Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அதுவே, அரசியல் சாசன விதியும் கூட. ஆனால், காவி விதிகளைக் காட்டிலும் அரசியல் சாசனம் முக்கியமல்ல என்ற போக்கில், கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் மஹாராஷ்டிராவிலேயே தங்கி விட்டார் வித்யாசாகர் ராவ்.

அதன்பிறகு சில நாள்களில் ஜெயலலிதா, சசிகலா மீதான ஊழல் வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்புக்காகத்தான் ஆளுநர் காத்திருந்திருந்திருக்கக் கூடும் என்ற அய்யத்தையும் அப்போது சில கட்சிகள் எழுப்பின. அதுவே உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஜெயலலிதா, சசிகலா மீதான ஊழல் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்கூட்டியே பாஜக முக்கியத் தலைகள், வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு ‘ஹின்ட்’ கொடுத்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம் என்றே கருத முடிகிறது.

அதற்கு முன்னதாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே போர்க்களமாக காட்சி அளித்த வேளையிலும்கூட, சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து கண்டுகொள்ளாமல் ரொம்பவே கூலாக மஹாராஷ்டிராவில் இருந்து கொண்டார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வெறும் 12 எம்எல்ஏக்களை வசப்படுத்தி வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அப்போது வெளிப்படையாகவே செயல்பட்டார் வித்யாசாகர் ராவ். ஓபிஎஸ் கோரிக்கை மனுவை ஏற்று, அப்போது எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் உத்தரவிட்டார் ஆளுநர். இது நடந்தது, கடந்த பிப்ரவரியில். ஆனால், அடுத்த ஆறு மாதத்தில் எடப்பாடியுடன் முறுக்கிக் கொண்ட டிடிவி தினகரன், 18 எம்எல்ஏக்களை தன் பக்கம் திரட்டி வைத்திருந்தும், ஆளும் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் போக்குக் காட்டினார் வித்யாசாகர் ராவ்.

இதெல்லாமே, பாஜக மேலிடத்தின் கண் அசைவுகளுக்கு ஏற்ப அவர் செய்தது. ஆனால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் விவகாரம் தொடர்பாக மனு கொடுக்கலாம் என்றால்கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரை சென்னையில் உள்ள ராஜ்பவனில் உடனுக்குடன் சந்திக்க முடியவில்லை. பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை மனு அளிக்க எதிர்க்கட்சிகள் முயன்றபோது, அதற்கு இடம் கொடுத்துவிடாதபடி வித்யாசாகர் ராவ் அவர்களை சந்திக்கவே மறுத்தார். வேறு வழியின்றி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுமட்டுமின்றி, வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட இன்னும் சில முக்கிய காரணங்களையும் அரசியல் விமர்சகர்கள் அடுக்குகின்றனர். அதில் முக்கியமானது, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தியது. துணைவேந்தர் நியமனங்களில் விதிமீறல்கள் மட்டுமின்றி, எக்கச்சக்கமாக காசு புரண்டதாகவும் சொல்கின்றனர்.

குறிப்பாக, மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் செல்லதுரை மீது வெளிப்படையாகவே ஆதாரங்களை முன்வைத்தும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில், வித்யாசாகர் ராவ் ஆளுநர் மட்டுமல்ல; பல்கலைக்கழங்களின் வேந்தரும் அவரே.

தவிர, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெண்கள் ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமிக்காமல் இழுத்தடித்தது என அவர் மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. இவை குறித்து எல்லாமே எதிர்க்கட்சிகளும், அந்தந்த துறைகளைச் சேர்ந்த சிலரும் ரொம்ப டீட்டெய்லாகவே மத்திய அரசுக்கு புகார் மனுவாக அனுப்பி உள்ளனர்.

இப்படி பல வகைகளிலும் தமிழக நிர்வாக நலனில் அக்கறை காட்டாத ஆளுநராகத்தான் வித்யாசாகர் ராவ் இருந்து வந்திருக்கிறார்.

இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்துள்ள சர்ச்சையிலும் வித்யாசாகர் ராவ் தலை ரொம்பவே உருட்டப்படுகிறது. ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இரண்டு முறை அவர் பார்த்துவிட்டு வந்தார். அதுபற்றி ராஜ்பவனில் இருந்து மக்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அவர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த இரண்டு அறிக்கைகளிலுமே நிறைய முரணான தகவல்கள் உள்ளதாகவு தற்போது தகவல்கள் கசிகின்றன. அந்த அறிக்கையில் வித்யாசாகர் ராவ் சில உண்மைகளை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. தன்னைப் பார்த்து ஜெயலலிதா கையை அசைத்ததாகவும் அப்போது அவர் கூறியது, சர்ச்சைக்கு இடமளித்துள்ளது. ஒருவேளை, விசாரணை ஆணையத்தின் விசாரணை நடைமுறைகள் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவின் மற்றொரு முகமும் வெளிப்படலாம்.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களும் ஆளுநர் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். அவரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ‘மீம்’கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும், சமீபத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் கூட ஆளும் அதிமுகவினர் வித்யாசாகர் ராவிடம் கலந்தாலோசிக்காமல் நேரடியாக அருண்ஜெட்லியிடம் விவாதித்துள்ளதும், அவருக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்க விரும்பாமல் ராவோடு ராவாக வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும், முடிந்தால் மஹாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்தேகூட விடுவித்து விடும்படியும் பாஜக மேலிடத்தில் கேட்டுக்கொண்டதாகவும் அரசியல் உள் விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்துதான், வித்யாசாகர் ராவை தமிழக பொறுப்பு ஆளுநர் பதவியில் இருந்து விடுவித்ததுடன், நேரடி ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார்.

– நாடோடி.