காதலிப்பதும்
காதலிக்கப்படுவதும்
மானுடப் பிறவிக்கு
மட்டுமேயானது. காதலில்
விழுந்தோர்க்கு வெற்றி,
தோல்வி எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் காதல் மட்டும்
தோற்பதில்லை. இப்பிறவியில்
காதல் அனுபவங்கள்
இல்லாதவர்கள், எத்தகைய
சுகபோகங்களை பெற்றவராக
இருந்தாலும் கூட,
ஒரு வகையில் குறை
உடையவர்களாகவே
கருதுகிறேன்.
காதலே தலைமை இன்பம்
என்கிறான் பாரதி.
காதலிப்போருக்கு மரணம்
பொய்யாகும்;
கவலைகள் போகும்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே! என்று
அறைகூவல் விடுக்கின்றான்.
மார்க்ஸ் – ஜென்னியின்
காதல் பேசப்பட்ட அளவுக்கு,
செல்லம்மா மீது பாரதி
கொண்ட அளப்பரிய
காதல் பேசப்படவில்லை.
நாமும் இப்போது
பாரதியைப் பற்றி பேச
வரவில்லை.
‘இலக்கியம் பேசுவோம்’
பகுதியில் மீண்டும்
சங்க இலக்கியமான
குறுந்தொகையில் இருந்து
இன்னொரு காதல் பாடலைப்
பற்றி பேசுவோம்.
பார்த்த உடனே காதல் எப்படி வரும்?
இந்த ஐயம்
இப்போது வரை
எல்லோருக்கும் இருக்கிறது.
அது சரி… பார்த்த உடனே
காதல் வருமா?
சுத்த பைத்தியக்காரத்தனமாக
இருக்கு என்ற
எதிர்க்கருத்துகளும் உண்டு.
ஆனால், தீர யோசிப்பதற்கு
இடமே இல்லாமல்
பார்த்தவுடன் பற்றிக்
கொள்வதுதான் காதல்.
அப்படித்தான்
குறுந்தொகையும் சொல்கிறது.
ஒரு மொட்டு, இதழ்களை விரிப்பதற்கான நேரம்… ஒரு பாஸ்பரஸ் பட்டையின் மீது தீக்குச்சி உரசுவதற்கும் அது தீப்பற்றிக் கொள்வதற்கும் இடைப்பட்ட நேரம்… கண்களை மூடி மீண்டும் இமைகளைத் திறப்பதற்கு ஆகும் நேரம்… இருதயத்தின் ஒரு Ôலப்டப்Õக்கும் இன்னொரு Ôலப்டப்Õக்கும் இடையிலான நேரம்…. தலைவன் தலைவி இடையே காதல் தீ பற்றிக்கொள்வதற்கும் அவ்வளவுதான் நேரம். எளிமையாகச் சொல்வதெனில் விரலில் சொடக்குப் போடும் நேரம் போதுமானதாக இருக்கிறது. காதல் வயப்படுவதற்கு மட்டும்தான் இத்தனை சுருக்கமான நேரம் தேவைப்படுகிறது. அடுத்தடுத்தக் கட்டத்திற்கு நகர பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். அது வேறு கதை.
குறுந்தொகையில் வரும் ஒரு பாடலில், தலைவன் முதன்முதலாக தலைவியைப் பார்க்கின்றான். அந்த நொடியிலேயே அவள் மீது காதல் வயப்பட்டு விடுகிறான். அதன்பிறகு அவன் தலைவியிடம் மொழிவதாக பாடலின் சூழல் அமைக்கப்பட்டு உள்ளது.
இலக்கிய ஆர்வலர்கள் பலரும் அறிந்த பாடல்தான்.
”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்,
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
(குறு.: 40)
பொருள்:
யாய் – தாய்
ஞாய் – தாய்
எந்தை – என் தந்தை
நுந்தை – உன் தந்தை
செம்புலம் – செம்மண் நிலம்
பெயல்நீர் – மழை நீர்
மொத்தமே ஐந்து வரிகள்தான். செம்புலப்பெயல்நீரார் என்ற புலவர் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். புலவரின் பெயரும் கற்பனைதான். இப்போது வரை சில தமிழ்ப்படங்களில் கூட இந்தப் பாடலை கையாண்டுள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில்
வெளியான ‘இருவர்’ படத்தில்,
‘நறுமுகையே நறுமுகையே…’
என்ற பாடலில் இடைச்செறுகளாக
மேற்சொன்ன குறுந்தொகைப்
பாடலை கவிஞர் வைரமுத்து
பயன்படுத்தி இருப்பார்.
வைரமுத்துவே
சங்க இலக்கியத்தை
தழுவிக் கொள்ளும்போது,
வாலி மட்டும் விடுவாரா என்ன…
அவரும் தன் பங்குக்கு,
சூர்யா, பூமிகா நடித்த
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில்
வரும் ‘முன்பே வா
என் அன்பே வா…’
என்ற பாடலில்,
‘நீரும் செம்புலச்சேரும்
கலந்தது போலே
கலந்தோம் நாம்…’ என
மேற்சொன்ன குறுந்தொகை
பாடலில் வரும் உவமையை
மட்டும் பயன்படுத்தி
இருப்பார்.
கடந்த 2019ல்
வெளியான ‘சகா’
என்ற படத்தில், ‘யாயும் ஞாயும்…’
என்ற குறுந்தொகை பாடலை
பல்லவியில் முழுமையாகப்
பயன்படுத்தி இருப்பார்கள்.
அந்தளவுக்கு காலம்
கடந்தும் நிற்கும் பாடலாக
மேற்காணும் பாடல்
அமைந்துள்ளது.
மற்றொரு சங்க
இலக்கியமான
திருக்குறளிலும் கூட,
”புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து” (1323)
நிலமும் நீரும் எப்படி
ஒன்றாய் கலந்திருக்கிறதோ
அப்படி பிரிக்க முடியாத
அன்பு கொண்ட
காதலி / காதலனிடம்
ஊடல் கொள்வதைக்
காட்டிலும் பேரின்பம்
சொர்க்கத்தில் கூட இல்லை
என்கிறான் வள்ளுவன்.
அதனால்தான் காதலுற்ற போது
காதலி, தன் காதலனைப் பார்த்து,
‘பொறுக்கி’ என்று வசைமாறி
பொழிந்தாலும் கூட,
அவன் சினம் கொள்ளாமல்
ரசிக்கவே செய்கின்றான்.
அதுவே சொர்க்கம்.
எல்லா கவிஞர்களுக்குமே உறுதியான அன்பைச் சொல்ல நீரும் நிலமும் தேவைப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள குறுந்தொகை பாடல், தலைவன் மொழிவதாக எழுதப்பட்டு உள்ளது.
பாடலின் பொருள்:
”என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் யாரென்று தெரியாது. என் தந்தையும், உன் தந்தையும் எந்த வகையில் உறவுக்காரர்கள் என்பதும் தெரியாது. எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம் என்றும் தெரியவில்லை. ஆனால், செம்மண்ணில் பெய்த மழை நீர் ஒன்று கலந்த பிறகு, அந்த செந்நீரில் இருந்து சிவப்பு நிறத்தை எப்படி தனியாக பிரிக்க முடியாதோ அதுபோல நம்முடைய இரு இதயங்களும் இனி ஒருபோதும் பிரியாதவாறு ஒன்றாய் கலந்து இருக்கும்,” என்கிறான் தலைவன்.
முதல் பார்வையிலேயே தலைவன், செம்மண்ணில் கலந்த மழை நீர் போல இரு மனங்களும் ஒன்றாய் கலந்திருக்கும் என்ற அழுத்தமான உத்தரவாதத்தை ஏன் அளிக்க வேண்டும்?
பார்த்த மாத்திரத்திலேயே காதலைச் சொல்லிவிட்டானே… இவனை எப்படி நம்புவது? என்று தலைவி ஒரு கணம் யோசித்திருக்கிறாள். பெண் என்றால் உள்ளடக்கமாக ஐயுணர்வும் சேர்ந்தே பிறந்து விடும் போலிருக்கிறது.
அந்த ஐயத்தின் வெளிப்பாட்டை அவள் நெற்றிச்சுருக்கி உடல்மொழியால் உணர்த்துகிறாள். அவளின் ஐயத்தை குறிப்பால் உணர்ந்து கொண்ட தலைவன், செம்மண்ணில் கலந்த மழை நீர் போல நம் இருவரின் மனங்களும் ஒன்றாய் கலந்திருக்கும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறான்.
பாடலை சீர் பிரித்து எளிமையாக தந்திருக்கலாம்தான். பாகற்காயை சமைக்கும்போது, வெல்லம் சேர்க்காமல் அப்படியே சமைத்து சாப்பிட வேண்டும். என்னதான் காதலிக்கு அலைபேசி வழியாக ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாலும், நேரில் இழுத்து அணைத்து ஒரு முத்தமாவது கொடுத்தால்தானே தித்திப்பாய் இருக்கும்? அதனால்தான் பாடலை அதன் போக்கிலேயே பதிவு செய்திருக்கிறேன். எனினும் வாசிப்பதில் கடினத்தன்மை இருக்காது.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
இப்படித்தான் ஒருமுறை குறுந்தொகையின் ‘யாயும் ஞாயும் யாரா கியரோ…. செம்புலப்பெய னீர்போல அன்புடை நெஞ்சம் தான்கலந்தனவே’ என்ற பாடலை முழுவதுமாகச் சொல்லி, இந்தப் பாடலுக்கு விளக்கம் தெரியுமா? என நண்பர்கள் குழாமில் கேட்டேன்.
நான் கேட்டது ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப் பிறகான நேரம். நண்பர்கள் உற்சாகமாக இருந்த நேரமும்கூட.
நண்பர்களில் ஒருவர் சொன்னார்…
”செம்புலப்பெய னீர் போல என்பதற்கு விளக்கம்லாம் தெரியாது. ஆனா… எங்க வூட்ல சொம்புலதான் தண்ணீர் பிடிச்சிக் குடிப்போம் தலைவா…,” என்றார்.
‘தமிழ் வாழ்க’ என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தேன்.
(பேசுவோம்)
– செங்கழுநீர்