Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

மதுரை செரீனா மீது கஞ்சா வழக்கு, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மீது போதைப்பொருள் வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா மட்டுமே இருப்பது போலவும், ஜெயலலிதாவுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ செய்தி வெளியிட்டுள்ளது, மன்னார்குடி கும்பல் வட்டாரத்தை கொதிப்படையச் செய்துள்ளது.

கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, ஆளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ தொடங்கப்பட்டது.

நேற்று வெளியான (மார்ச் 2, 2018) இந்த நாளிதழில், ”இதுவே என் கட்டளை…. கட்டளையே என் சாசனம்” என்ற தலைப்பில் மிக நீளமான கவிதை ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் அந்தக் கவிதை எழுத்தப்பட்டு இருந்தது.

அந்த கவிதை இடம்பெற்ற பக்கத்தின் மேல் பகுதியில், கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா, தனது உடன் பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி பரிவாரங்கள் 13 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்ட செய்தியும் கட்டம் கட்டி வெளியிடப்பட்டு இருந்தது.

அவர்களிடம் தொண்டர்கள், தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த செய்தி.

அதற்கும் கீழே பிரசுரிக்கப்பட்ட கவிதையில், கடந்தகால அதிமுக ஆட்சியின்போது நடந்த சில அவலங்கள் கவிதை நடையில் சொல்லப்பட்டு இருந்தது. அதிலிருந்து சிறு பகுதி உரைநடை வடிவில்…

”வளர்ப்பு மகன் கல்யாணம் செரீனா மீது கஞ்சா வழக்கு, பாலு ஜூவல்லரி பாவம் கங்கை அமரன் சாபம் என்றெல்லாம் அடுக்காத தவறுகளை அடுக்கடுக்காக செய்து பத்தரை மாத்துத் தங்கம் அம்மாவுமே பர்கூரில் தோற்றதற்கு பழி சேர்த்த பாதகர்களை;

உடன்பிறவா உறவென்று ஒட்டுண்ணி உயிரினமாய் கோல்டன் மிடாசு என மதுபான ஆலை நடத்தி குடிகெடுத்த மாஃபியாக்களை…பாசத்தாய் கட்டினார் கட்டம் அந்தப் பணப்பிசாசு கும்பலுக்கு;

ஒப்பிலா தாய் போட்டார் ஒன் ஃபார்ட்டி ஃபோர் சட்டம் (144); ஆம்… ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் அதுவே கட்டளை… கட்டளையே சாசனம்” என்று கவிதையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2001 – 2006 காலக்கட்டம். ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த காலம் அது. 2003ம் ஆண்டு ஜூலை மாதம், திடீரென்று ஒருநாள் மதுரையைச் சேர்ந்த செரீனா என்கிற பானு என்கிற ஜனனியின் வீட்டிற்குள் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

பின்னர் அவருடைய காரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறி 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், சென்னை நீலாங்கரையில் இருந்த செரீனாவுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து கணக்கில் வராத 1.04 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அது, ஹவாலா பணம் என்று அப்போது காவல்துறையினர் கதை அளந்தனர்.

விமானப் பணிப்பெண் பயிற்சி பெற்ற செரீனா யார் என்பதே காவல்துறையின் நடவடிக்கைக்குப் பின்னர்தான் வெளி உலகுக்கே தெரிய வந்தார்.

பின்னாள்களில், சசிகலாவின் கணவர் ம.நடராஜனுடன் செரீனா நெருக்கமாக இருந்தார் என்பதும், அந்த உறவை சசிகலா விரும்பாததாலும், அவருடைய குடைச்சல் காரணமாக ஜெயலலிதா உத்தரவின்பேரில் செரீனா மீது வழக்கு பாய்ந்திருப்பது அம்பலமானது.

சரி. சுதாகரன் திருமண விவகாரத்துக்கு வருவோம். சசிகலாவின் அக்காள் மகனான சுதாகரனை ஜெயலலிதா திடீரென்று வளர்ப்பு மகனாக சுவீகாரம் எடுத்துக்கொண்டார். அவருக்கு திருமணம் செய்வதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்துடன் சம்பந்தம் பேசி முடிக்கப்பட்டது.

திருமணத்திற்காக சென்னையில் 1991-1996 காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக விளங்கிய பாலு ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் ரூ.40 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டது. வாங்கியவர் சசிகலா. பின்னர் பணத்தை செட்டில் செய்கிறோம் என்றுகூறி, கடனாக நகைகளை வாங்கினர்.

ஆனால் கடைசி வரை பணத்தை தராமல் இழுத்தடித்து ஏமாற்றினர். இதனால் மனம் உடைந்த பாலு ஜூவல்லர்ஸ் அதிபர் பாலு செட்டியார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் அப்போது வெளியாகின.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமாக ஓஎம்ஆர்&ல் பையனூர் என்ற இடத்தில் பண்ணை வீடு இருந்தது. அந்த வீடு ஜெயலலிதாவுக்குப் பிடித்துப்போகவே, அதை வாங்க ஆசைப்பட்டார்.

கங்கை அமரனிடம் தூது அனுப்பினார் சசிகலா. அதற்கு அவர் மசிந்து கொடுக்காமல் போகவே, கங்கை அமரன் எங்கு சென்றாலும் நிழல் போல தொடர ஆரம்பித்தார் சுதாகரன்.

பின்னர், கங்கை அமரனை மிரட்டி, பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த வீட்டை, வெறும் 13 லட்ச ரூபாய்க்கு கிரயம் செய்து முடித்தனர். ஜெயலலிதாவும், சசிகலாவும் மிரட்டி தன்னுடைய பங்களாவை பறித்துக்கொண்டதாக அவர் பலமுறை பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக வளைய வந்த சுதாகரன் மீதே ஜெயலலிதாவின் (ஏ)காவல்துறையினர் போதைப்பொருள் வழக்குப் போட்டது தனி கதை.

கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னை தியாகராய நகரில் உள்ள சுதாகரனின் வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்து 16 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அபிராமபுரத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இருந்து 72 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதற்கான பின்னணி குறித்து விசாரித்ததில், ஜெயலலிதா பத்திரமாக கொடுத்து வைத்திருந்த பணத்தை சுதாகரன் கையாடல் செய்து, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதற்கான பலன்தான் இந்த சோதனை என்று அப்போது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன.

அதிமுக ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வரும்போதும், டாஸ்மாக் கடைகளுக்கு சசிகலாவுக்குச் சொந்தமான கோல்டன் மற்றும் மிடாஸ் மதுபான ஆலைகளில் இருந்துதான் அதிகளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இதையெல்லாம் இன்றைக்கு ஆளும் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசதியாக மறந்துவிட்டு, அவர்கள் நிறுவிய ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளேட்டில் எல்லா குற்றங்களுக்கும் சசிகலாவும், அவருடைய மாஃபியா கும்பலும்தான் காரணம் என எழுத வைப்பது ஆகப்பெரிய முரண்.

”சொத்து வழக்கில் ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி. சசிகலா உடந்தையாக இருந்ததுதான் குற்றம் என்று சாட்டப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க சசிகலாவை மட்டும் அத்தனை குற்றங்களின் ஊற்றுக்கண் என சித்தரிக்க முயல்வது ஏதுமறியாத அப்பாவித் தொண்டர்களை ஏமாற்றும் வேலையாகவே தெரிகிறது.

அவர்கள் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். அவர்கள் பத்திரிகையில் இப்படி எல்லாம் எழுதி, தொண்டர்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அது நடக்காது.

இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்கள் எல்லோருமே பதவிக்காக ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்குதான் சாதகமாக தீர்ப்பு வரும்.

அப்போது இந்த ஆட்சி கலையும் அல்லது எங்கள் அணியில் இருந்து ஒருவர் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்பார்,” என்கிறார் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஒருவர்.

 

– பேனாக்காரன்.