Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும் என்று வழி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலையில்
பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து
வரும் ஒரு மாணவியை
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த
ஞானசேகரன் என்பவர்,
கடந்த 23.12.2024ம் தேதி இரவு
பல்கலை வளாகத்தில் வைத்து
பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக
ஞானசேகரனை காவல்துறையினர்
கைது செய்தனர். இந்நிலையில்,
பாதிக்கப்பட்ட மாணவியின்
புகார் குறித்த எப்ஐஆர் அறிக்கை,
ஊடகங்களில் கசிந்த விவகாரம்
பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை (டிச. 27) உயர்நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமிநாராயணன் ஆகியோர், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் எப்ஐஆர் அறிக்கை எப்படி கசிந்தது? என்பது குறித்து அரசுத் தரப்புக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், அதன்மீது சனிக்கிழமை (டிச. 28) விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி, சனிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சீல் வைக்கப்பட்ட உறையில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தார்.

அட்வகேட் ஜெனரல்,
‘பதிவு செய்யப்படும்
வழக்குகளின் எப்ஐஆர்
அறிக்கைகள் சிசிடிஎன்எஸ்
இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யும் பணியை மத்திய அரசின்
தேசிய தகவல் மையம் (என்ஐசி)
என்ற ‘நிக்’ மேற்கொள்கிறது.
முன்பு பெண்கள், குழந்தைகள்
தொடர்பான வழக்குகளை
பதிவேற்றம் செய்யும்போது,
அவை தானாகவே மறைக்கப்பட்டு
விடும். யாரும் பார்வையிட முடியாது.

தற்போது மத்திய அரசு
கொண்டு வந்துள்ள புதிய
குற்றவியல் சட்டத்தினால்,
இந்த பாலியல் வழக்கின்
எப்ஐஆர் பதிவேற்றம் செய்யப்பட்டு,
விவரங்கள் சில நொடிகள்
மறைக்கப்படவில்லை.
என்ஐசி தொழில்நுட்ப
பிரச்னையால் எப்ஐஆர்
அறிக்கை கசிந்துள்ளது.

நிக் இணையதளத்தில்
எப்ஐஆரை பார்வையிட
விரும்புவோர் தங்களுடைய பெயர்,
செல்போன் எண்ணை
பதிவு செய்ய வேண்டும்.
செல்போனுக்கு ஓ.டி.பி.
வந்த பிறகு அதை பயன்படுத்தி
இணையதளத்தை திறந்து
விவரங்களை பார்வையிட முடியும்.

அந்த வகையில்,
14 பேர் இந்த எப்ஐஆரை
பார்த்துள்ளனர். எப்ஐஆர்
வெளியானதும் இதுகுறித்து
நிக் அதிகாரிகளுக்கு
தமிழ்நாடு காவல்துறை
மின்னஞ்சல் அனுப்பி
தகவல் தெரிவித்த பின்னரே,
எப்ஐஆர் மறைக்கப்பட்டது.

எப்ஐஆரை பார்த்த அந்த
14 பேரையும் காவல்துறையினர்
விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
எனவே காவல்துறையினர்
எப்ஐஆரை கசியவிடவில்லை,’
என்று விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,
‘3 புதிய குற்றவியல் சட்டங்களும்
ஜூலை மாதமே அமலுக்கு
வந்துவிட்டன. இத்தனை மாதங்கள்
ஆகியும் தொழில்நுட்பத்தை
சரி செய்யவில்லையா?,’
என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘பதிவிறக்கம் செய்தவர்கள் பரப்பி விட்டுள்ளனர். பொதுவாக அரசுக்கும், காவல்துறைக்கும் மட்டுமின்றி ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. எப்ஐஆரை ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன,’ என்று குற்றம் சாட்டினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள்,
‘நீங்கள் ஊடகங்களை
குற்றம் சாட்டக்கூடாது.
ஊடகங்களால்தான் இந்த
சம்பவமே வெளிச்சத்திற்கு
வந்துள்ளது. யாருக்கும்
ஊடகங்கள் எதிரி இல்லை,’
என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்,
‘பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
ஒரு குற்றவாளி என்று
காவல்துறை ஆணையர்
ஏன் விளக்கம் அளித்தார்?
பத்திரிகையாளர்கள் சந்திப்பு
நடத்த அரசிடம் அனுமதி பெற்றாரா?,’
என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், ‘இதுவரை நடந்த புலனாய்வு விசாரணையின்படி, ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக காவல்துறை ஆணையர் பதில் அளித்துள்ளார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று அவர் முடிவு செய்யவில்லை. பொதுவாக ஒரு துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். இதற்காக அரசிடம் அனுமதி பெறத் தேவை இல்லை,’ என்று விளக்கம் அளித்தார்.

அண்ணா பல்கலை தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘189 ஏக்கரில் அமைந்துள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வளாகம் முழுவதும் 988 சிடிசிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 139 கேமராக்கள் மட்டுமே செயல்படவில்லை,’ என்றார்.

மனுதாரர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘இந்த வழக்கில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்தது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய ஆண் நண்பரும்தான். அப்படி இருக்கும்போது குற்றவாளியை அடையாளம் காணும் விதமாக அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு முன்பே, கைதான ஞானசேகரனின் புகைப்படத்தை காவல்துறையினர் பத்திரிகைகள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். வழக்கின் முக்கிய சாட்சியை அழித்து விட்டனர்,’ என்று வாதிட்டார்.

மற்றொரு மனுதாரர் மோகன்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, ‘கைதான ஞானசேகரன் ஆளும் கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பு வகித்ததாகக் கூறப்படுகிறது. அவர் துணை முதல்வர், அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதனால்தான் பல வழக்குகளில் சிக்கிய ஞானசேகரனை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்காமல் இருந்துள்ளனர்,’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘பொது நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களுடன் சிலர் புகைப்படம் எடுப்பது வழக்கம்தான். அதற்காக அந்த பிரபலமானவர்களுக்கு நெருக்கமானவர் என்றெல்லாம் கூற முடியாது,’ என்றனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள விவரம்:

”வழக்கில் கைதான ஞானசேகரன்
திமுக நிர்வாகி என்று மனுதாரர்
தரப்பில் கூறும் குற்றச்சாட்டுகளை
பரிசீலிக்க விரும்பவில்லை.
வழக்கு ஆரம்ப நிலையில்
உள்ளதால், இந்த வழக்கில்
அரசியல் சாயம் பூச
விரும்பவில்லை.

குற்ற வழக்குகளில்,
பெண்கள் பொதுவாகப்
பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வழக்கில் பலம்
வாய்ந்தவர்கள் ஆணா, பெண்ணா?
என்று பட்டிமன்றம்
நடத்த விரும்பவில்லை.

பெண்களுக்கு விரும்பிய
ஆடை அணிவதற்கும்,
தனியாக சாலையில்
செல்வதற்கும், காதலிப்பதற்கும்
உரிமை உள்ளது. பெண்களை
எப்படி வாழ வேண்டும் என்று
வழி நடத்துவதற்கு யாருக்கும்
உரிமை இல்லை. பெண்ணின்
சம்மதம் இல்லாமல் அவரை
யாரும் தொட உரிமை இல்லை.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட
மாணவிக்கு அண்ணா பல்கலை
நிர்வாகம் உளவியல் சிகிச்சை
மூலம் தைரியத்தை ஏற்படுத்த
வேண்டும். அவர் படிப்பை
தொடர விடுதி கட்டணம்,
கல்வி கட்டணம் உள்ளிட்ட
எந்த ஒரு கட்டணமும்
அவரிடம் வசூலிக்கக் கூடாது.

சம்பவம் நடந்து 2ஆவது நாளில்
அரசிடம் முறையான அனுமதி
பெறாமல், பத்திரிகையாளர்கள்
கூட்டத்தைக் கூட்டி, இந்த வழக்கில்
ஒரு குற்றவாளிதான் சம்பந்தப்பட்டு
உள்ளதாக காவல்துறை ஆணையர்
பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அரசு அவரிடம்
விளக்கம் கேட்டு, சட்டப்படி
அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

அதேபோல,
இந்த வழக்கை கோட்டூர்புரம்
மகளிர் காவல்துறையினர்
இனியும் விசாரித்தால் சரியாக
இருக்காது. புலன் விசாரணையும்
பாதிக்கப்படும்.

ஆகவே,
இந்த வழக்கை விசாரிக்க
3 ஐபிஎஸ் அதிகாரிகளைக்
கொண்ட சிறப்புப் புலனாய்வுக்
குழுவை அமைக்கிறோம்.
அதாவது, சென்னை அண்ணா நகர்
காவல்துறை துணை ஆணையர்
டாக்டர் புக்யா சினேகா பிரியா,
ஆவடி துணை ஆணையர்
ஐமன் ஜமால், சேலம் மாநகர
துணை ஆணையர் பிருந்தா
ஆகியோர் கொண்ட சிறப்புப்
புலனாய்வுக் குழுவை
அமைக்கிறோம்.

இந்த அதிகாரிகள் பாலியல் வழக்குடன், எப்ஐஆர் அறிக்கை கசிந்த வழக்கையும் சேர்த்து விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் டிஜிபி வழங்க வேண்டும்.

எப்ஐஆர் கசிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை எப்ஐஆர் கசிவதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள், நபர்கள் ஆகியோரிடம் இருந்து அரசு வசூலித்துக் கொள்ளலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்,” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

  • பேனாக்காரன்

Leave a Reply