Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

சங்க இலக்கியங்களில் திருக்குறளில் சொல்லப்பட்ட பல பாடல்களை அடியொற்றி, அவ்வையாரும் பாடியிருக்கிறார். இதை ‘கட் – காப்பி – பேஸ்ட்’ என்பதா? அல்லது உயர்ந்தவர்களின் சிந்தனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புரிந்து கொள்வதா?. சங்க காலத்தில் நடந்ததை இப்போது எதற்கு சர்ச்சையாக்குவானேன். என் பாட்டுக்கு ஏதோ ஒன்று சொல்வதைவிட, திரைப்பாட்டுக்கும் வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசி விடுவதே நல்லதென படுகிறது.

சங்ககாலக் கவிஞர்களின் படைப்புகளுக்குள் இருக்கும் ஒப்புமையைப் போல, திரைப்படப் பாடல் ஆசிரியர்களின் படைப்புகளுக்குள்ளும் எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ‘நினைத்ததை முடிப்பவன்’ (1975) படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்…’ என்ற பாடலுக்கும், வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விரிவாகவே பார்த்திருக்கிறோம்.

கவிஞர் மருதகாசி

கவிஞர் மருதகாசிக்கு முன்பே, இதே கருத்தை வலியுறுத்தி கவிஞர் நெல்லை அருள்மணி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதுவும் ‘சூப்பர் ஹிட்’ பாடல்தான். எந்தப் படத்தில் என்கிறீர்களா? சொல்கிறேன். படம் பற்றிய தகவல்களும்கூட மிகவும் சுவாரஸ்யமானதுதான்.

நெல்லை அருள்மணியின் பாடல் இடம்பெற்ற படம், ‘வா ராஜா வா. 1969ம் ஆண்டு வெளியானது. ‘நவராத்திரி’ (1964), ‘திருவிளையாடல்’ (1965), ‘சரஸ்வதி சபதம்’ (1966), ‘கந்தன் கருணை’ (1967), ‘தில்லானா மோகனாம்பாள்‘ (1968) என ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனை வைத்து, தொடர்ந்து ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ படங்களைக் கொடுத்த, ஏ.பி.நாகராஜன்தான், ‘வா ராஜா வா’ படத்தையும் இயக்கியிருந்தார்.

மாஸ்டர் பிரபாகர்

இந்தப் படத்தின் கதாநாயகனும் சிவாஜியாகத்தான் இருக்க முடியும் என்று அப்போது பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், பிரபாகர் என்ற சிறுவனை கதையின் நாயகனாக நடிக்க வைத்தார். மனோரமா, சுருளிராஜன், பேபி சுமதி, வி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஈஸ்ட்மென் கலரில் படம் வெளியானது. பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் முதன்முதலாக இசையமைத்த படம் இதுதான்.

குன்னக்குடி வைத்தியநாதன்

இயக்குநர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியின் தீவிர ரசிகரும்கூட. அதனால்தானோ என்னவோ ‘வா ராஜா வா’ படத்தில் சிறுவன் பிரபாகரனை, சிவாஜியைப் போலவே நடிக்க வைத்திருப்பார். அவனும் நடிகர் திலகத்தை நகலெடுத்தது போலவே நடித்து, அசத்தி இருப்பான். இந்தப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இவையெல்லாம் படத்தைப் பற்றிய தகவல்கள். இனி வள்ளுவத்தைப் பற்றிப் பேசுவோம்.

முப்பாலில் உலகையே அளந்த வள்ளுவன்கூட, போலிகளைக் கண்டு சற்று குழம்பித்தான் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவன்,

”மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்” (108:1071)

என்கிறான். அதாவது, கயவர்கள்கூட பார்ப்பதற்கு சாதாரண மனிதர்கள்போலத்தான் தெரிகின்றனர் என்கிறான்.

பழைய திரைப்படங்களில் வருவதுபோல் கயவர்கள், முகத்தில் மருவுடனோ அல்லது வெட்டுத் தழும்புகளுடனோ, கட்டம் போட்ட முண்டா பனியனோ அணிந்திருக்க வேண்டியதில்லை. கயவர்கள், நடிகர் மாதவன் போல ‘சாக்லெட் பாய்’ தோற்றத்திலும் இருக்கலாம். அதனால்தான், கயவர்கள் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமையை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை என்கிறார் வள்ளுவர். நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதென்றால், ‘பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு…’

குழப்பத்தில் இருந்து விடுபடவும் ‘மெய்யுணர்தல்’ அதிகாரத்தில் வள்ளுவனே தீர்வும் சொல்கிறான்.

”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (36:355)

என்கிறான் வள்ளுவன். அதாவது, எந்த ஒரு பொருளையும் அதன் தோற்றத்தை மட்டுமே கண்டு, நம்பி விடக்கூடாது. தீர ஆய்ந்து உண்மையான இயல்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறான். இதை, ‘அறிவுடைமை’ அதிகாரத்தில் இன்னும் நுட்பமாக பதிவு செய்கிறான்.

”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (43:423)

ஒரு பொருளையோ, நபரைப் பற்றியோ பிறர் சொல்வதைக் கேட்டு அப்படியே நம்பி விடாமல், முழுமையாக விசாரித்து உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதே அறிவுடைமையாகும் என இந்தப் பாடல் வாயிலாகச் சொல்கிறான் வள்ளுவன்.

இதுபோன்ற வள்ளுவக் கருத்துகளை அடியொற்றி, கவிஞர் நெல்லை அருள்மணி எழுதிய பாடல்தான், உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். ‘வா ராஜா வா’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை, எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். இந்தப் பாடல் காட்சியில் சிறுவன் பிரபாகர், தானே பாடுவதுபோல் பாடி நடித்திருப்பான்.

இதோ அந்தப் பாடல்…

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
கிணத்துத் தண்ணி இனிக்குது
கடலு தண்ணி கரிக்குது
நிறத்துலதான் ஒண்ணாக தெரியுது
எடுத்துக் குடிக்கும்போது பேதமெல்லாம் புரியது
(உண்மை எது…)

நத்தையிலே முத்து இருக்கு
நாகத்திலே நஞ்சு இருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
(உண்மை எது…)

காக்கையோடு வானத்திலே கருங்குயிலும் பறக்கும்போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
குயில் பாடும்போது காகம் ஓடிப்போகுது
(உண்மை எது…)

– இளையராஜா சுப்ரமணியம்
தொடர்புக்கு: selaya80@gmail.com