Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

பொதுத்துறை நிறுவனமான
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ
வெளியீடு வெற்றியடைந்துள்ளது.
பொதுப்பங்குகள் வேண்டி
சில்லரை முதலீட்டாளர்கள்
தரப்பில் 42.39 மடங்கு
விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
வெள்ளிக்கிழமை (பிப். 26)
இந்நிறுவனப் பங்குகள்
இந்தியப் பங்குச்சந்தைகளில்
பட்டியலிடப்படுகிறது.

ரயில்வே துறையின்
ஓர் அங்கமான ரயில்டெல்
கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
லிமிடெட், ஒரு பொதுத்துறை
நிறுவனம் ஆகும். இந்நிறுவனம்,
ஒரு தகவல் மற்றும் தகவல்
தொழில்நுட்ப உள்கட்டமைப்பு
வழங்குநர் ஆகும்.
இத்துறையில் நாட்டின்
முன்னணி நிறுவனமாகவும்
விளங்குகிறது.

 

இந்நிறுவனம்,
819.24 கோடி ரூபாய் நிதி
திரட்டும் நோக்கில் முதன்முதலாக
பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும்
பொதுப்பங்கு வெளியீட்டில்
களமிறங்கியது. மினிமம்
லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும்.
ஒரு பங்கின் விலை 94 ரூபாய்
ஆக நிர்ணயிக்கப்பட்டது.

 

மொத்தம் 87.15 மில்லியன்
பங்குகள் பொதுப்பங்குகள்
விற்பனைக்குக் கொண்டு
வரப்பட்டது. இவற்றில் 50
சதவீதம் தகுதி வாய்ந்த நிறுவன
முதலீட்டாளர்களுக்கும்,
35 சதவீதம் சில்லரை
முதலீட்டாளர்களுக்கும்,
15 சதவீதம் நிறுவனம் அல்லாத
முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. பிப். 18ம்
தேதியுடன் பொதுப்பங்கு
விற்பனை முடிந்தது.
பிப். 23ம் தேதி முதலீட்டாளர்களுக்கு
பொதுப்பங்குகள் இறுதி
செய்யப்பட்டது. ரயில்டெல்
பங்குகள் வேண்டி மொத்தம்
42.39 மடங்கு விண்ணப்பங்கள்
குவிந்தன.

 

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்,
ஐடிபிஐ கேபிடல்,
எஸ்பிஐ கேபிடல் ஆகிய
நிறுவனங்கள் இப்பங்கு
வெளியீட்டை நிர்வகிக்கின்றன.
கேபின் நிறுவனம் இதன்
பதிவாளராக செயல்படும்.
இந்நிலையில், ரயில்டெல் ஐபிஓ
இந்தியப் பங்குச்சந்தைகளில்
நாளை (பிப். 26)
பட்டியலிடப்படுகிறது.

 

பங்குச்சந்தைகளில்
பட்டியலிடப்படும் முன்,
விற்பனை செய்யப்படும்
கிரே மார்க்கெட்டில் இப்பங்குகள்
108 ரூபாய் வரை கைமாறியிருப்பது
சில்லரை முதலீட்டாளர்களுக்கு
ஓரளவுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்தி உள்ளது.

 

– ஷேர்கிங்