Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்து வரும் நிலையில், விரைவில் புதிதாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அரியணையேறிய கையோடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு இருந்த ஆளுநர்களை கட்டாய ஓய்வில் செல்லும்படி வற்புறுத்தியது. பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர்.

கல்ராஜ் மிஸ்ரா

ஆனாலும், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோசய்யா, தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். அவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்ததாலும், நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த பரஸ்பர நட்பின் காரணமாகவும் ரோசய்யா பதவிக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்த பின்னரே ஓய்வு பெற்றார்.

அதன்பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்து வருகிறார். ஓரிரு மாதங்களில் அவரே தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டு விடுவார் என்றும் அப்போது பேச்சுகள் எழுந்தன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

¢அதைத்தொடர்ந்து தமிழக ஆளுங்கட்சிக்குள் உச்சக்கட்ட குழப்ப நிலை உருவானது. சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், தீபா, டிடிவி தினகரன் என பல அணிகளாக பிளவுபட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம், சசிகலா, அமைச்சரவைக்குழுத் தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டது, நீட் தேர்வுக்கான அவசர சட்டம் போன்ற முக்கியமான அரசியல் நகர்வுகளின்போது தமிழகத்தில் இருந்திருக்க வேண்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், மஹாராஷ்டிராவிலேயே முகாமிட்டு இருந்தார். பாஜக மேலிடத்தின் அஸைன்மென்ட் டுகளின்போது மட்டுமே தமிழகம் வந்து செல்லும் ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார்.

எஸ்.எம்.கிருஷ்ணா (இடது)

மிக முக்கிய மாநிலமான தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் இல்லாததால், தமிழக முதல்வரால் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்திய அளவில் அரசுக்கு எதிராக அதிகமான போராட்டங்களை சந்தித்து வரும் தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் தேவை.

மேலும், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டு பாஜக அரசு, நேற்று அமைச்சரவை மாற்றமும் செய்துள்ளது. அப்போது, நிர்மலா சீதாராமன் அல்லது உமாபாரதி ஆகியோரில் யாராவது ஒருவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக உமாபாரதியை இப்போதைக்கு தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று பாஜ மேலிடம் சொல்லிவிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனால் தமிழக ஆளுநர் போட்டியில் இருந்து அவர்கள் விலகிவிட்டனர்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா, கடந்த மார்ச் மாதம் பாஜகவில் ஐக்கியமானார். தற்போது 85 வயதான அவர், மஹாராஷ்டிரா மாநில ஆளுநர், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர், இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, மன்மோகன்சிங் ஆகியோரின் அமைச்சரவையிலும் அங்கம் வகித்த பழுத்த அனுபவசாலி.

எனினும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களில் ஊறிப்போன ஒருவராக இருந்தால் தங்களது கொள்கைகளை தமிழகத்தில் ஆழமாகக் கொண்டு செல்ல முடியும் என்றும் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

அதனால் அடுத்த வாய்ப்பாக, உத்தரபிரதேச மாநில பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான கல்ராஜ் மிஸ்ராவை தமிழக ஆளுநர் பதவிக்கு ‘டிக்’ செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். உத்தரகாண்டு தனி மாநிலம் உருவாவதில் பெரும் பங்காற்றியவர்.

தற்போதைய பாஜக அமைச்சரவையில் மத்திய சிறு, குறு தொழில்துறை அமைச்சராக இருந்தவர். சமீபத்தில்தான் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, புதியவர்களுக்கு வழிவிட்டுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக 22 வயது முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வருபவர். அதனால், கல்ராஜ் மிஸ்ராவே தமிழக ஆளுநராக நியமிக்கப்பட அதிக சாத்தியக்கூறுகள் இருப்பத £கவும் சொல்லப்படுகிறது..

பிரதமர் நரேந்திர மோடி தற்போது பிரிக்ஸ் மாநாட்டுக்காக சீனா சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பியதும், தமிழக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– புதிய அகராதி.