Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

 

சங்க இலக்கியங்களில்
பெண்களின் அங்கங்கள்
குறித்தான வர்ணனைகள்
உச்சம் தொட்டாலும்,
அவை ரசிக்கத்தக்க
வகையிலேயே
இருந்திருக்கின்றன.
முகச்சுளிப்பை
ஏற்படுத்துவதில்லை.
குறிப்பாகச் சொல்ல
வேண்டுமெனில்,
குறுந்தொகையில்
உவமைகள் வெகு இயல்பாக
பொருந்தி வந்திருக்கும்.
எல்லா காலத்திலும்
ரசிக்கத்தக்க வகையில்
பாடல்கள் அமைந்திருப்பதும்
குறுந்தொகையின் தனித்த
அடையாளம்.

 

எட்டுத்தொகையுள் செறிவும்,
இனிமையும் மிக்கது,
குறுந்தொகை என்று எந்த
அவையிலும் நாம் துணிச்சலாக
கட்டுத்தொகை கூட
வைக்க முடியும்.

 

தமிழ் ஆர்வலர்களிடம்
உரையாடுகையில் அடிக்கடி
இப்படிச் சொல்வேன்…
”குறுந்தொகையில் பாடல்களை
எழுதிய புலவர்கள்,
பாடு பொருள்களுக்காக
மெனக்கெட்டிருப்பார்களே
தவிர, பொருள் (பரிசில்)
தேடி அலைந்திருக்க
மாட்டார்கள். ஆனால்,
இப்போதுள்ள பேச்சாளர்கள்
சிலர், குறுந்தொகையில்
வெறும் நான்கைந்து
பாடல்களை மட்டுமே
படித்துவிட்டு, பெருந்தொகை
வாங்குகிறார்கள்,” என
வேடிக்கையாகக்
குறிப்பிடுவதுண்டு.

 

தலைவனைப் பிரிந்ததால்
தலைவிக்கு ஏற்படும் துயரம்,
உடல் முழுவதும் பரவும்
பசலை நிறம் பற்றி எல்லாம்
வள்ளுவன் பிரிவாற்றாமை,
உறுப்பு நலன் அழிதல்
என பல பாடல்களில்
குறிப்பிட்டு இருக்கிறான்.

 

ஆனால், குறுந்தொகையில் ஒரு பாடல், தலைவியின் துயரத்தை முற்றிலும் புதுமையாகப் பாடுகிறது. கற்பனையின் உச்சம் அது. படித்த மாத்திரத்தில், ரசனையின் வெளிப்பாடாய் நம்மை அறியாமலேயே ‘ச்சே!’ என்று சொல்ல வைத்துவிடும். அந்தப்பாடல்…

 

”சேறும் சேறும் என்றலின்
பண்டைத் தம் மாயச் செலவாச்செத்து
மருங்கற்று மன்னிக் கழிக என்றேனே
அன்னோ! ஆசுஆகு எந்தை
யாண்டு உளன்கொல்லோ?
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே”

(குறு: 325)

 

என பாடுகிறார், புலவர் நன்னாகையார். தலைவியின் கூற்றாகப் பாடப்படும் பாடல் இது.

 

அருஞ்சொற்பொருள்:

சேறும் – செல்லுவேன்

மாயச்செலவு – பொய்ச்செலவு (போகாமலே போகப்போவதாக பொய் கூறுதல்)

செத்து – எண்ணி

மருங்கு – பக்கம்

மன்னுதல் – நிலைபெறுதல்

ஆசு – பற்றுக் கோடு

எந்தை – என் தந்தை

 

அதாவது, தலைவன் தன் தலைவியிடம், ‘உன்னை விட்டு பிரிந்து போகப் போகிறேன்… உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்’ என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

ம்க்கும்… இப்படித்தான் சொல்வானே தவிர, ஒருபோதும் நம்மை விட்டு எங்கேயும் போக மாட்டான் தலைவன். அப்படியே வெளியே போனாலும் இருட்டுவதற்குள் வீட்டுக்கு வந்துவிடுவான். காதலுற்ற மனைவியை இதற்கு முன்பு நாள் கணக்கில் பிரிந்திருக்காத நிலை. அதனால் அவன் எப்போது, உன்னை பிரிந்து போகப்போகிறேன் என்று சொன்னாலும் அதை பெரிதாக அவள் சட்டை செய்வதில்லை. அலட்சியப்படுத்தி விடுவாள்.

 

இப்படித்தான் ஒருநாள், கணவன், இன்று நான் உன்னை பிரிந்து போய்விடுவேன் என்று சொல்லவும், அவன் வழக்கம்போல் வேடிக்கையாகச் சொல்வதுபோல கருதி, ”சரி… போனால் போ… எனக்கென்ன? இனிமேல் என் கிட்டயே வந்துடாதே. என் கண்ணில் படாமல் ஓடிப்போய்விடு,” என்கிறாள் தலைவி. இது ஒன்றும் வெறுப்பினால் சொல்லப்பட்டது அல்ல. அது ஒரு வகையான சீண்டல்; ஊடல்.

 

அவளும் அப்படி விளையாட்டுக்குச் சொல்லப்போக, அன்று விபரீதம் நடந்து விட்டது. தலைவன் எங்கோ சென்றுவிட, அள்ள அள்ளக்காதல் கொண்டிருந்த தலைவன் நீண்ட காலமாகியும் வீடு திரும்பாததால் உடல் மெலிவுற்றாள்.

 

எல்லா காலத்திலும் புலம்புவதற்கும், தோள் சாய்வதற்கும் தோழியும் தோழர்களும்தானே உடனடி மருந்து. உடலாலும், மனதாலும் நொந்து கிடக்கும் தலைவி, தன் தோழியிடம் புலம்பித்தீர்த்தாள்.

 

”என்னையே எப்போதும் ஒரு நாய்க்குட்டி போல சுத்தி சுத்தி வருவானே… எனக்கு புருஷன் மட்டுமல்ல. என் அப்பாவைப் போல கண்ணும் கருத்துமாக பார்த்துக்குவானே… அவன் சும்மாதான் சொல்றான்னு நினைச்சு, போய்த்தொலைனு சொல்லிட்டேன். ஐயோ… அவன் எங்கே இருக்கானோ…?,” என பிரிவின் துயர் தாளாமல் குலுங்கி குலுங்கி அழுது புலம்புகிறாள்.

 

அப்போது அவள் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர், கன்னங்கள் வழியே கீழே இறங்கி, அவளின் சங்குக் கழுத்தைக் கடந்து, நெருக்கமான, திரண்ட அவளின் இரு முலைகளின் இடைவெளியில் நிரம்பி குளம்போல் தேங்கி நிற்கிறது.

 

அந்த நேரத்தில், மேலே பறந்து கொண்டிருந்த கரிய கால்களைக் கொண்ட, வெள்ளை நிறமுடைய கொக்கு ஒன்று, தலைவி அழுததால் அவளின் முலைகள் இடையே தேங்கிய கண்ணீரைப் பார்த்ததும், மேய்வதற்கான குளம் கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டதாம்.

 

இதுதான் அந்த சங்கப்பாடலின் முழுமையான பொருள். பெண்ணின் பிரிவாற்றாமையை சற்றே மிகைப்படுத்தி பாடியிருந்தாலும், புலவர் நன்னாகையாரின் கற்பனைத் திறத்தை காலம் கடந்தும் வியக்காமல் இருக்க முடியாது.

 

இன்னொரு சங்க இலக்கியப் பாடலுடன் மீண்டும் உரையாடுவோம்.

 

– செங்கழுநீர்