Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு சசிகலா சிறைத்துறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருந்தார். இன்று (அக்டோபர் 3) பரோல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரோலில் செல்வதற்கான தகுதிகள் இல்லை என்றுகூறி சிறைத்துறை நிர்வாகம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால் சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆயினும், என்ன மாதிரியான தொழில்நுட்ப காரணங்கள் என்று வெளிப்படையாக யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே, பரோல் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் கூறப்படுகிறது.

ஆளும் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ”அதிமுக பொதுச்செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கணவர் என்ற இடத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அதனால், நடராஜன் என்பவர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடராஜனை என்பவரை காண்பதற்காக அவருக்கு பரோல் அனுமதித்தால் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடும்,” என்று புகார் மனு அளித்திருந்தாராம். இதன் காரணமாகத்தான் சசிகலாவுக்கு திடீரென்று பரோல் அனுமதி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தவிர, வேறு சில காரணங்களும் சொல்கின்றனர்.

சிறை தண்டனை பெற்ற ஒருவர் ஒட்டுமொத்த தண்டனைக் காலத்தில் பாதியை சிறையில் கழித்திருக்க வேண்டும் என்றும், அவரின் நன்னடத்தை சான்றிதழும் சரியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்த இரண்டுமே சசிகலாவுக்கு எதிராக இருப்பதால்தான் பரோலில் செல்ல சிறைத்துறை நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு டிடிவி தினகரன் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அவரை முடக்குவதற்காக இரு நாள்களுக்கு முன் சேலத்தில் அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வெளியிட்டதாகக்கூறி, டிடிவி தினகரன், அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் தேச துரோக பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினகரனை கைது செய்யும் முனைப்பிலும் போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலா வெளிவந்தால் அதன்மூலம் இரட்டை இலை சின்னம் மீட்பு அல்லது கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதற்காகவும் அவரை பரோலில் வெளிவராமல் தடுப்பதற்காக ஆளும் தரப்பும் சில வேலைகளை செய்து வருவதாகவும் பேசப்படுகிறது.