Monday, September 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நாமக்கல் மாவட்டம்: தேர்தல் களத்தில் முந்துவது யார்?

தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரங்களை விசாரித்தோம்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாதக, தவெக கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

நாமக்கல்:

திமுக தரப்பில் மகளிர் தொண்டரணி நிர்வாகி ராணி, அதிமுகவில் தொழில் அதிபர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் நேரடியாக மோதுகின்றனர்.

முன்னாள் மா.செ.க்கள் காந்திசெல்வன், ‘பார்’ இளங்கோவன் ஆகியோருக்கு வேறு தொகுதிகளில் தேர்தல் பணிகள் வழங்கப்பட்டதால் அவர்களுடைய ஆதரவாளர்களும், சிட்டிங் எம்எல்ஏ ராமலிங்கமும் வேட்பாளர் ராணிக்கு ஆதரவாக பரப்புரைக்குச் செல்லவில்லை என்ற குறை பெரிய அளவில் எதிரொலிக்கிறது. ராணிக்கு சீட் வழங்கியதிலும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் மத்தியில் பலத்த அதிருப்தி. கூட்டணி கட்சிகளின் பலம், தமிழக அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு தொகுதியில் தேர்தலைச் சந்திக்கிறார் ராணி.

அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், கோழிப்பண்ணை தொழிலுக்குத் தேவையான மருந்து வணிகம், பைனான்ஸ் என பசையுள்ள பெரும்புள்ளி. பல்வேறு அறப்பணிகள் மூலமாக மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். இவரோடு மல்லுக்கட்டி வந்த மாஜி எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரையும் சரிக்கட்டி விட்டதால் அவருடைய பரப்புரை களைக்கட்டியது. முந்தைய அதிமுக ஆட்சியின்போது நாமக்கல்லுக்கு புறவழிச்சாலை, மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதால் இலைக்கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது.

இரு கட்சிகளின் வேட்பாளர்களும் கொ.வெ.கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சொந்த செல்வாக்கு, கூட்டணி பலம், வலுவான கரன்சி பாசனம் ஆகியவை அதிமுக வேட்பாளருக்கு கூடுதல் சாதகமாக இருக்கிறது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாய் பட்டுவாடா செய்துள்ளனர்.

நிலவரம்: அதிமுக வெற்றி

ராசிபுரம் (தனி):

இத்தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் இரண்டாம் முறையாகக் களம் இறங்கியுள்ளார். ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை, கூட்டுக்குடிநீர் திட்டம், போதமலையில் சாலை வசதி, டைடல் பார்க், பட்டுக்கூடு ஏல மையம், ராசிபுரம், நாமக்கல்லில் புதிய சாலைகள், நாமகிரிப்பேட்டையில் 1500 குடும்பத்திற்கு பட்டா உள்பட தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் மதிவேந்தன்.

அணைப்பாளையத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கொண்டு வந்தது தொடர்பாக வணிகர்களிடையே அதிருப்தி இருந்தாலும், அதற்குப் போதிய விளக்கம் அளித்துள்ளார் மதிவேந்தன். அதன்பிறகு சலசலப்பு குரல்கள் சற்று கட்டுக்குள் வந்தன. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் போன்ற அரசின் நலத்திட்டங்களும், கரன்சி பாசனமும் மதிவேந்தனை கரைசேர்க்கும் என்கிறார்கள். இத்தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிடாதது திமுகவுக்கு பெரிய பலம்.

திமுகவை எதிர்த்து பாஜக தரப்பில், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மகன் டாக்டர் எஸ்.டி.பிரேம்குமார் களம் காண்கிறார். வேட்பாளர் மீது எந்த அதிருப்தியும் இல்லாவிட்டாலும், மக்களிடம் ஆழமாகப் பதிந்திருக்கும் பாஜக வெறுப்பு இவருக்கு பெரிய மைனஸ். தொகுதிக்கு புது முகம். அதிமுக மாஜி அமைச்சர் சரோஜாவின் ஆதரவாளர்கள் பரப்புரை களத்தில் ஆப்சென்ட். அதிமுக குதிரையை நம்பியே பாஜக களமாடுகிறது. தவெக வேட்பாளரான மாஜி சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், களத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இத்தொகுதியில் திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 1000 ரூபாயும், பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிற்கும் தரமான வேட்டி, சேலையும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. கரன்சி பாசன விஷயத்தில் தாமரைக்கட்சி 500க்கு மேல் நகராமல் இழுத்தடிக்க, அதிமுகவின் பெரு முயற்சியால் 1000க்கு ஒப்புக்கொண்டு, இன்று (ஏப். 22) 60 சதவீத வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துள்ளனர். கரன்சி பாசனம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் மதிவேந்தன் முந்துகிறார். திமுக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் இவர் மீண்டும் அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

நிலவரம்: திமுக வெற்றி

சேந்தமங்கலம் (தனி):

இத்தொகுதியில் திமுக தரப்பில் மறைந்த எம்எல்ஏ பொன்னுசாமியின் மகள் பூமலர் போட்டியிடுகிறார். அனுதாப அலையில் வெற்றி பெறுவார் என்ற யூகத்தில் அவருக்கு திமுக மேலிடம் சீட் கொடுத்துள்ளது. முதல்நாளே சிப்காட் அமைய உள்ள பகுதியில் பரப்புரைக்குச் சென்றபோது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த பரப்புரை, கடைசி நான்கு நாள்களில்தான் வேகம் எடுத்தது.

இத்தொகுதியில் அதிமுக தரப்பில் களம் காணும் சந்திரசேகரன், ஏற்கனவே இருமுறை எம்எல்ஏ ஆக இருந்தவர். மா.செ. தங்கமணி, ஒ.செ. ‘தண்ணீமாத்தி’ சந்திரன், சேந்தமங்கலம் ஒ.செ. ரமேஷ் ஆகியோருடன் உரசல் இருந்தாலும் மக்களிடம் நல்ல இமேஜ் இருக்கிறது. தனது மகன் திருமணத்திற்கு தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று தாம்பாளத்தட்டில் பட்டுச்சேலை, வேட்டி, வெற்றிலை பாக்கு, இனிப்புகளுடன் அழைப்பிதழ் வைத்து அழைத்ததை இப்போதும் மக்கள் நினைவுகூர்கின்றனர்.

இறுதிக்கட்டத்தில் திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு தலா 1500 ரூபாய் பாய்ச்சப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் கொலுசு, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொள்வதற்கான கூப்பன் மாதிரிகளையும் சூரியக்கட்சி வழங்கி இருப்பது ‘ஒர்க்அவுட்’ ஆகியிருக்கிறது. இலைக்கட்சி தரப்பில் 1000 ரூபாய் பட்டுவாடா நடந்துள்ளது.

நிலவரம்: திமுக வெற்றி

குமாரபாளையம்:

இத்தொகுதியில், அதிமுகவின் பவர்ஃபுல் மையங்களுள் ஒருவரான மாஜி அமைச்சர் தங்கமணி களம் காண்கிறார். அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பணபலத்தை நம்பி வெற்றிபெறும் நம்பிக்கையில் இருக்கிறார்.

திமுக தரப்பில் குமாரபாளையத்தில் களம் காணும் ‘கொக்கு’ பாலுவும் ஸ்பின்னிங் மில், டெக்ஸ்டைல், ரியல் எஸ்டேட் என பசையான வேட்பாளர்தான். எதையும் கடாமுடாவென அணுகக்கூடியவர் என்ற பேச்சு இருந்தாலும், தேர்தல் வித்தைகளை நன்கு கற்றவர். தங்கமணிக்கு எல்லா வகையிலும் கடும் சவால் அளித்து வந்ததால் குமாரபாளையம் தொகுதியில் போட்டி மிகக்கடுமையாக இருக்கிறது என்கிறார்கள்.

திமுக தரப்பில் 2000, அதிமுக தரப்பில் 2500 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கமணி ஏற்கனவே வேட்டி, சேலம், பாத்திரங்கள் கொடுத்து வாக்காளர்களை ‘கவர்’ செய்து வைத்திருக்கிறார். தங்கமணி மீண்டும் தொகுதியைத் தக்க வைப்பார் என்கிறார்கள்.

நிலவரம்: அதிமுக வெற்றி

திருச்செங்கோடு:

இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொமதேக கட்சித் தலைவர் ஈஸ்வரன் எம்எல்ஏ மீண்டும் களமிறங்கியுள்ளார். வெப்படை, பள்ளிபாளையம் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள், ரிங் ரோடு, மாவட்ட தலைமை மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை, அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு புதிய தேர் உள்ளிட்ட பணிகளைச் செய்துள்ளது அவருக்கு பிளஸ். இந்தக் கோயில் அறங்காவலர் குழுவில் முதலியார் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்காதது, மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திற்கு சிலை நிறுவப்படாதது உள்ளிட்ட விவகாரங்களில் எழுந்துள்ள சலசலப்புகளும், கொ.வெ.கவுண்டர் சாதி மீதான மிகையான பாசமும் ஈஸ்வரன் மீதான விமர்சனங்களாக முன்வைக்கப்படுகிறது.

இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் களமாடும் சந்திரசேகர், பெரிய அளவில் செல்வாக்கு இல்லாதவர். மாஜி எம்எல்ஏ பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் பரப்புரை களத்தில் ஆர்வம் காட்டவில்லை. இரட்டை இலை சின்னமும், அதிமுகவின் கரன்சி பாசனமும் கைகொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.

தவெக தரப்பில் போட்டியிடும் மாஜி ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், நாட்டு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தேர்தல் அறிவிக்கையையொட்டி பரிசுப் பொருட்கள் சப்ளை என அலப்பறை கூட்டியவர், வாக்குப்பதிவு நெருங்க நெருங்க கரன்சியை எடுக்காமல் ‘கப்சிப்’ ஆனார். அவர் பெறக்கூடிய வாக்குகள் யாருக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து திருச்செங்கோட்டில் முடிவுகள் மாறக்கூடும்.

கொங்கு ஈஸ்வரன் தரப்பில் 2000, அதிமுக தரப்பில் 1000 ரூபாய் பட்டுவாடா நடந்துள்ளது.

நிலவரம்: கொமதேக வெற்றி

பரமத்தி வேலூர்:

இத்தொகுதியில் அதிமுக தரப்பில் போட்டியிடும் சிட்டிங் எம்எல்ஏ சேகர் மீது தொகுதியில் பெரிதாக அதிருப்தி இல்லை. கட்சியினர் வீடுகளில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆஜராகி விடுவார் என்பதால் கட்சிக்குள் ஆதரவான போக்கு உள்ளது. பள்ளிக்கூட அதிபரான சேகரின் தம்பி ராஜா, மாஜி அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர். கரன்சி பாசனமும், இரட்டை இலை சின்னமும் மீண்டும் கரை சேர்க்கும் என நம்புகிறார் சேகர்.

இத்தொகுதியில் திமுக தரப்பில் களமிறங்கியுள்ள கிழக்கு மா.செ. கே.எஸ்.மூர்த்தி, களத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட செல்வாக்கு, மண்டல தேர்தல் பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் அரவணைப்பும், அரசின் நலத்திட்டங்களும் இவருக்கு பிளஸ். மகளிர் உரிமைத் தொகை பெரிய அளவில் சென்றடைந்திருப்பதும் திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

திமுக தரப்பில் 3000, அதிமுக தரப்பில் 1000 ரூபாயும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நிலவரம்: திமுக வெற்றி

ஒட்டுமொத்த கள நிலவரம்:

திமுக கூட்டணி: 4
அதிமுக கூட்டணி 2

  • பேனாக்காரன்

Leave a Reply