கரும்பு அரைவைப் பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் பணம் 23 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,
சேலம் கூட்டுறவு சர்க்கரை
ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலை நிர்வாகம் நாமக்கல்,
மோகனூர், ராசிபுரம், சேந்தமங்கலம்,
திருச்சி மாவட்டத்தில் தொட்டியம்,
முசிறி, துறையூர், சேலம் மாவட்டத்தில்
ஆத்தூர், கெங்கவல்லி வரையிலான
பதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்து
சர்க்கரை உற்பத்திக்காக கரும்பு
கொள்முதல் செய்து வருகிறது.
ஆலையின் எல்லைக்கு
உட்பட்ட பகுதிகளில்
கடந்த ஆண்டு 2445 ஏக்கர்
பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது.
அதன் அடிப்படையில்,
2024-2025ம் ஆண்டிற்கு,
1.45 லட்சம் டன் கரும்பு
அரைவைக்குக் கொண்டு வர
சேலம் கூட்டுறவு சர்க்கரை
ஆலை இலக்கு நிர்ணயித்தது.
ஆனால், பருவம் தப்பிய மழை
காரணமாக கரும்பு விளைச்சல்
பெருமளவு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, 75 ஆயிரம் டன் கரும்பு
மட்டுமே அரைவைக்கு வந்தது.
இதற்காக 1155 விவசாயிகளிடம்
இருந்து கரும்பு கொள்முதல்
செய்யப்பட்டது.

கடந்த 2024ம் ஆண்டு
நவம்பர் 18ம் தேதி கரும்பு
அரைவைப் பணிகள் தொடங்கி,
நடப்பு ஆண்டு ஜனவரி 2ம் தேதி
வரை நடந்தன. இதன்மூலம்
மொத்தம் 4800 டன் சர்க்கரை
உற்பத்தி செய்யப்பட்டது.
வழக்கமாக கரும்பு கொள்முதல் செய்த நாளில் இருந்து 15 நாள்களுக்குள் அதற்கான தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுவிடும். இந்நிலையில், கடந்த சீசனுக்கான கரும்பு கொள்முதல் தொகை, அறுவடை முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் பட்டுவாடா செய்யப்படவில்லை.
இது தொடர்பாக விவசாயிகள் முன்னேற்றக்கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் நம்மிடம் பேசினார்.
”சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு பெற்ற விவசாயிகள் பெரும்பாலும் கோ 86032 மற்றும் கோ 11075 ரக கரும்பு பயிர்தான் நடவு செய்து வருகிறோம். இது, 12 மாத பயிராகும்.
கரும்பு கரணை நடவு செய்தல்,
உழவு, களை பறித்தல்,
பார் அமைத்தல்,
வெட்டுக்கூலி,
போக்குவரத்து உள்ளிட்ட
முட்டுவழிச் செலவுகள்
எல்லாம் சேர்த்தால் டன்னுக்கு
2000 ரூபாய் செலவாகும்.
மழை பற்றாக்குறை,
நோய் தாக்குதல், இடுபொருட்கள்
செலவு அதிகரிப்பு உள்ளிட்ட
பல காரணிகளால் ஆண்டுதோறும்
கரும்பு விளைச்சல்
குறைந்து வருகிறது.

ஒரு காலத்தில் ஏக்கருக்கு 50 – 60 டன் கரும்பு உற்பத்தி ஆகி வந்த நிலையில், தற்போது 30 – 40 டன் மட்டுமே விளைச்சல் கொடுக்கிறது. இந்நிலையில் கரும்பு கொள்முதல் தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றோடு, உற்பத்திச் செலவைக் கழித்தால் ஏக்கருக்கு வெறும் 42 ஆயிரம் ரூபாய்தான் வருவாய் கிடைக்கும்.
ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் உழைத்தால் கிடைக்கும் வருமானம் 90 ஆயிரத்திற்கும் குறைவுதான். சொல்லப்போனால் குரூப்&1 நிலையில் உள்ள அரசு ஊழியர் ஒருவர் பெறும் ஒரு மாத சம்பளத்தைவிட சிறு, குறு கரும்பு விவசாயிகளின் ஆண்டு வருமானம் மிக மிகக் குறைவானது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்தளவு மோசமான நிலையில் இருக்கும்போது, கரும்பு பணத்தை உரிய காலத்தில் வழங்காமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. கரும்பு கொள்முதல் தொகை 23.40 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 15 கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் இதே நிலைதான். அவற்றையும் கணக்கிட்டால் 300 கோடி ரூபாய்க்கு மேல் கரும்பு பணம் கொடுபடாமல் உள்ளது. கரும்பு பணத்தை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும்,” என்றார் பாலசுப்ரமணியன்.
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வட்டாரத்தில் விசாரித்தோம்.
”ஒரு காலத்தில் கரும்பு
அரைவைக்கு 2 லட்சம் டன்
வரை கொள்முதல் செய்யப்பட்ட
நிலை இருந்தது. கரும்பு
பயிர் சாகுபடி பரப்பு குறைந்தது,
வறட்சி, உரிய விலை கிடைக்காதது
ஆகியவற்றால் கரும்பு வரத்து
படிப்படியாக குறைந்தது.
இவை மட்டுமின்றி,
இந்த ஆலையில் ஏற்பட்டுள்ள
நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்,
பழுதான இயந்திரங்கள்,
நிரந்தர ஊழியர்கள் இல்லாதது
போன்றவற்றால் கரும்பு சர்க்கரை
கட்டுமானம் அளவும்
குறைந்து விட்டது. 2024-2025ம்
ஆண்டில் கரும்பு அரைத்தபோது
டன்னுக்கு 6.80 சதவீதம்
வரைதான் சர்க்கரை
கட்டுமானம் கிடைத்தது.
அதனால் சர்க்கரை உற்பத்தியும்
4800 டன் மட்டுமே கிடைத்தது.
பழுதான அரைவை இயந்திரங்களை
சரி செய்தால் கரும்பு பிழிதிறன்
கூடுதலாக கிடைக்கும்.
இங்கு உற்பத்தி செய்த
மொத்த சர்க்கரையும்
தமிழ அரசின் சிவில் சப்ளைஸ்
துறைக்கு நேரடியாக விற்பனை
செய்யப்பட்டுவிட்டது. ஆனால்
அரசிடம் இருந்து அதற்கான
பணம் இன்னும் வந்து சேரவில்லை,”
என்கிறது ஆலை வட்டாரம்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பதை, ‘மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட்’ என பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு மார்ச் 28ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை அரசு நிறைவேற்றி வைத்திருக்கிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக
ஆலையின் நிர்வாக இயக்குநர்
குப்புசாமியிடம் கேட்டதற்கு,
”விவசாயிகளுக்கு வழங்க
வேண்டிய கரும்பு கொள்முதல்
பணம் சுமார் 23 கோடி ரூபாயை
விரைவாக வழங்க உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
உள்ளன. கரும்புக்கு கொள்முதல்
விலையாக டன்னுக்கு 3500
ரூபாய் கிடைக்கும்.

வெட்டுக்கூலி போக
மீதத் தொகை விவசாயிகள்
கணக்கில் செலுத்தப்படும்.
இயந்திரங்கள் பழுதால்
இந்தமுறை சர்க்கரை
உற்பத்தித்திறன் மிகவும்
குறைந்துள்ளது. இதுகுறித்தும்
அரசின் கவனத்திற்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளது,”
என்றார் நிர்வாக
இயக்குநர் குப்புசாமி.
உழைப்பவர்களின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்கு கூலி கொடுத்து விட வேண்டும் என்பது நபி மொழி. விவசாய உற்பத்தியில் முன்னேறி இருப்பதாக பட்ஜெட் உரையில் தமிழக அரசு பெருமிதமாகக் கூறியது. அதேநேரம், கரும்பு பணத்தை உடனடியாக வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவது முரணாக இருக்கிறது.
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பிழியப்படுவது கரும்புகளா? அல்லது விவசாயிகளின் உயிரா? என்பதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும் என புலம்புகிறார்கள் விவசாயிகள்.
- பேனாக்காரன்