Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைமை தேர்தல் கமிஷனர், ஏ.கே. ஜோதி

ரத்து:

அப்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் இருந்தன. இபிஎஸ் அணியின் சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், பிற கட்சி வேட்பாளர்கள் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின.

அந்த புகாரின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று மட்டும் அறிவித்து இருந்தது.

ஆர்.கே நகர்:

இந்நிலையில், டெல்லியில் இன்று (அக். 12, 2017) பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே. ஜோதி, ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனக்கூறினார். எனினும், எந்த தேதியில் வாக்குப்பதிவு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஹிமாச்சல் பிரதேசம்:

மேலும், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் 9ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ம் தேதியும் நடைபெறும் என்றும், இதே நாளில் குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார். குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு எந்த நாளில் வாக்குப்பதிவு நடக்கும் என்பது குறித்து வரும் திங்கள் கிழமை (அக். 16) அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.