Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

மதவாத அரசியலால் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆண்டுக்கு ஆண்டு பின்னோக்கிச் சென்றுகொண்டுள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் கடமை பற்றி பிரதமர் நரேந்திர மோடி வகுப்பெடுப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் இருக்கிறது.

தினத்தந்தி நாளிதழின் பவள விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 6, 2017) சென்னை வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களின் கடமை குறித்தும் பேசத்தவறவில்லை.

ஊடகங்கள் குறித்து அவர் பேசியதில் முக்கியமான இரண்டு செய்திகள் கவனத்துக்குரியவை. ஒன்று, இந்தியாவில் ஊடகங்கள் அரசை சுற்றியே சுழல்கின்றன. இரண்டாவது, 125 கோடி மக்களை சுற்றியே இருக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை பத்திரிகைகள் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு செய்திகள்.

அவர் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியாவில் தனி முதலாளிகளின் கையில் ஊடகங்கள் இருப்பதால், விளம்பர வருவாய் மற்றும் இன்ன பிற ஆதாயங்களுக்காக அவை அரசை சுற்றியே இயங்கி வருகின்றன. அரசின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக மாறிவிட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டியதாகக்கூட புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும், மக்களைச் சுற்றி இயங்கக்கூடிய தீவிர இடதுசாரி ஊடகங்கள், சுதந்திரமான தனிநபர் ஊடகங்கள் மக்கள் பிரச்னைகளை பேசாமல் இல்லை. ஆனால் சுட்டிக்காட்டப்படும் பிரச்னைகள் மீது அரசு காட்டும் அக்கறை எள் முனையளவும் இல்லையே.

தொடர்ந்து அரசின் கதவுகளைத் தட்டும், சுதந்திர ஊடகவாதிகளை நசுக்கவே செய்கிறது அரசும், அரசு அதிகாரிகளும். சமயங்களில், அரசேகூட குண்டர்களைபோல் ஊடகக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துக் கொண்டுதானே இருக்கிறது.

ஆர்எஸ்எப் என்ற அமைப்பு (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்) உலகளவில் நடத்திய ஆய்வில், ஊடக சுதந்திரத்தில் இந்தியா 136வது இடத்தில் இருப்பதாக கணித்துள்ளது. இது நடப்பு 2017ம் ஆண்டு நிலவரம். கடந்த ஆண்டு, 133வது இடத்தில் இருந்தோம்.

ஆக, ஆண்டுதோறும் ஊடக சுதந்திரம் என்பது இந்தியாவில் பின்னோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதே கள யதார்த்தம். குறிப்பாக புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு கேள்விக்குறிதான் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தாத கட்சி என்று தனித்துப் பார்த்துவிட முடியாது. இந்தக் கட்சி, அந்தக்கட்சி என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ ஆட்சியின்போதும் அரசுக்கு எதிராகப் பேசும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இப்போதுள்ள பாஜக தலைமையிலான ஆட்சியில் முன்பைவிட தாக்குதல்கள் பல மடங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆட்சியில் கோஸ்வாமிகளுக்குதான் காலம்.

கடந்த செப்டம்பர் மாதம், தன் வீட்டு வாசலிலேயே பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை கொலையாளிகள் யார் என்றுகூட கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு எழுத்தாளர் கல்புருகியின் நிலை என்னவாயிற்று? அவருக்கும் மரணம்தானே பரிசாகக் கிடைத்தது. இவர்கள் இருவருமே பாஜகவை கடுமையாக எதிர்த்து எழுதி வந்தவர்கள்.

வட இந்தியாவில் ஓம்பிரகாஷ் ஷர்மா ராப் பாடலில் (ஆன்ட்டி கீ காண்ட்டி…) ஆபாசம் இருப்பதைக் கண்டித்து எழுதிய ‘தி குயின்ட்’ இணைய ஊடக ஆசிரியரான தீக்ஷா ஷர்மாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. அதன்மீது எந்த நடவடி க்கையும் எடுக்காமல் பாஜக அரசு வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தது?

பாஜக ஆட்சியை விமர்சித்து எழுதியதற்காக அபய்குமார் (ஆசியன் நியூஸ் இன்டர்நேஷனல்), முகமது அலி (தி இந்து), தேபோபரத் கோஷ் (ஃபர்ஸ்ட் போஸ்ட்) ஆகிய பத்திரிகையாளர்கள் கடுமையாக மிரட்டலுக்கு ஆளாகினர். கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரிபுராவைச் சேர்ந்த செய்தியாளர் சாந்தனு பவ்னிக் கொல்லப்பட்டார்.

அவ்வளவு ஏன்? சில நாள்களுக்கு முன், கந்துவட்டி கொடூரத்தைக் கண்டுகொள்ளாத அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் கைது செய்ததுகூட அண்மைய நிகழ்வு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சில மாதங்களுக்கு முன், அமைச்சர் வேலுமணியை விமர்சித்து எழுதியதற்காக சென்னையைச் சேர்ந்த செய்தியாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்ட அவலமும் நடந்தது.

அவர் மீதான தனிப்பட்ட விரும்பத்தகாத காரணங்களால் அப்போது முன்னணி பத்திரிகை நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்கூட அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டாதது சோகம். அந்தளவுக்குதான் பத்திரிகையாளர்களின் தரமும் இருக்கிறது.

மக்களைச் சுற்றி வாருங்கள் என்று கூறும் பிரதமரிடம், பணமதிப்பிழப்பின் தோல்வி குறித்தும், அதனால் அப்பாவி மக்கள் 150 பேர் பலியானது குறித்தும், சிறுதொழில்கள் முடங்கியது குறித்தும் சொன்னால் ஏற்பாரா? அந்தளவுக்கு சகிப்புத்தன்மை இருக்குமா?

ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை, ‘கமல்ஹாஸன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்’ என்று இந்து மஹாசபா சொல்வதில் இருந்தும், வார்த்தைக்கு வார்த்தை ‘ஆன்ட்டி இண்டியன்’ என்று முழங்கும் ஹெச்.ராஜாக்களிடம் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்டச் சூழலில் ஊடக சுதந்திரம் குறித்து நரேந்திர மோடி பேசுவதுதான் ஆகப்பெரிய நகை முரண்.

– பேனாக்காரன்.