சேலம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை புகார்களால் புரட்டி எடுத்த சம்பவத்தின் பின்னணியில் மாவட்ட அமைச்சருக்கு எதிரான அதிருப்திதான் காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் கிளம்பி உள்ளன.

சேலம் மாநகராட்சி 43வது வார்டு
கவுன்சிலர் குணா என்கிற குணசேகரன்.
வழக்கறிஞரான இவரை, ‘சார்’ என்ற
அடைமொழியுடன் கட்சியினர் குறிப்பிடுவர்.
தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக
உள்ள வழக்கறிஞர் ராஜேந்திரனை
எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்.
இருமுறை மண்டலக்குழுத்
தலைவராக இருந்தவர்.
இப்போதும், திமுக தலைவர்
மு.க.ஸ்டாலினின் ‘குட்புக்’கில்
இருப்பவர்.

இவர், வழக்கமாக மாமன்ற
கூட்டத்தில் வருவதும் தெரியாது;
செல்வதும் தெரியாது.
சைலண்ட் மோடிலேயே
இருக்கக்கூடிய குணசேகரன்,
கடந்த பிப். 25ம் தேதி நடந்த
மாமன்ற கூட்டத்தில் திடீரென்று
பொங்கி எழுந்துவிட்டார்.
மேயர் முதல் காண்டிராக்டர்கள்
வரை ஒரு பிடி பிடித்தார்.
சேலம் மாநகரில் ”புதிதாக 7 நகர்ப்புற
சுகாதார நிலையங்கள் கட்டி
முடிக்கப்பட்டு பல ஆண்டுகள்
ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.
என் வார்டில், ஓந்தாப்பிள்ளைக்காடு
பகுதியில் சாலைகள் குண்டும்
குழியுமாக இருக்கின்றன.
அந்த சாலை இன்னும்
சீரமைக்கப்படவில்லை.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்
அந்த சாலை வழியாக
மருத்துவமனைக்குச் செல்வதற்குள்
செத்துவிடுவார்கள்.
அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும்
எங்களை மதிப்பதில்லை.
தமிழக முதலமைச்சர்
தினமும் மாவட்டந்தோறும்
ஆய்வுக்குச் செல்கிறார்.
ஓயாமல் உழைக்கிறார்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகளால்
ஆட்சிக்கும், எங்களுக்கும்
கெட்டப்பெயர் ஏற்படுகிறது,”
என்று நீண்ட நாள் குமுறலைக்
கொட்டினார் குணசேகரன்.
விரக்தியில் அவர்,
கையில் வைத்திருந்த மைக்கை
‘தொப்’பென்று மேஜை மீது
கிடாசிவிட்டு, மேயர் அருகே சென்று,
தன் தலைக்கு மேலே இரு
கைகளையும் கூப்பி, பெரிய கும்பிடு
போட்டுவிட்டு கூட்ட அரங்கில்
இருந்து விருட்டென்று
வெளியேறினார்.
இது அவருடைய வழக்கமான
அணுகுமுறை இல்லையே என்பதுபோல்
மொத்த கவுன்சிலர்களும் அவரையே
கவனித்துக் கொண்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து அரங்கத்தில்
சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
‘சார்’ அலை ஓய்ந்ததுதான் தாமதம்.
சூரமங்கலம் மண்டலக்குழுத்
தலைவரும், முன்னாள் நகர
அவைத்தலைவருமான
எஸ்.டி.கலையமுதன்
பேசத் தொடங்கினார்.

”ஓடை மறுசீரமைப்பு பணிகளை முடிக்காமலேயே முடிவுற்றதாக தீர்மான புத்தகத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளனர். யார் அந்த அதிகாரி? முதல்வர் திறந்து வைத்த கட்டடத்தில் கூட குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படாமல் உள்ளது. பேசாமல் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம் என்றிருக்கிறேன்,” என விரக்தியாச் சொன்னார் எஸ்டிகே.
திமுகவில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நகரச் செயலாளரும் கவுன்சிலருமான ஜெயக்குமார், 9வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் ஆகியோர், ”சேலம் மாநகராட்சியில் நிதி ஆதாரம் இல்லை என்று பொது நிதியில் இருந்து ஒப்பந்ததாரர்கள் உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்ய தயங்குகிறார்கள். மாநகராட்சியில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை,” என புகார் புஸ்தகம் வாசித்தனர்.

திமுக கவுன்சிலர்களின் எந்தக் குற்றச்சாட்டுக்கும் மேயர் ராமச்சந்திரன் முகத்தில் சிறு அசைவு கூட இல்லை.
ஆளுங்கட்சி கவுன்சிலர்களே, மாநகராட்சிக்கு எதிராக இறங்கி அடிக்கத் தொடங்கியதால் அதிமுக கவுன்சிலர்கள் எல்லாவற்றையும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திமுக கவுன்சிலர்கள் திடீரென்று பொங்கியதன் பின்னணி குறித்து மூத்த உ.பி.க்களிடம் விசாரித்தோம்.
”சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. மொத்தம் 60 வார்டுகளும், சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கின்றன. இதுவரை ஒரு வார்டில்கூட எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் உருப்படியாக நடக்கவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கு
ஓராண்டே இருக்கிறது.
கடும் சொத்து வரி உயர்வு,
விசைத்தறித் தொழிலுக்கு வரி
ஆகியவற்றால் போகும் இடங்களில்
எல்லாம் மக்களுக்கு எங்களால்
பதில் சொல்ல முடியவில்லை.
பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்
பல ஆண்டுகளாக நடக்கின்றன.
இப்பணிகள் முடிவுறாமலே
மக்களிடம் டெபாசிட் வசூலிக்கின்றனர்,”
என்றனர்.
ஆளுங்கட்சியினரின் குமுறலுக்கு
இவை மட்டும் காரணம் இல்லை
என்கிறார்கள் விவரம் அறிந்த
உடன்பிறப்புகள். இதன் பின்னணியே
வேறு என்றனர்.
”சேலம் மாநகராட்சியில்
திமுக தரப்பில் 48 கவுன்சிலர்கள்
உள்ளனர். இவர்களில் சுற்றுலாத்துறை
அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித்துறை
அமைச்சர் கே.என்.நேரு மற்றும்
மேயர் ஆதரவாளர்கள் சிலர் என
மூன்று கோஷ்டிகள் இருக்கின்றனர்.
இப்போது கவுன்சிலர்களாக
உள்ள குணசேகரன்,
முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம்,
எஸ்.டி.கலையமுதன், உமாராணி,
சக்கரை சரவணன், ஜெயக்குமார்,
உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி ராஜ்குமார்,
தெய்வலிங்கம், பூங்கொடி சேகர்,
பி.எல்.பழனிசாமி, முருகன்
ஆகியோருக்கு கவுன்சிலர்
சீட்டே தரக்கூடாது என்பதில்
அமைச்சர் ராஜேந்திரன்
உறுதியாக இருந்தார்.

ஆனால் இவர்களோ அப்போது
சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக
இருந்த கே.என்.நேரு மூலமாக சீட் பெற்று,
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்றனர். இவர்கள் உள்பட
28 கவுன்சிலர்கள் மாவட்ட
அமைச்சருக்கு எதிரான
மன நிலையில் உள்ளனர்.
ஜெயலலிதா, 2001ல் மீண்டும்
முதல்வர் ஆனபோது கலைஞரை
நள்ளிரவில் காட்டுமிராண்டித்
தனமாக கைது செய்தார்.
அதைக் கண்டித்து, சேலத்தில்
பஸ் கண்ணாடிகளை உடைத்து
மறியலில் ஈடுபட்டு சிறை
சென்றவர்தான் குணசேகரன்.
கட்சிக்காரர்கள் மீது அதிமுகவினர்
தாக்கும்போது அங்கே
ஆள்களுடன் சென்று களமாடியவர்.
இப்படி கட்சிக்காக வேலை
செய்தவரை ரவுடி என முத்திரை
குத்தி வருகிறார் மாவட்ட
அமைச்சர் ராஜேந்திரன்.
அவர் ரவுடி என்றால் அவர்
சொந்த செலவில் கட்டிய நூலகத்தையும்,
கிரிக்கெட் அகாடமியையும்
கட்சித் தலைவர் தளபதி நேரில்
வந்து எப்படி திறந்து வைத்திருப்பார்?
குணாவின் மகள் இறந்ததை அடுத்து,
அவருடைய வீட்டுக்கு நேரில்
வந்து துக்கம் விசாரித்தார் தளபதி.
2016 சட்டமன்ற தேர்தலில்
சேலம் தெற்கில் குணா போட்டியிட்டார்.
அவரை சொந்த கட்சியினரே
சூழ்ச்சி செய்து தோற்கடித்த
வரலாறும் உண்டு.
இதெல்லாம் நீண்ட காலமாக
அவர் மனதில் அழுத்தம்
இருந்து கொண்டே இருந்தது.
அதனால்தான் கடந்த மாத கூட்டத்தில்
வெடித்து விட்டார் குணசேகரன்.
வயது மூப்பு காரணமாக, தேர்தல் அரசியலில் எஸ்.டி.கலையமுதனுக்கு அநேகமாக இதுதான் கடைசி வாய்ப்பு. சேலத்தில் கழகத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் அவரும் ஒருவர். எப்படியாவது மேயர் ஆகிவிட வேண்டும் என்று கனவில் இருந்தார். மேயர் ரேஸில் அவர் இருந்தால் தான் நினைத்தபடி, இப்போது மேயராக உள்ள ராமச்சந்திரனை அந்தப் பதவியில் அமர்த்த முடியாது என அமைச்சர் ராஜேந்திரன் கணக்குப் போட்டார். அதனால் கலையமுதனுக்கு கவுன்சிலர் சீட் தரக்கூடாது என லாபி செய்தார். அடு எடுபடவில்லை.
மேயர் பதவி வேட்கையில் இருந்த கலையமுதனுக்கு கடைசியில் மண்டலக்குழுத் தலைவர் பதவிதான் கிடைத்தது. ராஜேந்திரனுக்கு நிதி ரீதியாக ராமச்சந்திரன் பக்கபலமாக இருந்ததால் அவரையே மேயராக்கி அழகு பார்த்தார் ராஜேந்திரன். அந்த நன்றிக்கடனுக்கு அவரும் பொம்மை மேயராக வந்து போகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி ஒருவரின் கம்பெனிக்கு மட்டும் 530 கோடி ரூபாய்க்கு டெண்டர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அமைச்சருக்கு நெருக்கமான கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு மட்டும் சில ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டு உள்ளன.
வ.உ.சி. பூ மார்க்கெட் டெண்டர் விவகாரத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராகவே நீதிமன்றம் செல்ல வைத்துள்ளனர். பூ மார்க்கெட் விவகாரத்தில் உள்ள அரசியல் குறித்து ஏற்கனவே புதிய அகராதி இணைய பத்திரிகை விரிவாக எழுதி இருக்கிறது.
இத்தனை அதிருப்திகளின் பின்னணியில்தான் அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக 28 கவுன்சிலர்கள் அணி திரண்டுள்ளனர். இப்போது வெளிப்படையாக பேசியவர்கள் சிலர்தான். பேச வேண்டிய நேரத்தில் மற்ற அதிருப்தி கவுன்சிலர்களும் வெளிச்சத்திற்கு வருவார்கள். சேலம் மாநகராட்சியில் நடந்த சம்பவம் மேயருக்கு எதிரான அதிருப்தியால் அல்ல.
கட்சித் தலைமை சிறப்பான ஆட்சியை நடத்தினாலும், சேலம் மாவட்ட அமைச்சர் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில்லை. இதெல்லாம் தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும்,” என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
”துப்புரவுப் பணிகளை
ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம்
சார்பில் 20 ஆயிரமும்,
மாநகர திட்டமைப்புப் பிரிவு
சார்பில் 20 ஆயிரமும் அமைச்சருக்கு
எதிராக நேரடியாக களமாடும்
கவுன்சிலர்கள் தவிர மற்றவர்களுக்கு
மாதந்தோறும் பட்டுவாடா
செய்யப்பட்டு வருகிறது.
மாத மாமூலுக்கு பங்கம்
வந்துவிடுமோ என்பதால் பல
கவுன்சிலர்கள் வெளிப்படையாக
அதிருப்தியைக் காட்டிக்
கொள்வதில்லை,” என்றும்
சொல்கிறார்கள்.
இந்த சலசலப்புகளுக்கு இடையே,
மேயர் பதவிக்கு ஆபத்து என்றும்,
வாஸ்துபடி அவருடைய அலுவலகம்
அமைக்கப்படவில்லை என்றும்
சிலர் கொளுத்திப்போட,
அவசர அவசரமாக சில
நாள்களுக்கு முன்பு தனது
அலுவலகத்தை பக்கத்து அறைக்கு
மாற்றியுள்ளார் மேயர் ராமச்சந்திரன்.
இதற்காக கணிசமான தொகை
செலவிடப்பட்டு உள்ளதாகவும்,
இதை எந்தக் கணக்கில் எழுதுவார்கள்
என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கவுன்சிலர்களின் பாய்ச்சல்,
அலுவலக அறை மாற்றம்
தொடர்பாக சேலம் மாநகராட்சி
மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது,
”கவுன்சிலர்கள் குணசேகரன், ஜெயக்குமார்,
கலையமுதன் ஆகியோர் கூட்டத்தில்
எப்போதும் பேசமாட்டார்கள்.
ஆனால் இந்த சம்பவத்தில்
அவர்கள் முன்பே பேசி
வைத்துக் கொண்டு திட்டமிட்டு
புகார்களைச் சொன்னதாக தெரிகிறது.
யார் மீதோ உள்ள அதிருப்தியை
என் மீது காட்டுகின்றனர்.
மாநகராட்சியில் எனது
அலுவலக அறை வாஸ்து
பிரகாரம் இல்லை.
இரண்டு ஆண்டாகவே
அறையை மாற்ற வேண்டும்
என்றுதான் இருந்தேன்.
இப்போதுதான் அதற்கான
நேரம் வந்தது. என்னுடைய
அறையை மாற்றிவிட்டேன்,” என்றார்.
மாங்கனி மாநகர திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களால் வரும் சட்டமன்ற தேர்தலிலும், சேலத்தில் திமுக பெரிய அளவில் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கின்றனர் கழகத்தின் தீவிர உ.பி.க்கள்.
- பேனாக்காரன்