கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் பெரும் வெற்றி பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.
கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வெளிப்படையாகவே சொல்லி வருகிறார். தற்போது அரசியல் கட்சிக்கான பெயர், கொள்கை முடிவுகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட நேர்ந்தால், திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து, பெரிய வரவேற்பை பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவரும், இயக்குநர் சங்கரும் முடிவு செய்துள்ளனர். தற்போது ரஜினியின் 2.0 பட வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சங்கர், அடுத்து அஜித்குமார் அல்லது கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவின.
கமல்ஹாசனுடன் இணைவதாக இருந்தால், இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது. சங்கரும், கமல்ஹாசனும் மீண்டும் இணைவது இப்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு வெளியானது, ‘இந்தியன்’. சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், லஞ்சத்திற்கு எதிராக தனி நபர் போராட்டத்தை நடத்துவதுதான் இந்தியன் படத்தின் கதை. மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், காவேரி, சுகன்யா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 70 வயது பெரியவர், அவருடைய மகன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் கலக்கி இருப்பார்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மான், தோட்ட தரணி, வெங்கி, ஜீவா என தொழில்நுட்பக் குழுவும் உலகத்தரத்துடன் அமைந்திருந்ததும் இந்தப்படத்தின் பெரிய பிளஸ்.
இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல்ஹாசன் வென்றார். கலை இயக்கம், ஸ்பெஷல் எபெக்ட் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதுகளை வென்று இருந்தது.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கடந்த இரு மாதங்களுக்கு முன் ஊடகங்களிடம் நேரடியாகவே ஆளுங்கட்சி மீது கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார், கமல்ஹாசன். கடந்த வாரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சென்னைக்கு நேரில் வந்து கமலை சந்தித்து விட்டுச் சென்றார்.
அப்போது பேசிய கமல், ஊழலுக்கு எதிரான அனைவருமே என் உறவினர்கள்தான் என்று கூறினார். லஞ்சம், ஊழலை தோலுரித்துக் காட்டிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுப்பது, தனது அரசியல் பயணத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கருதுகிறார்.
இந்தப்படத்தின் மூலம் தமிழக அரசியல் அவலங்களையும், ஊழலையும் சற்று காட்டமாக சொல்வதுடன், அதன் மூலமாக தனது அரசியல் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்லலாம் என்றும் அவர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதற்காகவே, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, கமல்ஹாசன் அரசியல் மேடையாகவும் பயன்படுத்தி வருகிறார். விஜய் டிவி நிர்வாகம் அதையும், தனது டிஆர்பி ரேட்டிங் உத்தியாகவே நினைத்து கமலுக்கு எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. அதனால் கமல்ஹாசன் வரக்கூடிய சனி, ஞாயிறு நாள்களில் வழக்கத்தைவிட பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே திடீரென்று இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் தில்ராஜ் ஆகியோர் பிக்பாஸ் மேடைக்கு வந்தனர்.
அப்போது இயக்குநர் சங்கர் கூறுகையில், ”என்னுடைய ஒவ்வொரு படமும் முடியும்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஏதோ காரணங்களால் அது முடியாமல் போய்விடும். அப்படி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முன்பே முடிவு செய்திருந்தேன். மூன்று ஆண்டுக்கு முன்பு, அதற்கான கதையும் எழுதி விட்டேன். இப்போது அதற்கான நேரம் வந்து விட்டது. 2.0 படம் முடிந்ததும், அடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தைதான் எடுக்க இருக்கிறோம்,” என்றார்.
– வெண்திரையான்.