பற்றி குற்ற உணர்ச்சிக் கொள்வதில்லை. ஆனால் ஆண்கள் சுயஇன்பம் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். சுயஇன்பம் என்பது ஒரு குழந்தை, அம்மா அருகில் இல்லாதபோது விரல் சூப்புவது போலதான். அய்யய்யோ நான்தான் இப்படி பண்ணிட்டேன். நான்தான் ‘பேட் பாய்’ என்று குற்ற உணர்ச்சி கொள்கின்றனர். எல்லா ஜீவராசிகளும் சுயஇன்பம் கொள்கிறது. ஆண் குழந்தைகளுக்கு உடலில் ஏதோ ஒரு விளையாட்டு சாமான் போலதான் ஆணுறுப்பு இருக்கிறது.

 

மனித ஆணுக்கு மட்டும் ஏன் இந்த பயம்… ‘ஓவர் ரியாக்ஷன்’ என்றால், நம் மதங்கள் சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்களை பயங்கரமாக மிரட்டுகின்றன. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை எப்படி பிறக்கிறது என்பது குறித்த தெளிவான அறிவு இல்லை.

 

ஆண்களிடம் இருந்து பெண் உடலுக்குள் செல்லும் விந்தணுக்களால்தான் குழந்தை பிறக்கிறது. பெண்ணிடம் இருந்து ஆண் உடலுக்குள் எதுவும் செல்வதில்லை. எனில் ஆணிடம் இருந்து வெளியேறும் விந்தணுவால்தான் குழந்தை பிறக்கிறது. அதனால் ஒவ்வொரு விந்தணுவிலும் ஒரு குட்டிப்பையன் இருக்கிறான். அப்படியெனில், சுயஇன்பத்தின் மூலம் விந்தணுக்களை வீணடிச்சிட்டியா? நீ எவ்வளவு பெரிய கொலைகாரன்? நீ ஒரு மாபெரும் பாதகன் என்றெல்லாம் சொல்லி வந்துள்ளனர்.

இதைப்பற்றி நிறைய புராண கதைகள் கூட இருக்கு. சுயஇன்பத்தின் மூலம் விந்தணுக்களை விரையமாக்கியதால் கடவுள் தண்டித்து விட்டார் போன்ற கதைகளும் இந்து புராணங்களில் மட்டுமின்றி எல்லா மத புராணங்களிலும் சொல்லப்பட்டு உள்ளன.

 

இதுவே அறிவியல் பூர்வமாக தவறு. ஒரு மனிதனின் விந்தணுவில் ஒரு மனுஷக் குழந்தை எல்லாம் கிடையாது. வெறும் 23 குரோமோசோம் மட்டும்தான் இருக்கு. அது மட்டுமே குழந்தை பிறப்புக்கு போதுமானது இல்லை. பெண்ணின் உடலில் உள்ள இன்னொரு 23 குரோமோசோமுடன் சேர்ந்து 46 குரோமோசோம்களாக சேர்ந்த பிற குதான், குழந்தை உருவாக ஆரம்பிக்கிறது.

 

ஓர் ஆணின் உடலில்,
ஒரு நாளைக்கு உற்பத்தியாகிற
200 மில்லியன் விந்தணுக்களில்,
ஒருவேளை அவன் உடலுறவு
கொண்டால், குழந்தை பிறக்க
ஒரே ஒரு உயிரணு மட்டும்தான்
பயன்படும். மிச்சமிருக்கிற
199 சொச்ச மில்லியன்
உயிரணுக்களும் பயனற்றதுதான்
என்பது அறிவியல் பூர்வமாக
இன்று நமக்குத் தெரியும்.
அதைப்பற்றி நாம்
கவலைப்படத் தேவையில்லை.

 

ஆகையால்,
ஓர் ஆண் சுயஇன்பம்
கொள்கிறான்…
விந்து விரையமாகிறது
என்பதால் அதனால்
ஏதும் நஷ்டம் இல்லை.
ஏனெனில் அது
வீணாவதற்காகவே
உற்பத்தியாகிறது. ஒவ்வொரு
விந்தணுவையும் பாதுகாப்பதால்
எந்த பயனும் இல்லை.
சுயஇன்பம் செய்வது
குற்றமோ, மனதகுல
துரோகமோ கிடையாது.

 

சுயஇன்பம் கொள்வது என்பது,
அனைத்து ஜீவராசிகளும்
தன்னைத்தானே சமாதானம்
செய்து கொள்வதற்கான
சாதாரண நடவடிக்கைதான்.
அப்படி எனில், டி.வி.க்களில்
சித்த வைத்தியர்கள் சிலர்,
சுயஇன்பம் செய்வதால்
ஆண்மைக் கோளாறு
ஏற்படும் என்றும்,
உன் மனைவி
உன்னை விட்டு பிரிந்து
சென்று விடுவாள் என்றும்
சொல்கிறார்களே…
இதெல்லாம் உண்மையா?
என்று நீங்கள் கேட்கலாம்.

 

‘மெய்ப்பொருள்
காண்பது அறிவு’ என்கிறார்
வள்ளுவர். அதனால்
டி.வி.க்களில் மாற்று
மருத்துவம் பற்றி பேசுவோர்,
உங்களை ஏமாற்றி லேகியம்
விற்பனை செய்யும் நோக்கில்
சுயஇன்பம் குறித்து
தப்பு தப்பாக பேசுகின்றனர்.
அவர்களைப் போன்ற
போலி மருத்துவர்களை
நீங்கள் அடையாளம்
கண்டு கொள்ள வேண்டும்.

 

ஓர் ஆணோ, பெண்ணோ
ஒரு நாளைக்கு ஒருமுறையோ,
இரண்டு முறையோ சுயஇன்பம்
செய்கிறார்கள் எனில்
அதைப்பற்றி நாம்
பெரிதுபடுத்தத் தேவையில்லை.
அது இயல்பானதுதான்.
இளம் ஆண்களுக்கு
கலவியல் தேவைகள் பற்றி
பேசுகிறோம்.
ஒரு பையன் பாத்ரூமில்
கதவை மூடிக்கொண்டு
நீண்ட நேரமாக இருக்கிறான்
என்றால், வெளியே நின்று
கதவைத் தட்டிக்கொண்டு
இருக்கும் அம்மாவும்,
அப்பாவும் அவனை எப்படி
கையாள வேண்டும்
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்.

 

அம்மாக்களுக்கு, இவ்வளவு நாள் நாம் நம் பையனை குழந்தையாக நினைத்தோமே, இப்போது அவனுக்கு இதுபோன்ற பழக்கம் வந்துவிட்டதே என்று அதிர்ச்சி அடைகின்றனர். எல்லா காலத்திலும் பிள்ளைகள் குழந்தைகளாகவே இருந்தால்கூட சந்தோஷப்படும் அம்மாக்கள் இன்றும் இருக்கிறார்கள். மகன், பெரியவனாகி விட்டான். அவன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டு, அதுகுறித்து வெளிப்படையாக அப்பாக்கள் பேசுவதும் இல்லை.

 

ஒரு வயதுக்கு வந்த ஆண், தனிமை வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. வயது வந்த மகனிடம் வெளிப்படையாக பேச வேண்டும். நீ தனியாக இருக்க விரும்பினால் அதுபற்றி அந்தப்பையனும் பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்லலாம். இருதரப்பிலும் புரிதல் அவசியம். அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கக்கூடாது. இளம் ஆணின் சில செயல்களை பகடையாக்கி குற்றம் சொல்லக்கூடாது.

 

ஓர் ஆணுக்கு கலவியல் தன்மையில் தையரிமும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். ஆண்கள் தங்கள் மீது தன்னம்பிக்கையுடனும், சுய மரியாதையுடனும் இருந்தால்தான் சமுதாயத்தில் வெற்றி பெற முடியும். ஓர் ஆணுக்கு, எனக்கு பதற்றமாக இருக்கு; நான் நல்லாருக்கேனானு தெரியல. எனக்கு ஆண்மை இருக்கோ இல்லையோ… என்று சந்தேகம் வந்தால் விளையாட்டுகளில் ஈடுபடவோ, சமூக மாற்றத்தைக் குறித்தோ யோசிக்க முடியாது.

 

கடைசி வரைக்கும் தான் சரியாக இருக்கிறோமா இல்லையா என்ற சிறிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கி விடக்கூடும். நம்ம ஆண் குழந்தைகளுக்கு கொடுக்ககூடிய மிகப்பெரிய பரிசு, அவர்களுக்கு மரியாதை தருவது… நீ நல்லாதான் இருக்க… என்று சுய அபிப்ராயத்தை அதிகரிக்கச் செய்வதுதான் மிகப்பெரிய பரிசு.

 

அதுதான் அவர்களுக்கு
சந்தோஷத்தைத் தரும்.
அப்படி ஒரு குழந்தை
தன்னைப் பற்றி உயர்வாக
நினைக்கும்போதுதான்,
அந்த குழந்தை அடுத்தடுத்த
விஷயத்தைப் பற்றி யோசிக்கும்.
சமுதாயத்திற்கு பயனுள்ள
நபராக அந்தக்குழந்தை மாறும்.
அதை விட்டுவிட்டு நம்
ஆணுறுப்பு சரியாக இருக்கிறதா?
இயலாமை பற்றியோ சிந்தித்துக்
கொண்டிருக்கக் கூடாது.
பெற்றோர்களும், சமூகமும்
குழந்தைகளை பாசிட்டிவாக
ஹேண்டில் செய்வது
அவசியமானது,” என்கிறார்
மருத்துவர் ஷாலினி.

 

– பேனாக்காரன்