Thursday, February 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் ‘பாரடைஸ் ஆவண கசிவு’ மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கப்படும் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்த பாஜக, கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலைக்கூட இதுவரை வெளியிட முன்வரவில்லை. கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. இன்னும் 17 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தலையும் அக்கட்சி சந்திக்க இருக்கிறது.

இது போதாதென்று, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக கடந்த 8.11.2016ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துவிட்டது. பிரதமரின் அந்த முயற்சி எத்தனை பெரிய முட்டாள்தனமானது என்பதை பாஜகவினர் தவிர ஏனையோர் நன்கு அறிவர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை பனாமா ஆவணங்கள் மூலம் வெளியானது. அதன் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

அதற்குள், ‘பாரடைஸ் ஆவணக் கசிவு’ மூலம் கருப்புப் பணம் பதுக்கிய இந்திய முதலைகளின் அடுத்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள புலனாய்வு பத்திரிகையாளர்கள் (ICIJ – International Consortium of Investigative Journalists) தீவிரமாக விசாரித்து இந்த தகவலை பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் தொகுத்து உள்ளனர்.

இதுகுறித்து, ஏற்கனவே ஜெர்மனி நாட்டின் ‘சடட்ஸே ஸெய்டங்’ நாளிதழ் விரிவாகவே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பாரடைஸ் ஆவண கசிவு என்பது 1.34 கோடி பக்கங்களைக் கொண்டது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் பதுக்கிய இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.

பொதுவாக கருப்புப் பணம் பதுக்கும் கும்பலுக்கு சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகள்தான் சொர்க்க பூமி. அங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு வட்டி கிடையாது. ஆனால், உச்சக்கட்ட பாதுகாப்பு கிடைக்கும். முதலீட்டாளர்களின் விவரங்களை அந்த நாட்டு வங்கிகள் ஒருபோதும் யாருக்கும் சொல்லாது என்பதும் கருப்புப் பணம் பதுக்கும் கும்பலுக்கு வசதியான ஒன்று.

வங்கிகளில் சேமிப்பது மட்டுமின்றி, மொரீஷியஸ், கேமன் தீவுகள், பெர்முடா, மெக்ஸிகோ போன்ற நாடுகள், குட்டி குட்டி தீவுகளில் போலியான பெயர்களில் நிறுவனங்களை தொடங்குவதும் இன்னொரு உத்திதான்.

அந்த நிறுவனத்தின் பெயர்கள் எல்லாமே வெறும் பேப்பரில் மட்டும்தான் இருக்கும். ஆனால் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு, வரவு-செலவு நடந்ததாக, நஷ்டம் அல்லது லாபம் அடைந்ததாக தணிக்கை அறிக்கையும் இருக்கும்.

இதுபோன்ற சட்ட விரோத அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதற்காக அல்லது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுப்பதற்காகவே அங்கு ஏராளமான தணிக்கையாளர்கள், சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களின் முழுநேரப் பணியே இதுதான்.

அப்படி ஒரு சட்ட ஆலோசனை மற்றும் தணிக்கை நிறுவனம்தான் ஆப்பிள்பை. பெர்முடா நாட்டில் இருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக தகிடுத்தத்தம் செய்வதில் 119 வருஷம் அனுபவம். அப்படி எனில், வேலையும் சுத்தமாக இருக்கும் அல்லவா? இந்நிறுவனத்துடன் சிங்கப்பூரை சேர்ந்த ஏசியாசிட்டி நிறுவனமும் இணைந்து, உலகம் எங்கிலும் உள்ள கருப்புப் பணம் கும்பலுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவி இருப்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு சட்ட உதவி மையமான ஆப்பிள்பை நிறுவனத்திடம் இருந்து ரகசியமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம், பல இந்தியர்கள் உட்பட, கார்பரேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை எப்படி வரி ஏய்ப்பு செய்து சொத்துக்களைச் சேர்த்துள்ளது என்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளன.

மொத்தம் 180 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உள்ள பெயர்கள் எண்ணிக்கையில் பார்த்தால், இந்தியா 19வது இடத்தில் உள்ளது. அதில் மொத்தமாக 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியர் ஒருவருக்கு தனிச்சிறப்பும் கிடைத்திருக்கிறது. என்ன தெரியுமா? ஆப்பிள்பை நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச வாடிக்கையாளராக இந்தியாவின் சன் குரூப் நிறுவனம் இருக்கிறதாம். அதை தொடங்கியவர், நந்த்லால் கெம்கா. மேலும் 118 ‘ஆஃப்ஷோர்’ நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன.

சன் டிவி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, எஸ்ஸார்- லூப் 2ஜி வழக்கு, எஸ்என்சி – லாவலின் ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஆம்புலன்ஸ் ஊழலில் சிக்கிய ‘சிகிஸ்டா ஹெல்த்கேர் நிறுவனம், சிபிஐ வசமுள்ள வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சிபிஐ அனுப்பிய ரகசிய கடிதங்களும் ஆப்பிள்பையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களின் தகவல்களும் இந்த பாரடைஸ் பேப்பர்ஸில் கசிந்துள்ளன.

அமிதாப் பச்சன், பெர்முடாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் 2004ம் ஆண்டு முன்பே பங்குதாரராக இருந்துள்ளார். 2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தாராளமயமாக்கல் நடவடிக்கையைத் தொடர்ந்து, நீரா ராடியா, திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி தில்னாஷின் ஆகியோரின் பெயர்களும் பாரடைஸ் ஆவண கசிவில் இடம்பெற்றுள்ளன.

ஊழல் கறை படியாதவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பாஜகவின் மத்திய அமைச்சரான ஜெயந்த் சின்ஹாவின் பெயரும் அந்தப் பட்டியலில் இருக்கிறது. ஜெயந்த் சின்ஹா, இப்போது மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார்.

‘ஒமிட்யார்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பெயர் உள்ளது. பிஜேபி ராஜ்யசபா எம்.பி. மற்றும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சேவைகள் நிறுவனர் (எஸ்.ஐ.எஸ்) ஆர்.கே. சின்ஹா மால்டா பட்டியலில் உள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் பதுங்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் லிமிடட் இந்தியாவின், ஆஃப் ஷோர் கம்பெனிகள் மூலம் வாங்கப்பட்ட மில்லியன் டாலர்கள் கடன்களை, டியாகோ நிறுவனம் தள்ளுபடி செய்தது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பாரடைஸ் பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ளது.

வருமான வரித்துறை மூலம், கடந்த வருடம் ஜிஎம்ஆர் குரூப்பில் சோதனை நடந்தது. அந்த நிறுவனம், ஆப்பிள்பை மூலம் அமைக்கப்பட்ட 28 ஆஃப்ஷோர் நிறுவனங்கள் உதவியோடு, வரி ஏய்ப்பு செய்துள்ள ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்திய நிறுவனங்களான ஜிண்டால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜாஸ், எமார் எம்.ஜி.எப், வீடியோகான், ஹிரானந்தினி மற்றும் டிஎஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்களின் பெயர்களும் பாரடைஸ் பேப்பரில் உள்ளன.

கொசுரு: கருப்புப் பண பதுக்கலில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரும் இடம் பிடித்திருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியும் கூட.