Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழலாம்! ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன்) ஜோடி ஒன்றாகச் சேர்ந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம்
விஜயவாடாவைச் சேர்ந்தவர்
மல்லிகா (25 வயது, பெயர்
மாற்றப்பட்டுள்ளது). இவரும்
காதம்பரி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்பவரும் ஓரினச்
சேர்க்கை ஆர்வலர்கள்.

இவர்கள் இருவரும்
விஜயவாடாவில் உள்ள
மல்லிகாவின் பெற்றோர்
வீட்டில் கடந்த ஓராண்டாக
‘ஒன்றாக’ சேர்ந்து வாழ்ந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம்
காதம்பரியை அவருடைய
பெற்றோர் வலுக்கட்டாயமாக
தங்கள் வீட்டிற்கு
அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி
அடைந்த மல்லிகா,
தனது தோழி காதம்பரியைக்
காணவில்லை என்று
விஜயவாடா காவல்நிலையில்
புகார் அளித்தார். அதன்பேரில்,
விசாரணையில் இறங்கிய காவல்துறை,
பெற்றோர் வீட்டில் காதம்பரி
இருப்பதை அறிந்து,
அவரை மீட்டனர்.
ஆனால் அவரோ,
தான் 18 வயது பூர்த்தி
அடைந்த மேஜர் ஆன
பெண் என்றும், தனது
துணையுடன் சேர்ந்து வாழ
விரும்புவதாகவும்
காவல்துறையினரிடம்
முறையிட்டார்.

எனினும், காவல்துறையினர்
அதற்கு ஒப்புக்கொள்ளாததோடு,
காதம்பரியை அரசு காப்பகத்தில்
15 நாள்கள் தங்க வைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தன்னுடைய
பெற்றோர் தன்னை துன்புறுத்துவதாக
காதம்பரி திடீரென்று காவல்துறையில்
புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறையினர்
இந்த விவகாரத்தில் தலையிட்டனர்.
பின்னர் அரசு காப்பகத்தில் இருந்து
விடுவிக்கப்பட்ட காதம்பரி,
தனியார் நிறுவனம் ஒன்றில்
வேலைக்குச் சென்று வந்தார்.
இடை இடையே மல்லிகாவையும்
சந்தித்து வந்தார்.

ஆந்திரா மாநில உயர்நீதிமன்றம்

ஆனாலும் மகளின் போக்கை
விரும்பாத காதம்பரியின் தந்தை,
மீண்டும் அவரை ஒரு வாகனத்தில்
வலுக்கட்டாயமாக அழைத்துச்
சென்று விட்டார். அதையடுத்து மல்லிகா,
அமராவதியில் உள்ள ஆந்திர மாநில
உயர்நீதிமன்றத்தில், தனது
தோழியை ஆஜர்படுத்தக் கோரி
ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,
காதம்பரியை நர்சிபட்டணத்தில்
உள்ள வீட்டில் அவருடைய
தந்தை சட்ட விரோதமாக
அடைத்து வைத்திருப்பதாக
குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு,
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
ரகுநந்தன் ராவ், மகேஸ்வர ராவ்
ஆகியோர் அடங்கிய அமர்வு
முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
உடனடியாக காதம்பரியை மீட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி
காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

அதன்பேரில் விஜயவாடா
காவல்துறையினர், காதம்பரியை
மீட்டு ஆந்திர மாநில
உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர், தான்
மல்லிகாவுடன் சேர்ந்து வாழ
விரும்புவதாகவும்,
அதற்கு அனுமதி அளித்தால்
பெற்றோர் மீது அளித்த
புகாரை வாபஸ் பெறுவதாகவும்
நீதிபதிகள் முன்னிலையில்
தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட
நீதிபதிகள், பெண் ஓரினச்
சேர்க்கை ஜோடியான
மல்லிகா – காதம்பரி இருவரும்
சேர்ந்து வாழ உரிமை
உள்ளதாகக் கூறி வழக்கை
முடித்து வைத்தனர்.
18 வயது பூர்த்தியான
காதம்பரிக்கு, தனது துணையை
தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது
என்றும், மல்லிகா உடனான
காதம்பரியின் வாழ்க்கையில்
அவருடைய பெற்றோர்
தலையிடக்கூடாது என்றும்
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவல்துறையில் கொடுத்த புகாரை வாபஸ் பெற விரும்புவதால், காதம்பரியின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த தீர்ப்பு, ஆந்திர மாநிலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply