தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (அக். 12, 2017) நேரில் ச ந்தித்து இருப்பதன் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகக்குள் பிளவுகள் ஏற்பட்டன. சசிகலாவுக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி தூ க்கிய ஓ.பன்னீர்செல்வம், 12 எம்எல்ஏக்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார்.
தமிழகத்தில் காலூன்ற துடித்துக் கொண்டிருந்த பாஜக, சிதறிக்கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால்தான் தனக்கு பெரிய அளவில் ஆதாயம் எனக்கருதி, இணைப்புக்கான வேலைகளில் இறங்கியது. பாஜவின் அஜன்டாவை அதிமுகவுக்குள் இருக்கும் மைத்ரேயன் எம்பி மூலம் செயல்படுத்தியது.
நாளும் கிழமையும் கூடி வர, எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒரே அணியாக இணைந்தன. இதன் பலனாக ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், அவருடைய அணியைச் சேர்ந்த க.பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து முற்றாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய அஜன்டா. அதை ஓபிஎஸ்ஸின் குரலாக செயல்படுத்தியது. அணிகள் இணைப்பிற்குப் பிறகு, சசிகலா, தினகரன் ஆகியோருக்கும் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர்.
பாஜக நினைத்தது நடந்துவிட்டது. எல்லாம் சுபமே. ஆனால், அணிகள் இணைப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு துளியும் விருப்பம் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பாஜகவின் அழுத்தம் காரணமாகவே அணிகள் இணைப்புக்கு இபிஎஸ் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
‘பாத்திரத்திற்கு ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும். பூசாத மாதிரியும் இருக்கணும்’ என்ற காமெடி போல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் துணை முதல்வர் என்ற பதவிக்குரிய மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரத்தவறுவதில்லை. ஆனால், ஆட்சி நிர்வாக ரீதியாக இதுவரை எடுக்கப்பட்ட எந்த ஒரு முடிவிலும், துணை முதல்வரை கலந்து பேசியதில்லை என்கிறார்கள்.
அவ்வளவு ஏன்…அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அரசாணை பற்றிகூட தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்ஸிடம் முதல்வர் கலந்து பேசவில்லையாம்.
மேல்மட்ட அளவில் அணிகள் இணைந்து விட்டாலும், இன்னும் மாவட்ட அளவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை இபிஎஸ் அணியினர் அருகில்கூட சேர்த்துக் கொள்வதில்லை. எதிரிகளைப்போலவே பாவித்து வருகின்றனர். இதனால் அரசுப்பணிகள் ஒப்பந்தம் எல்லாமே இபிஎஸ் ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுவதாகவும் சொல்கின்றனர். இதுபற்றி நாம் விரிவாக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ‘புதிய அகராதி’ இணையத்தில் எழுதியிருக்கிறோம்.
இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தன் மனதில் இருப்பதையே அவர்களும் சொன்னதாக அப்போது ஓபிஎஸ் கூறினாராம்.
ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்து அப்போது இபிஎஸ்க்கு எதிராக முஷ்டியை முறுக்கிய கே.பி.முனுசாமி, செம்மலை ஆகியோருக்கு ஆட்சியிலும், கட்சியிலும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அவர்களும் இபிஎஸ் மீது தொடர்ந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்களாம்.
தனது ஆதரவாளர்கள் சிலருக்கு அரசு நிர்வாகம், கட்சிக்குள் பதவிகளை எதிர்பார்த்து ஓபிஸ் காத்திருப்பதை உணர்ந்து கொண்ட இபிஎஸ், அதுபற்றிய பேச்சு எழுந்துவிடாத வகையில் தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்துக் கொள்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகளை உளவுத்துறை மூலம் ரகசியமாக கண்காணிக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் அறிந்ததாலும், ஓபிஎஸ் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முக்கிய ஆதரவாளர்கள் சிலர், ”தர்ம யுத்தம் என்று சொல்லிவிட்டு நாம் அவர்களுடன் மிக விரைவில் இணைந்திருக்கக் கூடாது. இப்போதும் மக்களிடமும், தொண்டர்களிடமும் நமக்குதான் செல்வாக்கு இருக்கு. அவர்கள் வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொள்ளட்டும். கட்சியின் முழு கட்டுப்பாடும் நம்மிடம் இருப்பதுதான் நல்லது,” என்று ஓபிஸ்ஸிடம் தூபம் போட்டுள்ளனர்.
இதன்பிறகே, பிரதமரை நேரில் சந்தித்து உள்ளக்குமுறல்களை கொட்டி விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஓபிஎஸ். இன்றைய சந்திப்பிலும் மேற்சொன்ன விவகாரங்களை பட்டும்படாமல் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
உள்கட்சி விவகாரம் தொடர்பாக அரசு செலவில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான், தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசியதாக ஊடகங்களிடம் சொன்னார் ஓபிஎஸ். அதற்கும் இணையவாசிகள் அவரை சரமாரியாக கேலி, கிண்டல் செய்து டுவிட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
மின் திட்டம் பற்றி பேசும் நீங்கள் ஏன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
”இனியும் ஒப்புக்குச் சப்பாணியாக ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. கட்சியிலும், ஆட்சியிலும் எங்கள் அணிக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள்,” என்று பிரதமரிடம் சொன்னாராம் ஓபிஎஸ். அதற்கு மோடி தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை என்கிறார்கள் டெல்லி லாபி அறிந்தவர்கள்.
– அகராதிக்காரன்.