Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

வாகன ஓட்டிகள், வரும் 6ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் செப். 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது. டிஜிட்டல் உலகத்தில், அசல் உரிமத்தை கையில் வைத்திருக்காமல், ‘டிஜி லாக்கர்’ முறையில் பதிவு செய்து கொண்டால் போதுமானது என்றெல்லாம் கருத்துகள் எழுந்தன.

இதையெல்லாம் ஏற்க மறுத்த தமிழக அரசு, தனது உத்தரவில் உறுதியாக இருந்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க செவ்வாய்க்கிழமை (நாளை வரை) வரை தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவு நாளை முடிவுக்கு வர உள்ள நிலையில், மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (செப். 4) நடந்தது.

விசாரணையின்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர், ”சாலை விபத்துகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. விபத்துகளை கட்டுப்படுத்தவே அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ன் படி, வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வாகன தணிக்கையின்போது காட்ட வேண்டும்,” என்றும் கூறினார்.

வழக்கை விசாரித்த அமர்வு, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டிக்க முடியாது என்று கூறியதுடன், 6ம் தேதி (புதன் கிழமை) முதல் அனைத்து வாகன ஓட்டுநர்களும் அசல் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அசல் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும், மழை, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதும் அந்தந்த வாகன ஓட்டுநர்களின் கடமை என்றும் கருத்து கூறியுள்ளது.

அசல் உரிமம் இல்லாதது போன்ற போக்குவரத்து விதிகளை மீறினால் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ன் படி 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க முடியும்.

மேலும், அரசுத்தரப்பு பதிலை மனுவாக தாக்கல் செய்யும்படியும், வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்றும் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.