தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் நேற்று (அக். 11, 2017) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து 15,700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர் ஆகியோரின் ஊதியமும் இதேபோல இரண்டரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், நிலையான ஊதியத்தை பெற்றுவருவோரின் ஊதியமும் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வின் காரணமாக தமிழக அரசுக்கு 14,719 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கிரேடு வாரியான ஊதிய விகிதம் வருமாறு:
அலுவலக உதவியாளர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 21,792-26,720; இளநிலை உதவியாளர் ரூ.37,936,-ல் இருந்து ரூ.-47,485; இடைநிலை ஆசிரியர்களுக்கான விகிதம் ரூ.40,650-ல் இருந்து ரூ.50,740; ஆய்வாளர்களின் ஊதிய விகிதம் ரூ.69,184ல் இருந்து ரூ.-84,900; துணை ஆட்சியர்களுக்கு ரூ.81,190-ல் இருந்து, ரூ.98,945;
சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.10,810-ல் இருந்து ரூ.13,270; சத்துணவு சமையலர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 6562-ரூ.8,680;
இந்திய குடிமைப்பணி அலுவலர் இல்ல அலுவலக உதவியாளர் தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வைகுறைபாடு, மாற்றுத்திறனாளி, காது கேளாதோர் ஊர்திப்படி ரூ.2,500 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
குறைந்பட்ச ஓய்வூதியத்தொகை ரூ.7,850ல் இருந்து அதிகபட்சமாக ரூ,1,12, 500 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.7,850 -ல் இருந்து 67,500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.1500-ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்:
ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அரசின் வரி வருவாயில் 67 சதவீதம் அளவுக்கு ஊழியர்களின் ஊதியத்திற்கே சென்றுவிடுவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவழிக்க முடியவில்லையென இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பள உயர்வு என்பது மாநில அரசின் நிதிநிலையைப் பொருத்து எடுக்கப்படும் முடிவு என்பதால், இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்குத் தர வேண்டியதில்லையென்றும் இந்த அமைப்பு கூறியிருக்கிறது.