பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் ‘வினாடி-வினா’ போட்டிகள் நடத்தப்படுவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேட்கப்படும் வினாவுக்கு நொடிப்பொழுதில் விடை அளிக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு விநாடி – வினா என்று பெயர் வந்தது.
இப்போது பிரச்சினை அதுவன்று. வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என்பதுதான்.
வினாடி என்ற சொல்லை
வி+னாடி என்றும்;
விநாடி என்ற சொல்லை
வி+நாடி என்றும் பிரித்து எழுதலாம்.
இவற்றில், ‘னாடி’ என்றால்
எந்தப் பொருளும் தராது.
‘நாடி’ என்பது ஒரு வினையைக் குறிக்கும். நாடிச்செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். நாடித்துடிப்பையும் குறிக்கும். விநாடியில் உள்ள ‘வி’ என்ற முன்னொட்டானது விசை, விரைதல், சிறந்த, உயர்வான என பல பொருள்கள் தருகின்றன. விரைந்து நாடுதல் எனலாம்.
நொடியின் அடிப்படையில்
உருவானச் சொல்தான் விநாடி.
விரைந்து துடிப்பதுதான் நாடி.
நாடியின் கால அளவை
ஒட்டிதான் விநாடி என்ற சொல் பிறந்தது.
ஆக, கேட்கப்படும் வினாவுக்கு
விரைவான கால அளவுக்குள்
பதில் சொல்வதுதான், விநாடி – வினா.
ஆக, விநாடி என்பதே
சரியான பதமாகும்.
அதாவது,
ந, ன, ண ஆகிய எழுத்துகளில்,
கால அளவைக் குறிக்கும் விநாடி
என்ற சொல்லுக்கு ‘தந்நகர’
எழுத்தான ‘நா’ எழுத்துதான்
பயன்படுத்த வேண்டும்.
‘றன்னகர’ எழுத்தான ‘னா’-வை
பயன்படுத்துவது பிழையாகும்.
”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்கிற குறட்பாவில் வரும் நோய்நாடி, நோய்முதல் நாடி, வாய்நாடி ஆகிய சீர்களில் வரும் நாடி என்ற சொல்லை ஆராய்ந்து / அறிந்து என்ற பொருளில் வள்ளுவர் கையாண்டுள்ளார். ‘நாடி’ என்ற சொல்லுக்கு இப்படியும் ஒரு பொருள் உண்டு.
நாம் காலகாலமாகச் செய்து வரும் இன்னொரு பிழையையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் ஒரு நொடியை, ‘செகண்ட்’ (second) என்கிறோம். பலரும் நினைப்பதுபோல் ஒரு நொடியும், ஒரு விநாடியும் ஒரே பொருள் கொண்டது அல்ல. 24 நொடிகள் சேர்ந்ததுதான் ஒரு விநாடி கால அளவாகும்.
ஊடகங்களில்,
அணை நீரின் இருப்பு
குறித்த செய்திகளின்போது,
விநாடிக்கு ஒரு லட்சம்
கனஅடி நீர் திறந்து
விடப்பட்டதாகவோ,
அணைக்கு விநாடிக்கு 2 லட்சம்
கனஅடி நீர் வந்ததாகவோ
குறிப்பிடுகின்றனர்.
அது முற்றிலும் தவறு.
நொடிக்கு என்பதைதான்
அவர்கள் தவறுதலாக
விநாடிக்கு என்கிறார்கள்.
ஊடகங்கள் விநாடி என்ற
சொல்லை தொடர்ந்து தவறாக
வினாடி என்றே பயன்படுத்தி
வருகின்றன.
தமிழ் – தமிழ் அகரமுதலி இணையதளத்தில் விநாடி என்ற சொல்லுக்கு ‘ஒரு காலநுட்பம்’ என்று பொருள் தந்துள்ளனர். அதேநேரம், ‘வினாடி’ என்ற சொல்லுக்கு தமிழ் அகரமுதலியில் பொருள் எதுவும் தரப்படவில்லை.
‘வினாடி’ என்ற சொல்லை, ‘வி+னாடி’ என்று பதம் பிரித்து எழுதும்போது வரும் ‘னாடி’ என்ற சொல்லுக்கு தமிழில் பொருளே இல்லை. சொல்லப்போனால் ‘வினாடி’ என்ற சொல்லே தமிழில் இல்லை என்பதே உண்மை.
அண்மையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, தமிழகம் முழுவதும் திருவள்ளுவரை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை பொதுநூலகத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் நடத்தி வருகின்றன.
இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழிலும் கூட, ‘வினாடி-வினாப்போட்டி’ என்றே பிழையாக குறிப்பிட்டு இருந்தனர்.
சேலம் மாவட்ட பொதுநூலகத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் செய்திகளிலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் ‘வினாடி-வினா’ போட்டி என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.
வினாடி என்பது பிழை; விநாடிதான் சரி என சேலம் மாவட்டப் பொதுநூலகத்துறையின் கவனத்திற்கு, கடந்த 21.12.2024ஆம் தேதியே கொண்டு சென்றோம். அவர்கள் ஏனோ பிழை திருத்தம் செய்யவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டிச. 28ஆம் தேதி, ‘திருக்குறள் வினாடி-வினாப் போட்டி’யின் இறுதிச்சுற்று நடத்தப்படும் என்று பிழையாகவே அச்சிட்டு இருந்தனர்.
இது தொடர்பாக,
தமிழ் வளர்ச்சித்துறை,
பொதுநூலகத்துறை அலுவலர்கள்
தரப்பில் கேட்டபோது,
”முந்தைய ஆண்டுகளில்
வினாடி – வினா நிகழ்ச்சி
தொடர்பான கடிதங்கள்,
சுற்றறிக்கைகளை ஆய்வு செய்தபோது
அதிலும் வினாடி – வினா என்றே
இருந்ததால் இந்தமுறையும்
அப்படியே அச்சிட்டு விட்டோம்,”
என அலட்டிக் கொள்ளாமல்
பதில் அளித்தனர்.
அரசு அலுவலகங்களில் பழைய ஆவணக் கோப்புகள் என ஒன்று இல்லாவிட்டால், அரசு ஊழியர்களுக்கு புதிதாக சொந்த சரக்கில் ஒரு கடிதம் கூட எழுதத் தெரியாது போலிருக்கிறது.
யாரோ, எங்கேயோ முன்பு செய்த
பிழையை ஆண்டாண்டு காலமாக
தொடர்ந்து வருவது என்பது
அலட்சியம் மட்டுமின்றி,
குற்றமும் ஆகும்.
நீள் துயிலில் இருந்து தமிழ் வளர்ச்சித்துறையும், பொது நூலகத்துறையும் உடனடியாக விழித்தெழ வேண்டியது அவசியம் மட்டுமின்றி மிக அவசரமும் கூட.
- பேனாக்காரன்