Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

அரசியல் விளம்பரத்திற்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி, பாமக வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜன. 2, 2025) உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை.யில்
பி.இ., படித்து வரும் மாணவி ஒருவர்,
அண்மையில் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டார்.
பல்கலை வளாகத்தில்
ஒதுக்குப்புறமான இடத்தில்
இரவு நடந்த இந்த
கொடூர சம்பவம், நாடு
முழுவதும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

மாணவியை நாசப்படுத்தியதாக
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த
ஞானசேகரன் என்ற இளைஞரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்நிலையத்தில் வைத்து
விசாரித்தபோது, வழக்கம்போல் அவர்
கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில்
இடது கை, காலில் எலும்பு
முறிவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்
அதேவேளையில், காவல்துறை
விசாரணையும் தீவிரமாக
நடந்து வருகிறது.

மேலும், மாணவி அளித்த
புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட
எப்ஐஆர் ஆவணம் ஊடகங்களில்
வெளியானது. இதையறிந்து
அதிர்ச்சி அடைந்த சென்னை
உயர்நீதிமன்றம், தாமாக
முன்வந்து இந்த வழக்கை
விசாரித்தது. மேலும், மாணவி
அளித்த புகார் குறித்து விசாரிக்க,
மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள்
கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு
அமைத்து உத்தரவிட்டுள்ளது.

முக்கிய குற்றவாளி
எனக்கருதப்படும் ஞானசேகரன்,
திமுக பிரமுகர் எனச் சொல்லப்படுகிறது.
மாணவி விவகாரத்தைக் கண்டித்து
அதிமுக, பாஜக, பாமக, நாதக,
தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
மாநிலம் முழுவதும் போராட்டம்
நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பாமக தரப்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் மகளிர் அணியினர் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாமக போராட்டம் நடத்த காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு,
நீதிபதி வேல்முருகன்
முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதி,
”பெண்கள் பாதுகாப்பில்
உண்மையான கவனம்
செலுத்தாமல், அண்ணா பல்கலை
மாணவி பாலியல் பலாத்கார
வழக்கை அரசியலாக்குவது ஏன்?,”
என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர்,
”போராட்டம் நடத்தும்
ஒவ்வொருவரும் தங்கள்
மனதில் கை வைத்து
பெண்களுக்கு பாதுகாப்பு
தரப்படும் என்று கூறுங்கள்.

இப்படி ஒரு சம்பவம்
நடந்ததற்கு அனைவரும்
வெட்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த விவகாரத்தை
அனைவரும் அரசியலாக்கி
வருகின்றனர். இந்த விவகாரத்தை
நீதிமன்றம் தாமாக முன்வந்து
விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
காவல்துறை வழக்குப்பதிவு
செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விவகாரம் போராட்டம்
நடத்துவதற்கு ஏற்புடையது அல்ல.
வெறும் விளம்பரத்திற்காக
போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்,”
என நீதிபதி கூறினார்.

இதையடுத்து, ”அரசியல் விளம்பரத்திற்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது,” எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுளார்.

அரசியல் ஆதாயங்களுக்காக வெற்று விளம்பர போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பு பேரிடியாக அமைந்துள்ளது.

  • பேனாக்காரன்

Leave a Reply