Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தி இல்லை என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக ஆட்சேபித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு தன்னிச்சையாக பேட்டி அளிக்கக்கூட மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களுடன் கட்சிகளைக் கடந்து நட்பு பாராட்டினாலோ, தொழில் ரீதியிலான தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தாலோ உடனடியாக அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவர்.

இத்தகைய ராணுவக் கட்டுப்பாடு எல்லாமே ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே. அவர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருமே ஊடகங்களிடம் தனித்து பேசத்தொடங்கிவிட்டனர். காலையில் ஓர் எம்எல்ஏ பேசியதை மாலையில் ஓ.பன்னீர்செல்வமோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்கள் சார்பில் வேறு யாரேனும் மறுத்துப் பேசுவர். அல்லது, பேசிய நபரின் சொந்தக் கருத்து என்ற சால்ஜாப்பு சொல்வர்.

சட்டப்பேரவையில் அந்தந்த துறை அமைச்சர்கள் பேச வேண்டியதைக்கூட 110வது விதிகளின்கீழ் ஜெயலலிதாவே பேசி விடுவது உண்டு. ஆனால், இன்றைய (ஜனவரி 10, 2018) சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுங்கட்சியினருக்கே கூட சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கக் கூடும்.

பெருந்துறை எம்எல்ஏவான தோப்பு வெங்கடாச்சலம், தனது தொகுதிக்கு உட்பட்ட விஜயமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”ஈரோடு மாவட்டம் திங்களூரில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதனால் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தத் தேவையில்லை,” என்றார்.

இந்த பதிலில் அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம், ”அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை,” என்றார் தடாலடியாக. மேலும் அவர், ”விஜயமங்கலத்தில் இருந்து திங்களூருக்கு 15 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். எப்போதும், புள்ளி விவரங்களுடன் பேசும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தி இல்லை,” என்றார்.

அமைச்சரை, ஆளுங்கட்சி எம்எல்ஏவே எதிர்த்துப் பேசியதை அக்கட்சியினர் யாரும் ரசிக்கவில்லை. உடனடியாக தோப்பு வெங்கடாச்சலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சியின் மற்ற எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர். சிறிது நேர சலசலப்பிற்குப் பிறகு, பேரவை தொடர்ந்து நடந்தது.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது தோப்பு வெங்கடாச்சலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமாடினார். டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டார். இரு அணிகளும் இணைந்த பின்னர், ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டார்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் இன்னும் இருக்கிறார்கள். இந்த அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் யாரென்று தெரியும் என்று கூறி வந்தார்.

இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்ததன் மூலம் தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ, டிடிவி தினகரன் ஆதரவாளராகத்தான் இன்னும் இருக்கிறாரோ என்ற சந்தேகமும் இபிஒஸ் & ஓபிஎஸ் தரப்பினருக்கு வலுத்துள்ளது. தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ போல, மற்ற எம்எல்ஏக்களிடம் இருந்தும் அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வரலாம் என்றும் ஆளும்தரப்பில் இப்போதே சலசலப்புகள் எழுந்துள்ளன.