Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக அரசின்
இடைக்கால பட்ஜெட்
அறிக்கை, சட்டப்பேரவையில்
செவ்வாயன்று (பிப். 23)
தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் கடன் சுமை,
அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள்
5.70 லட்சம் கோடியாக உயரும்
என மதிப்பிடப்பட்டு உள்ளது.

 

தமிழக சட்டப்பேரவையில்,
2021-2022ம் நிதியாண்டுக்கான
இடைக்கால பட்ஜெட்,
செவ்வாய்க்கிழமை (பிப். 23)
தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதல்வரும்,
நிதி அமைச்சருமான
ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்
தாக்கல் செய்தார். விரைவில்
தமிழக சட்டப்பேரவைக்கு
தேர்தல் நடைபெற உள்ளதால்,
இடைக்கால பட்ஜெட்டாக
தாக்கல் செய்யப்பட்டது.

 

நிதிநிலை அறிக்கை
தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம்
கூறியதாவது:

 

தமிழக அரசின்
நிதி பற்றாக்குறை மாநில
அரசின் மொத்த உற்பத்தி
மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில்
4 சதவீதத்திற்குள்ளும்,
2022-2023ம் நிதியாண்டில்
3.5 சதவீதத்திற்குள்ளும்,
அதற்கு அடுத்த நிதியாண்டில்
3 சதவீதத்திற்குள்ளும்
இருக்க வேண்டும்.

 

15வது நிதிக்குழுவின்
பரிந்துரையின்படி,
நிலுவை கடன் தொகை
மாநில மொத்த உற்பத்தி
மதிப்பில் 2021-2022ம்
நிதியாண்டில் 28.7 சதவீதத்திற்குள்ளும்,
2022-2023ம் நிதியாண்டில்,
29.3 சதவீதத்திற்குள்ளும்,
அதற்கு அடுத்த நிதியாண்டில்
29.1 சதவீதத்திற்குள்ளும்
இருக்க வேண்டும்.

 

இந்திய பொருளாதாரம்
2020-2021ல் நிலையான
நிலையில் 7.7 சதவீதம் என
எதிர்மறை வளர்ச்சியுடன்
தேக்க நிலையை எதிர்நோக்கி
உள்ளது. இருப்பினும், இனி வரும்
ஆண்டுகளில் இந்த தேக்க
நிலை மறைந்து வளர்ச்சி அடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வரும் 2022-2023ம்
நிதியாண்டில் 15.5 சதவீதமும்,
அதற்கு அடுத்த ஆண்டில்
15 சதவீதமாகவும் இருக்கும் என
மதிப்பிடப்பட்டு உள்ளது.

 

மத்திய அரசின் நிதியுதவி
உள்பட மாநில அரசின்
மொத்த வருவாய் வரவுகள்
2020-2021ம் நிதியாண்டில்
1 லட்சத்து 80 ஆயிரத்து 700.62
கோடியைக் காட்டிலும்
2021-2022ம் நிதியாண்டில்
வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
2 லட்சத்து 18 ஆயிரத்து
991,96 கோடியாக இருக்கும்
என்றும் மதிப்பிடப்பட்டு
உள்ளது.

 

மாநில அரசின் சொந்த
வருவாய் 2020-2021 திருத்த
மதிப்பீடுகளில் 1 லட்சத்து 9
ஆயிரத்து 968.97 கோடியாக
மதிப்பிடப்பட்டு உள்ளது.
மாநில அரசின் சொந்த வரி
வருவாய் 2020-2021ம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டினை
ஒப்பிடும்போது 23561.3 கோடி
ரூபாய் குறைவாகும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்
குறிப்பிட்டார்.

பட்ஜெட் சிறப்பு
அம்சங்கள் வருமாறு…

 

பயிர்க்கடன்
தள்ளுபடிக்கு 5000 கோடி:

 

தொடக்க வேளாண்
கூட்டுறவு கடன் சங்கங்களில்
16 லட்சத்து 43 ஆயிரத்து
347 விவசாயிகள் பெற்றிருந்த
12110.74 கோடி ரூபாய்
பயிர்க்கடன் தள்ளுபடி
செய்யப்படுகிறது. இதற்காக
2021-2022ம் ஆண்டிற்கான
இடைக்கால வரவு செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் 5 ஆயிரம் கோடி
ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளது.

 

6ம் வகுப்பு முதல்
கணினி பாடம்:

 

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு
வரையிலான அறிவியல்
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக
தகவல் தொழில்நுட்பக் கல்வியை
ஒருங்கிணைப்பதற்கான
நடவடிக்கைகளை அரசு
மேற்கொண்டுள்ளது. இதுவரை,
11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும்
கணிப்பொறி அறிவியல் தனி
பாடப்பிரிவாக கற்பிக்கப்பட்டு
வருகிறது. தற்போது அனைத்து
அரசு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளிலும்
6 முதல் 10ம் வகுப்பு வரையிலும்
கணினி அறிவியல் பாடம்
அறிமுகப்படுத்தப்படும்.

 

குறு, சிறு நிறுவனங்களுக்கு
உதவுவதற்கும், புத்துயிர்
அளிப்பதற்கும் தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழகத்தை
வலுப்படுத்தும் நோக்கில்
அதன் செயல்பாடுகளை
விரிவாக்கம் செய்ய கூடுதல்
மூலதனமாக 1000 கோடி
ரூபாய் அரசு வழங்கும்.

 

அரசு ஊழியர்களுக்கு
மேம்படுத்தப்பட்ட
மருத்துவக் காப்பீடு:

 

தமிழக அரசு ஊழியர்களுக்கு
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
2021 ஜூன் மாதத்துடன்
முடிவடைகிறது. அத்திட்டம்
மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன்
நீட்டிக்கப்படும். தற்போது
ஒட்டுமொத்த காப்பீட்டுத்
தொகையான 4 லட்சம் ரூபாயில்
இருந்து 5 லட்சம் ரூபாயாக
அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட
சிகிச்சைகளுக்கான காப்பீட்டுத்
தொகை 7.50 லட்சத்தில் இருந்து
10 லட்சம் ரூபாயாக
அதிகரிக்கப்படும்.

 

அரிய வகை நோய் மற்றும்
அசாதாரண நிகழ்வுகளுக்கு
20 லட்சம் ரூபாய் வரை
காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு
சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறப்பு பேருந்துகள்:

 

அடுத்த சில ஆண்டுகளில்
12 ஆயிரம் பேருந்துகள்
கொள்முதல் செய்யப்படும்.
அவற்றில் 2 ஆயிரம் பேருந்துகள்
மின்சார பேருந்துகளாக இருக்கும்.
முதல்கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி
வங்கி உதவியுடன் 1580 கோடி
ரூபாய் செலவில் 2200 பிஎஸ்-4
பேருந்துகளும், 500 மின்சார
பேருந்துகளும் கொள்முதல்
செய்யப்படும்.

 

குடும்ப நலத்துறைக்கு
2021-2022ம் ஆண்டுக்கு
இடைக்கால வரவு செலவுத் திட்ட
மதிப்பீடுகளில் 19420.54 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு
உள்ளது.

 

காவல்துறைக்கு
கூடுதல் நிதி:

 

காவல்துறைக்கு
2011-12ம் ஆண்டில்
வரவு செலவு நிதி ஒதுக்கீடு
3513.15 கோடி ரூபாயில் இருந்து
2021-2022 ம் ஆண்டு இடைக்கால
வரவு செலவு மதிப்பீடுகளில்
9567.93 கோடி ரூபாயாக
உயர்த்தப்பட்டு உள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு
பணிகள் துறைக்கு 436.68
கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் சாலை
பாதுகாப்புக்கு அதிக
முக்கியத்துவம் அளித்ததால்
2016ம் ஆண்டில் 17218 ஆக
இருந்த உயிரிழப்பு,
தற்போது 2020ல் 8060
ஆக குறைந்துள்ளது.

 

இந்திய நீதி அறிக்கைகளில்
நீதித்துறை என்ற பிரிவில்
தமிழகம் முதலிடத்தைப்
பெற்றுள்ளது. நீதி
நிர்வாகத்திற்காக 1437.82
கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளது.

 

விபத்து காப்பீடு அதிகரிப்பு:

 

புரட்சித்தலைவி அம்மா
விரிவான விபத்து மற்றும்
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை
எல்ஐசி மற்றும் இந்திய காப்பீட்டு
நிறுவனங்களுடன் இணைந்து
தமிழக அரசு தொடங்கி
வைத்துள்ளது. இத்திட்டத்திற்கான
முழு நிதியையும் மாநில
அரசே ஏற்றுக்கொள்ளும்.

 

வறுமைக் கோட்டுக்குக் கீழ்
உள்ள 55.67 லட்சம் தகுதியான
குடும்பங்களுக்கு குடும்பத்
தலைவரின் இயற்கை மரணத்திற்கு
2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத்
தொகை வழங்கப்படும்.
குடும்பத்தலைவரின் விபத்து
மரணத்துக்கு 4 லட்சம் ரூபாயும்,
நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம்
ரூபாயும் வழங்கப்படும்.

 

5.70 லட்சம் கோடி கடன்:

 

கடந்த 2011ல் தமிழகத்தில்
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது.
அப்போது தமிழக அரசின்
கடன் சுமை 118610 கோடி
ரூபாயாக இருந்தது.
இந்த கடன் சுமையை
குறைக்க தமிழக அரசு
நடவடிக்கை எடுக்கும்
என்று அப்போது கூறப்பட்டது.

 

கடன் சுமையைக்
காரணம் காட்டி, பேருந்து,
ஆவின் பால், மின்சார கட்டணம்
ஆகியவை உயர்த்தப்பட்டது.

 

இதை கட்டுப்படுத்த
வேண்டுமானால் கவர்ச்சித் திட்ட
அறிவிப்புகளை கட்டுப்படுத்தினால்
மட்டுமே மாநில அரசுக்கு
உகந்ததாக இருக்கும் என்று
பொருளாதார வல்லுநர்கள்
அறிவுரை வழங்கினர்.
இந்த அறிவுரையை
புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து
கவர்ச்சித் திட்ட அறிவிப்பில்
முனைப்பு காட்டினார்கள்.
குறிப்பாக, 5 ஆண்டுகளில்
தமிழக அரசின் கடன் சுமை
கடுமையாக உயர்ந்துள்ளது.

 

கடந்த 2016 – 2017ம் நிதியாண்டில் வெறும் 252431 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் அளவு, 2018ம் ஆண்டு 3.14 லட்சம் கோடியாகவும், 2019ம் ஆண்டு 3.55 லட்சம் கோடியாகவும், 2020ம் ஆண்டு 3.97 லட்சம் கோடியாகவும் கடன் சுமை இருந்தது.

 

இந்நிலையில் 2021ம் நிதியாண்டில் 456660 கோடியாக கடன் சுமை இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 2021 மார்ச் மாதம் 31ம் தேதியில் 485502.54 கோடியாக உயர்ந்துள்ளது. இது 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது. அதேநேரம், 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியில் கடன் சுமை 570189.29 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

 

கோவையில் மெட்ரோ ரயில்:

 

சென்னையைத் தொடர்ந்து
கோவையில் மெட்ரோ ரயில்
திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக முதல்கட்டமாக
6683 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

வழக்கம்போல் திமுக வெளிநடப்பு:

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய அழைக்கப்பட்டார். அப்போது திமுக சட்டப்பேரவைத் துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து ஏதோ பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் தனபால், நீங்கள் எது சொன்னாலும் பதிவாகாது. அதனால் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்யலாம் என்றார்.

 

ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தபோது மீண்டும் துரைமுருகன் ஏதோ பேச முயன்றார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வழக்கம்போல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

 

-பேனாக்காரன்