ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது.
அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைகளில் முனைப்பு காட்டுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு வழக்கில் ஊடகங்களுக்கு கருத்து சுதந்தரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பீகாரை சேர்ந்த பெண் ஒருவரின் தாய், அந்த மாநிலத்தின் அமைச்சராக இருந்துள்ளார். அவரது தந்தை மூத்த அரசு அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அந்த பெண்ணுக்கு பீஹார் தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான பகுதியில், உணவு பதப்படுத்தும் ஆலை துவக்குவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹிந்தி ‘டிவி’ சேனலில் ஒரு செய்தி வெளியானது.
இந்த செய்தி தன்னை அவதூறாக சித்தரிப்பதாக கூறி அந்த பெண் தொடர்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்க முயன்றது. இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கீ்ழ் நீதிமன்ற விசாரணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அந்த பெண் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஜனநாயகம் உள்ள நாட்டில் வாழும் போது சகிப்புதன்மையை கற்றுக் கொள்ள வேண்டும். அவதூறு என்பது அரசியல் சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால், ஊழல் முறைகேடு குறித்து வெளியான தவறான செய்தியை அவதூறாக கருத முடியாது.
ஊழல் முறைகேடு குறித்து செய்தி வெளியிடும் போது அதில் சிறு தவறு நடந்து இருக்கலாம். அல்லது அதில் கூடுதல் ஆர்வம் காட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் நாம், ஊடகங்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக அளிக்க வேண்டும். செய்தி வெளியானதில் தவறு இருந்து இருக்கலாம். அதற்காக அதை அவதூறாக கருத கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.