Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்தில், நடிகர் விஜய் இன்று (அக். 15, 2017) திடீரென்று சந்தித்தார்.

விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம், வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யு / ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

எப்படியும் படத்தை தீபாவளியன்று வெளிக்கொண்டு வந்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும். ஒருபுறம், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முதன்முறையாக மூன்று வேடம் ஏற்றுள்ள விஜய், மூன்று கதாநாயகிகள், ஏஆர் ரஹ்மான் இசை, அரசியல் பஞ்ச் வசனங்கள் என ஏகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது, ‘மெர்சல்’. படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு ‘மெர்சல்’, 100வது படமும்கூட. அதனால் பெரிய அளவில் படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணமே பின்பற்றப்பட்டால், படத்தின் அசலைக்கூட திரும்ப எடுக்க முடியாது என்ற கவலையில் படத்தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. போட்டிக்கு வேறு எந்த பெரிய நடிகர்களின் படமும் இல்லாததால், இந்த தீபாவளியில் படத்தை திரையிட்டால் ஒரே வாரத்தில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிக்கு மேல் அள்ளிவிடலாம் எனவும் படத்தயாரிப்பு தரப்பும், நடிகர் விஜய் தரப்பினரும் கருதுகிறார்கள்.

அதற்கேற்ப இப்போதே முன்பதிவுகளும் தொடங்கி விட்டன. அதனால், வழக்கம்போல் விழாக்கால சலுகையாக தீபாவளியன்றும், அந்த வாரத்தின் இறுதி நாள் வரையிலுமாவது சிறப்புக் கட்டணம் நிர்ணயித்து வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

முதல்வருடனான இன்றைய சந்திப்பில் மேற்சொன்ன விவகாரங்களும் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காகவே இன்றைய தினம் திடீர் சந்திப்பு நடந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

‘கபாலி’ பட வெளியீட்டின்போது முதல் மூன்று நாள்களில் டிக்கெட் விலை ரூ.3000 வரைக்கும்கூட விற்பனை செய்யப்பட்டதையும் இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்ற சலுகையை, பெரிய பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அதிகாரப்பூர்வமாக வெளிவந்த செய்தியில், கேளிக்கை வரி 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டதற்கும், திரையரங்க கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவிக்கவே அவர் முதல்வரை சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார்.

-வெண்திரையான்.