பாலியல் குற்றம், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் அரசு ஊழியராக இருந்தாலும், காவல்துறையினராக இருந்தாலும் பாகுபாடின்றி மாவுக்கட்டு போடுங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள
அண்ணா பல்கலைக்கழகத்தில்
மாணவி ஒருவர் பொறியியல்
பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 23.12.2024ஆம் தேதி இரவு,
அந்த மாணவி தனது காதலனுடன்
பல்கலை வளாகத்தில் மறைவான
இடத்தில் நின்று பேசிக்கொண்டு
இருந்தார்.
அப்போது அங்கு வந்த
மர்ம நபர் ஒருவர்,
காதலனை மிரட்டி விரட்டியடித்துவிட்டு,
தன்னை பாலியல் பலாத்காரம்
செய்ததாகவும், அதை அவர்
செல்போனில் வீடியோவாக
பதிவு செய்ததாகவும்
சம்பவத்தன்று இரவு
கோட்டூர்புரம் காவல்நிலையத்தில்
அந்த மாணவி புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தன்னிடம்
அத்துமீறிய மர்ம நபர்,
‘இன்னொரு சார் இருக்கிறார்.
அவர் அழைக்கும்போது நீ
செல்ல வேண்டும்,’ என்று
மிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்திய அளவில் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றாகவும், மிகவும் பாதுகாப்பான பல்கலை என்றும் பெயர் பெற்ற அண்ணா பல்கலை வளாகத்தில் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ள தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு பற்றிக்கொண்டது.
இது ஒருபுறம் இருக்க, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அறிக்கை ஊடகங்களில் வெளியானது.
பாலியல் வழக்குகளில்
பதிவு செய்யப்படும் எப்ஐஆர்,
எந்தக் காரணம் கொண்டும்
பொதுவெளியில் வெளியிடப்படக்
கூடாது. இந்நிலையில்,
எப்ஐஆர் வெளியான விவகாரம்
அரசியல் களத்திலும் பெரும்
புயலைக் கிளப்பி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த
ஞானசேகரன் (37) என்ற
இளைஞரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
அவர், சாலையோரம் பிரியாணி
கடை நடத்தி வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம்
செல்போன் வீடியோ அழைப்பு
மூலம் பேசிய காவல்துறையினர்,
அவரை பாலியல் பலாத்காரம்
செய்த நபர் இந்த நபர்தானா?
என விசாரித்தனர். அவரும்
வீடியோ அழைப்பில்
ஞானசேகரனைப் பார்த்து,
அவர்தான் தன்னிடம்
தவறாக நடந்து கொண்டார்
என்று அடையாளம் காட்டினார்.
இந்நிலையில் ஞானசேகரன்,
காவல்நிலைய கழிப்பறைக்குச்
சென்றபோது வழுக்கி விழுந்ததில்
அவருடைய ஒரு காலிலும்,
ஒரு கையிலும் எலும்பு
முறிவு ஏற்பட்டது. அவரை
15 நாள்கள் காவலில் வைக்க
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியை நாசப்படுத்திய
சம்பவத்தில் தொடர்புடைய
நபர்களை கைது செய்யக்கோரியும்,
தமிழக அரசைக் கண்டித்தும்
அதிமுக, பாஜக உள்ளிட்ட
கட்சிகள் அண்ணா பல்கலை
முன்பும், தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றன.
இந்த வழக்கை ஆரம்பத்தில்
இருந்தே காவல்துறையினர்
சரியாக விசாரிக்கவில்லை.
மட்டுமின்றி, மாணவி அளித்த
புகாரின்பேரில் பதிவு
செய்யப்பட்ட எப்ஐஆர்
ஆவணத்தை ஊடகங்களுக்கு
கசிய விட்டதிலும் காவல்துறை
அலட்சியமாக செயல்பட்டு உள்ளது.
அந்த மாணவியின்
ஒழுக்கத்தை தனிப்பட்ட
முறையில் அசிங்கப்படுத்தும்
நோக்கத்தில் இவ்வாறு
எப்ஐஆரை திட்டமிட்டு
கசிய விட்டிருக்கலாம் என்றும்,
குற்றம்சாட்டப்பட்ட நபரை
தப்பிக்க வைக்கும் நோக்கிலும்கூட
காக்கி வட்டாரத்தில் இவ்வாறு
செய்திருக்கலாம் என்றும்
கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள
ஞானசேகரன், திமுகவில்
முக்கிய பொறுப்பில் உள்ளவர்
என்றும், அதனால்தான்
காவல்துறை அலட்சியமாக
செயல்படுவதாகவும் அரசியல்
களத்தில் பேசப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு இடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, விடுமுறைக்கால நீதிபதி ஆகியோருக்கு அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் கடிதம் எழுதி இருந்தார்.
இந்தக் கடிதத்தையே மனுவாகக் கருதி, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்பு வரலட்சுமி தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் வெள்ளிக்கிழமை (டிச. 27) முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
உள்துறை முதன்மைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், அண்ணா பல்கலை துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் பிற்பகலில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை உடனடியாக நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
மனுதாரர் தரப்பில்,
வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன்
ஆஜராகி, ‘பிரபலமான பல்கலை
வளாகத்தில் வெளிநபரான
ஞானசேகரன் எப்படி சுதந்திரமாகச்
சுற்றித் திரிந்தார் என்பதே
தெரியவில்லை. இவர் மீது
20 குற்ற வழக்குகள்
இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
யூடியூபர் மீதெல்லாம்
குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தும்
காவல்துறையினர், இவர் மீது
அதுபோல கடுமையான
நடவடிக்கை எடுக்காதது
ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும்
ஏற்படுத்துகிறது. எப்ஐஆர்
விவரம் கசிய விடப்பட்டுள்ளது,’
என்று வாதிட்டார்.
மற்றொரு மனுதாரர்
மோகன்தாஸ் தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி,
‘ஆளுநர் மாளிகைக்கு அருகே
இந்த சம்பவம் நடந்துள்ளது.
குற்றச் சம்பவம் நடந்துள்ள
அண்ணா பல்கலையில்
பொருத்தப்பட்டுள்ள 72 சிசிடிவி
கேமராக்களில் 56 கேமராக்கள்
இயங்கவில்லை,’
என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள்,
‘மாணவி பாலியல் வழக்கு
தொடர்பாக காவல்துறை ஆணையர்
பத்திரிகையாளர்கள் சந்திப்பை
எப்படி நடத்தினார்?
அகில இந்திய பணி விதிகளின்படி
பத்திரிகையாளர்கள் கூட்டம்
நடத்த அரசிடம் காவல்துறை
ஆணையர் அனுமதி பெற்றாரா?
இந்த வழக்கில் ஞானசேகரன்
மட்டும்தான் குற்றவாளி
என்று எப்படி முடிவுக்கு வந்தார்?
அதை ஏன் பத்திரிகையாளர்
கூட்டத்தில் அறிவித்தார்?
காவல்துறை ஆணையரே
இப்படி கூறினால், வழக்கை
விசாரிக்கும் காவல் ஆய்வாளர்
எப்படி முறையாக விசாரிப்பார்?
வேறு நபருக்கு தொடர்பு
உள்ளதா என்ற விவரம்
எப்படி தெரியும்?,’ என்று
சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அரசுத் தரப்பில் ஆஜரான
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன்,
‘பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த
புகாரில் ஒரு நபர்தான் தன்னை
பாலியல் கொடுமை செய்ததாக
கூறியுள்ளார். குற்றவாளியை
காவல்துறையினர் 12 மணி
நேரத்திற்குள் கைது செய்துவிட்டனர்.
காவல்துறையினர் நேர்மையாக
விசாரணை நடத்தி நடவடிக்கை
எடுத்து வருகின்றனர்,’ என்றார்.
குறுக்கிட்ட நீதிபதிகள்,
‘கைது செய்யப்பட்ட நபருக்கு
காலிலும், கையிலும் மாவுக்கட்டு
போடப்பட்டுள்ளதே?
இப்படி மாவுக்கட்டுப் போட்டால்
அவரிடம் எப்படி விசாரணை
நடத்த முடியும்?
நடந்த சம்பவத்தை அவர்
எப்படி கூறுவார்?,’ என்று
கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து காவல்துறை தரப்பில் ஆஜராகும் குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம் அளிப்பார் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘எல்லா துறைகளிலும் பாலியல் சீண்டல், பாலியல் கொடுமை நடக்கிறது. பாலியல் கொடுமை செய்யும் அந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும், ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கும் ஏன் மாவுக்கட்டு போடுவது இல்லை? காவல்துறையிலும் பாலியல் கொடுமை நடக்கும்போது அவர்களுக்கு மாவுக்கட்டு போடுவது இல்லையே ஏன்?
குற்றவாளிகள் என்றாலே குற்றவாளிகள்தான். குற்றவாளிகளுக்கு மத்தியில் மாவுக்கட்டு போடுவதில் பாகுபாடு பார்க்கக் கூடாது,’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டனர்.
மேலும் நீதிபதிகள், ‘மாவுக்கட்டு போடுவதால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. இதுபோல மாவுக்கட்டு போடும் வேலை எல்லாம் பிற துறைகளில் நடப்பது இல்லை. இந்த வழக்கில் எப்ஐஆர் அறிக்கை எப்படி கசிந்தது? அதற்கு யார் பொறுப்பு?,’ என்று கேள்வி எழுப்பினர்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் குமரேசன், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வழக்குப்பதிவு செய்யப்படும்போது காவல்துறை இணையதளத்தில் அதை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்த காவல்துறையினர், அதை யாரும் பார்க்காத வகையில் மறைக்கப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் எப்ஐஆர் அறிக்கையை சிலர் எடுத்து கசிய விட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என்று விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத்தின் மீது பழி போடக்கூடாது. போக்சோ, பாலியல் வழக்குகளின் விவரங்களை வெட்டவெளிச்சமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை,’ என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள் மேலும் கூறியது:
‘இப்போது, எப்ஐஆர் கசிந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் செல்போன் எண்ணும் உள்ளது. யாராவது அந்த பெண்ணுக்கு போன் செய்தால் என்ன செய்வது? பாதிக்கப்பட்ட மாணவியின் ஊர், தந்தை பெயர் என்று எல்லாமே வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கையே முற்றிலும் உடைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டு உள்ளனர்.
அதேநேரம், புகார் அளித்த மாணவியின் துணிச்சலை பாராட்டுகிறோம். அந்த மாணவியை நாம்தான் பாதுகாக்க வேண்டும். இதுபோல் வேறு எந்த மாணவியாவது பாதிக்கப்பட்டு இருந்தால் துணிச்சலாக புகார் செய்ய வேண்டும். இதுதான் சரியான நேரம்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், 10 ஆண்டுகளாக அண்ணா பல்கலை வளாகத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளார். மாவுக்கட்டு போடுவதற்குப் பதில் இதையெல்லாம் உங்கள் காவல்துறை விசாரித்தார்களா?
கைது செய்யப்பட்ட நபருக்கு எப்படி கால், கை முறிந்தது என்று அனைவருக்கும் தெரியும். கழிப்பறையில் விழுந்தாரா? அல்லது வேறு எங்காவது விழுந்தாரா? என்பது வேறு விஷயம். அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. அதை விமர்சிக்கவும் விரும்பவில்லை.
ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் எப்படி வெளியானது? எப்ஐஆர் எப்படி கசிந்தது? என்பதுதான் எங்களது முக்கிய கேள்விகள் ஆகும்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் அண்ணா பல்கலை நிர்வாகத்திற்கும் பொறுப்பு உள்ளது. பல்கலை வளாகத்திற்குள் வர வேண்டும் என்றால் காவல்துறையினர் கூட அனுமதி பெற வேண்டும். அப்படிப்பட்ட வளாகத்திற்குள் இந்த சம்பவம் எப்படி நடந்தது?
அண்ணா பல்கலை இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சனிக்கிழமை (டிச. 28) தாக்கல் செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரை இந்த வழக்கின் புலன் விசாரணையில் தலையிட விரும்பவில்லை.
எப்ஐஆர் கசிந்தது எப்படி? அதற்கு யார் பொறுப்பு? இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்து காவல்துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை சனிக்கிழமை (டிச. 28) காலை மீண்டும் விசாரிக்கின்றோம்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
<<காதலிப்பது தனி உரிமை>>
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், ”காதலனுடன் இருட்டுப் பகுதிக்கு மாணவி ஏன் சென்றார்? தனியாக ஏன் இரவில் சென்றார்? ஆண் நண்பருடன் ஏன் பேசினார்? என்ற பழைய சிந்தனைகளுடன் கூடிய காரணங்களை காவல்துறையினர் கூறக்கூடாது.
ஒரு பெண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் பேசவோ, நடந்து செல்லவோ உரிமை உள்ளது. இது அவருடைய அடிப்படை உரிமை. காதல் செய்வது கூட பெண்ணின் தனிப்பட்ட உரிமை. இதையெல்லாம் காவல்துறையினர் குறை கூறக்கூடாது,” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
<<கல்விக் கூடங்களில் போதைப் பொருட்கள் புழக்கம்>>
இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் காவல்துறைக்கு முக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்கினர்.
‘இப்போது சமுதாயத்தில்
நடக்கும் குற்றச் செயல்களுக்கு
போதைப் பொருட்களும்
முக்கிய காரணமாக உள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதைப்
பொருட்கள் பள்ளிக்கூடம்,
கல்லூரி வளாகத்திற்குள்ளே
நுழைந்து விட்டது.
ஒரு காலத்தில் சாராயத்தை
ஒழிக்க மதுவிலக்கு காவல்துறை
பிரிவை உருவாக்கியதைப் போல,
கஞ்சா உள்ளிட்ட போதைப்
பொருட்களை ஒழிக்க,
தனி காவல்துறை படையை
உருவாக்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இந்த போதைப் பழக்கம்
அதிகரிப்பால் தனி நபருக்கு
மட்டுமின்றி, அரசுக்கு
மிகப்பெரிய பிரச்னை ஏற்படும்.
பாதையை ஒழிக்க அரசு
தீவிர நடவடிக்கை எடுத்து,
இரும்புக்கரம் கொண்டு
ஒடுக்க வேண்டும்,” என்று
நீதிபதிகள் அறிவுரை கூறினர்.
- பேனாக்காரன்